ஞாயிறு, 17 ஜூன், 2012

அமைச்சர்கள் கார்டனில் கரகாட்டம்!சஷ்டாங்கமாக அம்மா காலில்

புதுக்கோட்டை எதிரொலி: ஒரு செட் அமைச்சர்கள் கார்டனில் கரகாட்டம்!

Viruvirupu
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் வாக்கு வித்தியாசம் 1 லட்சத்தை தொடாத காரணத்தால் ஜன்னி கண்ட நிலையில் உதறிக் கொண்டு இருந்த அமைச்சர்களிடம், கறார் விசாரணை துவங்கி விட்டது. அமைச்சர்கள் பலரும் நேர்த்திக்கடன் வைக்காத தெய்வமில்லை. அம்மா பதவியைப் பறிக்காவிட்டால், குலதெய்வம் கோவிலில் மொட்டை போடவுள்ளதாக கொங்குமண்டல அமைச்சர் ஒருவர் கூறினார்.
அந்த விதத்தில் அ.தி.மு.க. ஒரு முன்னோடிக் கட்சி என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும். மற்றைய கட்சிகளில் ஜெயிப்பவர்கள், பதவி கிடைத்தபின் மக்களை மொட்டையடிப்பார்கள். அ.தி.மு.க.-வில் பதவியை தக்க வைக்க அமைச்சர்களே மொட்டை போட வேண்டியுள்ளது.
சுருக்கமாக சொன்னால், நிஜமான சமத்துவக் கொள்கையை கடைப்பிடிக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க.தான்.
நேற்று மதியம் முதல் ரவுண்ட் விசாரணைக்காக ஒரு செட் அமைச்சர்கள் கார்டனுக்கு அழைக்கப்பட்டார்கள். புதுக்கோட்டையில் வெற்றி பெற்ற வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானும் தருவிக்கப்பட்டிருந்தார். புரட்சித் தலைவி வந்ததும் துவங்கியது திருவிழா.
என்னதான் நடந்தது? நம்ம அமைச்சர் ஒருவரின் வாயைக் கிளறிப் பார்த்தோம். சில விபரங்கள் கிடைத்தன.
முதலில் பாத தரிசனம் பெற்றுக் கொள்ளப்பட்டது. மன்னர் குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவரும், மண்ணெண்ணை வியாபாரியாக இருந்து அமைச்சரானவரும், சமமாக நடத்தப்பட்டு, சஷ்டாங்கமாக அம்மா காலில் விழுந்து எழுந்தார்கள். அந்த இறை வணக்கம் முடிந்ததும், கூட்டம் சூடு பிடித்தது.
இதய தெய்வம் இடியாக வெடித்தார். வாக்கு வித்தியாசம் 1 லட்சத்தை எட்டாமல் போனதற்கு காரணம் கேட்டார். “தே.மு.தி.க. வேட்பாளருக்கு டிபாசிட் கிடைக்கும்வரை, இருந்து பார்த்துவிட்டு வருகிறீர்களா?” என்றார் கோபமாக.

“தி.மு.க.காரர்களும் தே.மு.தி.க. வேட்பாளருக்கு ஓட்டு போட்டாங்கம்மா” என்றார் வாய் பொத்திய நிலையில் ஒருவர். “அவர் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர். அதால அவங்க ஜமாத் கூடி கட்சி வேறுபாடு இல்லாம ஓட்டு போட்டாங்க” என்றார், தமது நடுங்கும் காலோடு நாற்காலியையும் சேர்த்து ஆட வைத்துக் கொண்டிருந்த மற்றொருவர்.
“அப்படியானால், என்னோட வேட்பாளர் தேர்வு தப்பு என்று சொல்றிங்களா?” என்று நடமாடும் தெய்வம் சொல்ல,  வாய்திறந்த அமைச்சர்  கப்சிப். பாவம், வேட்பாளர் கார்த்தின் தொண்டைமானும் ‘கையது கொண்டு, வாயது பொத்தி’ இதையெல்லாம் பரிதாபமாக கேட்டுக் கொண்டிருந்தார்.
“உங்கள்ல சிலர் சரியா வேலை செய்யல என்று எனக்கு தெரியும். மத்தவங்களையும் விசாரிச்ச பிறகு கடுமையான நடவடிக்கை இருக்கும்” என்று சொல்லிதான் அனுப்பி வைத்திருக்கிறார். இன்று மற்றொரு செட் அமைச்சர்கள் கார்டனுக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.
மொட்டை போடும் வேண்டுதல்கள், இன்னமும் பென்டிங்கில்தான் உள்ளன

கருத்துகள் இல்லை: