செவ்வாய், 5 ஜூலை, 2011

50 ஆயிரம் ரூபாவுக்கு சிறுமி விற்பனை - காத்தான்குடியில் சம்பவம்

50 ஆயிரம் ரூபாவிற்கு தந்தையினால் விலை பேசி விற்கப்பட்ட சிறுமியினை காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காங்கயனோடையில் வைத்து பட்டிப்பளைப் பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர்.

மாடு வாங்க வந்த காங்கயனோடையைச் சேர்ந்த நயுமுதீன் என்பவருக்கு பட்டிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காஞ்சிரங்குடாவைச் சேர்ந்த சுப்பிரமணியம் கோபாலப்பிள்ளை என்பவர் தனது 11 வயது குழந்தையை 50 ஆயிரம் ரூபாவிற்கு விலை பேசி ஞாயிற்றுக்கிழமை விற்றுள்ளார்.

குறித்த பணத்தை திங்கட்கிழமை வழங்குவதற்கான உடன்பாட்டில் நயுமுதீன் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார்.

சிறுமி அழுது சென்றதை அவதானித்த அயலவர் வவுணதீவில் இயங்கும் நவ கிராமிய சிறுவர் அமைப்பிற்கும் சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தருக்கும் கிராம சேவை அலுவலருக்கும் வழங்கிய தகவலை அடுத்து பட்டிப்பளை பொலிஸார் சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பட்டிப்பளை பொலிஸாருடன் நவ கிராமிய சிறுவர் அமைப்பு தலைவர் மா.பஞ்சலிங்கம், சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தர் எம்.வரதராஜன், கிராம சேவை உத்தியோகஸ்தர் கே.கிருஸ்ணப்பிள்ளை ஆகியோர் காங்கயனோடைக்கு திங்கட்கிழமை சென்று காங்கயனோடையில் நயுமுதீன் வீட்டில் இருந்து சிறுமியை மீட்டுள்ளனர்.

அத்துடன் விலைபேசி வாங்கிச் சென்ற நயுமுதீனையும் கைது செய்ததுடன் விற்கப்பட்ட சிறுமியின் தந்தையையும் பட்டிப்பளைப் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இன்று சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிப்பதுடன் விற்ற தந்தையையும் கொள்வனவு செய்த நயுமுதீனையும் இன்று பட்டிப்பளை பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

சிறுமியை விற்றவர் மூன்று திருமணம் செய்தவர் எனவும் மூன்றாவது திருமணத்தில் பிறந்த மூன்று பெண்பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளையே தற்போது விற்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

2006 ஆம் ஆண்டு மூன்றாவது பிள்ளை ஒன்றரை வயதாகவுள்ளபோது இவரால் விற்கப்பட்டுள்ளமை விசாரணையின் போது தெரிய வந்துள்ளது. இந்த பிள்ளையின் நிலமை என்ன என்பது குறித்தும் இப் பிள்ளையினை மீட்கும் நடவடிக்கையிலும் தற்போது பட்டிப்பளை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துகள் இல்லை: