திங்கள், 4 ஜூலை, 2011

அழிந்து போனவற்றை பற்றி திரும்பதிரும்ப பேசுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.

போரில் இழந்த உயிர்களைத்தவிர ஏனைய இழப்புக்களை ஜனாதிபதி மீட்டுத்தருவார்-யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் அமைச்சர் பசில் ராஜபக்­ஷ!

போரினால் இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்து இழப்புக்களையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ உங்களுக்கு மீட்டுத்தருவார். யாழ். மாவட்டம் இலங்கையின் முன்னணி மாவட்டமாக திகழ வைப்பதில் அரசு திடசங்கற்பம் பூண்டுள்ளது.இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்­ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி வேட்பாளர்களுக்கான ஒருநாள் செயலமர்வு நேற்று வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், உலகில் எந்த நாடும் மூன்றில் இரண்டு பங்கு அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைக்கவில்லை. ஆனால் எமது நாட்டில்தான் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இவ்வாறானதொரு ஆட்சியை அமைத்துள்ளது. இதற்கு நீங்கள் வழங்கிய ஆதரவே காரணம். நாம் இப்போது எதிர்கொள்ளவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் 23 தொகுதிகளிலும் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
இம் மாவட்டத்தில் சிறந்த பாடசாலைகள், சிறந்த சீமெந்து தொழிற்சாலை என்பன இருந்தன. யாழ்தேவி புகையிரதப் பயணம் என எவ்வளவோ வசதிகளுடன் இருந்த யாழ். மாவட்டம். 30 வருடகால யுத்தத்தினால் இவற்றையெல்லாம் இழந்து தவிக்கிறது.
இவையெல்லாம் எமது முன்னைய அரசாங்கங்களினால் வட பகுதிக்குச் செய்யப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆகும். வட பகுதி இழந்து போன அபிவிருத்தித் திட்டங்களை முழுமையாக நடைமுறைக்கு கொண்டு வரவுள்ளோம்.
இந்த 30 வருட காலத்தில் உலக நாடுகள் அபிவிருத்தி அடைந்த அளவிற்கு எமது நாடு அபிவிருத்தியடையவில்லை. இதற்குக் காரணம் 30 வருடகால யுத்தம் என்பதை நீங்கள் அறிவீர்கள். கல்விமான்களையும், சிறந்த விவசாயிகளையும், மீன்பிடியாளர்களையும் கொண்ட யாழ்.மாவட்டம் அவற்றை அத்துறையில் விருத்தி செய்ய முடியாதிருக்கின்றது. இதற்கான காரணத்தை மக்களாகிய நீங்கள் சிந்தித்ததுண்டா?
இரண்டு பரம்பரைகள் யுத்தத்தினால் தமது சுய முகத்தை இழந்து விட்டன. நாம் அழிந்து போனவற்றை பற்றி திரும்பதிரும்ப பேசுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.
இழந்து விட்ட சமாதானத்தை 50 ஆண்டுகளின் பின் உங்களுக்கு பெற்றுத்தந்தவர் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ­வே. சமாதானத்தை பெற்றுத்தந்தது மட்டுமல்ல கல்வி கற்பற்கு முக்கியத்துவம் கொடுத்து யாழ்ப்பாணத்தில் தொழில்நுட்பக் கல்லூரியொன்றை நவீன வசதிகளுடன் அமைத்து தந்ததோடு, யாழ். பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் ஒன்றையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றார்.
வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுத்தது போன்று வேறு எந்த மாகாணத்திற்கும் நாம் அபிவிருத்திப் பணிக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. வட மாகாணத்தில் மட்டும்தான் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. என்பதை நான் பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன். யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்து வருகின்றார்.
எனவே மக்களாகிய நீங்கள் அபிவிருத் தித்திட்டங்கள் குறித்து அறிந்திருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: