வியாழன், 7 ஜூலை, 2011

சிவதம்பியின் மறைவு செய்தி அதிர்ச்சியை தந்தது: கலைஞர்

கார்த்திகேசு சிவதம்பியின் மறைவு செய்தி அதிர்ச்சியை தந்தது: கலைஞர்
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பியின் மறைவு செய்தி அதிர்ச்சியை தந்தது. 79 வயதான பேராசிரியர் சிவதம்பி கடந்த சில நாட்களாகவே உடல் நலிவுற்றிருந்து நேற்றிரவு மறைந்திருக்கிறார்.

பேராசிரியர் கா.சிவதம்பி தமிழ்மொழி, இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை கொண்டவர். திறனாய்வாளர், சமூக வியலாளர், அரசியல் சிந்தனையாளர், பல்துறை புலமை கொண்டவர்.

இங்கிலாந்து, பின்லாந்து, ஜெர்மனி என்று பல நாடுகளிலும் பணியாற்றி பெருமை சேர்த்தவர். எட்டாவது தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பேராசிரியர் சிவதம்பி திருப்பி அனுப்பப்பட்டார் என்ற அநீதிக்கு பரிகாரமாக 2000 ம் ஆண்டில் தி.மு.க. அரசு அவருக்கு திரு.வி.க. விருது வழங்கியது.

அண்மையில் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வரங்க குழுவிற்கு தலைமை பொறுப்பு வழங்கி தி.மு.க. அரசு அவரை சிறப்பித்தது. செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் இலங்கையில் இருந்து பெங்களூர் வரை விமானத்தில் வந்து அங்கிருந்து கோவைக்கு காரிலேயே வந்து சென்றார்.

மாநாடு முடிந்து அவர் விடைபெறும் முன் என் அறைக்கு தேடி வந்து கைகளைப் பிடித்து கண்ணீர் மல்க நன்றி சொன்னார். 70க்கும் மேற்பட்ட நூல்களையும், 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதி உலக அறிஞர்களால் போற்றப்பட்ட பேராசிரியர் சிவதம்பியின் மறைவு தமிழ் உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை பிரிந்து வருந்தும் அவரது துணைவியார் ரூபாவதி சிவதம்பிக்கும், அவரது மகள்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: