வியாழன், 7 ஜூலை, 2011

கொழும்பிலிருக்கும் அனைத்து அரச கட்டிடங்களும் அகற்றப்படும் : பிரதமர் தி.மு. ஜயரத்ன!

பாதுகாப்புப் படைத் தலைமையகம் மட்டுமல்லாது, கொழும்பு நகரில் அமையப் பெற்றுள்ள அனைத்து அரச நிறுவனக் கட்டிடங்களும் அகற்றப்படும். இவ்வாறு அகற்றப்படுகின்ற கட்டிடங்களை புதுப்பொலிவுடன் கோட்டே பாராளுமன்றதுக்கு அருகாமையில் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது என்று பிரதமர் தி.மு. ஜயரத்ன நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

கொழும்பு நகரை மாற்றியமைத்து அதனை வர்த்தக மையமாக மாற்றியமைப்பதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நோக்கம் என்றும் இங்கு அவர் குறிப்பிட்டார்.பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, அமர்வின் போது பாதுகாப்புப் படைத் தலைமையகம் அமைச்சினால் கோரப்பட்டுள்ள 2000 கோடி ரூபாவுக்கான குறை நிரப்பு பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், பாதுகாப்புப் படைத் தலைமையகம் அமைப்பதற்கென்றே மேற்படி 2000 கோடி ரூபா குறை நிரப்பு பிரேரணையாக முன்வைக்கப்படுகின்றது.
காலி முகத்திடலில் அமையப் பெற்றுள்ள மேற்படி தலைமைக் கட்டிடத்தை அகற்றி அதனை வேறு இடத்துக்கு மாற்றுவதே இதன் நோக்கமாகும். மேற்படி கட்டிடமானது பிரித்தானியர்களின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடமாகும். எனவே இதனை அகற்றி புதிய கட்டிடம் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது இலங்கையை உலகம் திரும்பிப் பார்க்கின்றது. உல்லாசப் பிரயாணிகளின் வருகை அதிகரித்திருக்கின்றது. இது எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம். இவ்வாறு அதிகரித்த அளவில் உல்லாசப் பிரயாணிகள் இலங்கைக்கு வரும் பட்சத்தில் அவர்களது தங்குமிடம் உள்ளிட்ட வசதி வாய்ப்புக்கள் அதிகரித்திருக்கப்படல் வேண்டும்.
அந்த வகையில் இன்னும் புதிதாக 11 ஹோட்டல்களை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அது மட்டுமல்லாது, காலி முகத்திடல் கடல் சார்ந்த பகுதியாக அமைந்திருப்பதால் அங்கு ஹோட்டல்களை நிர்மாணிப்பதால் அதிகமான இலாபங்களை ஈட்ட முடியும்.
மேலும் மேற்படி பாதுகாப்புத் தலைமையகம் மட்டுமல்லாது, கொழும்பு நகரில் அமையப் பெற்றுள்ள அனைத்து அரச நிறுவனக் கட்டிடங்களையும் அகற்றிவிடுவதற்கும் அந்த கட்டிடங்களை புதுப்பொலிவுடன் பாராளுமன்றத்துக்கு அண்மையாக அமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் கொழும்பு நகரை வர்த்தக மையமாகவும் கோட்டேயை நிர்வாக பிரதேசமாகவும் மாற்றியமைப்பதே ஜனாதிபதியின் நோக்கமாகும்.
இந்நிலையில் தற்போது பாதுகாப்பு அமைச்சுக்காக 2000 கோடி ரூபாவை செலவிட்டாலும் எதிர்காலத்தில் அதிலும் பார்க்க அதிக வருமானத்தை ஈட்டுகின்ற திட்டம் அரசிடம் இருக்கின்றது என்றார்.

கருத்துகள் இல்லை: