ஞாயிறு, 17 ஜூன், 2012

தே.மு.தி.க., டெபாசிட் வாங்கிய வயிதெரிச்சலில் விசாரணை

அதீத முயற்சிகள் எடுத்தும், இந்த பின்னடைவு ஏன் ஏற்பட்டது என்று, ஜெயலலிதா அதிருப்தி

சென்னை: முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்களுடன் போயஸ் தோட்டத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். புதுகோட்டை இடைத்தேர்தல் முடிவு குறித்து அப்போது விரிவாகப் பேசியதாகத் தெரிகிறது. நேற்று காலை 11.30 மணிக்கு போயஸ் தோட்டத்துக்கு அனைத்து அமைச்சர்களும் சென்றனர். உடன், புதுக்கோட்டை தொகுதியில் வெற்றிபெற்ற கார்த்திக் தொண்டைமானும் சென்றார்.
பகல் 1.30 மணி வரை நடந்த ஆலோசனையில், புதுக்கோட்டை தொகுதியில், எதிர்பார்த்த அளவு ஓட்டுப் பதிவு நடைபெறாததற்கான காரணங்களை ஜெயலலிதா கேட்டறிந்தார்.
விளக்கம்: மேலும், தே.மு.தி.க., டெபாசிட் வாங்கியதன் பின்னணி குறித்தும் விசாரித்தார். தே.மு.தி.க., வேட்பாளர் முஸ்லிம் மதத்தைத் சார்ந்தவர் என்பதால், புதுக்கோட்டை தொகுதியில் உள்ள முஸ்லிம்கள், அரசியல் கட்சிகளைக் கடந்து அவருக்கு வாக்களித்துள்ளனர். அ.தி.மு.க.,வுக்கு கிடைக்க வேண்டிய முஸ்லிம் ஒட்டுகள், எதிரணிக்கு சென்றதாக ஜெயலலிதாவிடம், அமைச்சர்கள் கூறியதாகத் தெரிகிறது. தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்ததால், அதன் முக்கிய நிர்வாகிகள் ஓட்டளிக்கவில்லை. ஆனால், அதன் ஆதரவாளர்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர், தே.மு.தி.க.,வுக்கு ஓட்டளித்துள்ளனர் என்றும் ஜெயலலிதாவிடம் அமைச்சர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அதிருப்தி: அமைச்சர்களின் பதிலில் ஜெயலலிதா முழுத் திருப்தியடைவில்லை. மூத்த அமைச்சர்கள் சிலரை, அவர் கடிந்து கொண்டார் என, அ.தி.மு.க., தரப்பில் கூறுகின்றனர். மேலும், கட்சிகளைக் கடந்து வாக்காளர்களை, ஓட்டளிக்க அழைத்து வர முடியவில்லை. தேர்தல் பிரசாரத்தில் அதீத முயற்சிகள் எடுத்தும், இந்த பின்னடைவு ஏன் ஏற்பட்டது என்று, ஜெயலலிதா அதிருப்தி அடைந்ததாகவும் தெரிகிறது. இதனால், சொந்த தொகுதி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, சென்னையிலேயே அமைச்சர்கள் இருப்பதாகம் கூறப்படுகிறது.

"கோட்டை' விட்டவர்கள் யார்? புதுக்கோட்டை நகரப்பகுதி ஓட்டுகள் தான் தே.மு.தி.க., டெபாசிட் வாங்க முக்கிய காரணமாக அமைந்தது, என மாவட்ட அ.தி.மு.க.வினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. நகரப்பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட, தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றிருந்த சில அமைச்சர்களும், சில முக்கிய கட்சியினரும், தங்கள் பகுதியில் இருந்த குறிப்பிட்ட வாக்காளர்களை மட்டும் கவனித்து விட்டு, மற்றவர்களை கவனிக்காமல் கம்பி நீட்டி விட்டனர். இந்த அதிருப்தியே, அ.தி.மு.க.,வுக்கு நகரப்பகுதியில் ஓட்டுகள் குறைய காரணமாகியுள்ளது. அதேபோல் நகரப்பகுதியில், அ.தி.மு.க.,வினர் சரியாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை என்பதும், தே.மு.தி.க.,வினர் நகரப்பகுதியில் அதிக ஓட்டுகள் வாங்க காரணமாக அமைந்துவிட்டது என்றும் மாவட்ட அ.தி.மு.க.,வினர் புலம்பத் துவங்கியுள்ளனர். குறிப்பாக, மாவட்ட அமைச்சர் சுப்ரமணியன், மாவட்ட செயலர் விஜயபாஸ்கர் ஆகியோர், தே.மு.தி.க., டெபாசிட் வாங்கியதால் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்

கருத்துகள் இல்லை: