வெள்ளி, 8 ஜூலை, 2011

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் - 4

4. மனைவி பிள்ளையிடம் விடை பெற்றேன்!
புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் என்னைக் கைதுசெய்து கொண்டு செல்வதற்கு முன்னர், எனது புத்தகக் கடையைப் பூட்டித் திறப்பை தம்முடன் எடுத்துக் கொண்டனர்.

அவர்களில் ஜெயந்தன் என்பவன் சின்னவனைப் பார்த்து “இவருடைய சைக்கிளை என்ன செய்யிறது?” என வினவினான்.

அவர்களது பேச்சிலிருந்து என்னை அவர்கள், கடைசி முறையாகத்தன்னும் எனது மனைவி, பிள்ளையைப் பார்க்கவிடாது நேரடியாக கூட்டிச்செல்லப்போகிறார்கள் என்பது புரிந்தது. நான் எப்படியும் எனது மனைவியையும் பிள்ளையையும் கடைசியாக ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என ஆசைப்பட்டேன். நான் அவ்வாறு விரும்பியதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, என்னைக் கைது செய்தவர்கள் புலிகள்தான் என்பதை மனைவியிடம் தெரியப்படுத்துவதற்கு வாய்ப்பாக அமையலாம். மற்றது, நான் இறுதியாக வீட்டிற்கு செல்வதன் மூலம், என்னைக் காணவில்லையென அவர்கள் தேடி அலைவதை தவிர்க்கலாம். நான் வீட்டுத் தேவைக்கென கடைக்கு வரும்போது ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த பாண் உட்பட சில பொருட்கள் ஒரு கூடைக்குள் எனது சைக்கிளில் இருந்தது. எனவே நான் அதைச்சாட்டாக வைத்து, அவற்றை வீட்டில் கொடுத்துவிட்டுப் போவோம் என அவர்களிடம் கூறினேன்.

முதலில் அவர்கள் அதை முற்றாக ஏற்கவில்லை. வீட்டுக்குப் போனால், என்னைக் கைதுசெய்த விவரம் அறிந்து மனைவி, பிள்ளை, உறவினர்கள் அழுவார்கள் என சின்னவன் கூறினான். “நான் அப்படி எதுவும் நடக்காது. நீங்கள் தயங்காமல் என்னுடன் வாருங்கள், இந்தப் பொருட்களையும் சைக்கிளையும் எனது வீட்டில் வைத்துவிட்டுப் போவோம்” எனக் கூறினேன். எனது வலியுறுத்தலுக்குப் பின்னர், அவர்கள் ஒருவாறு ஒத்துக்கொண்டு, என்னுடன் எனது வீட்டுக்கு வரச் சம்மதித்தார்கள். ஆனால் எனது சைக்கிளை நான் ஓட்டிவர அவர்கள் அனுமதிக்கவில்லை. அவர்களில் ஒருவன் தனது சைக்கிளில் என்னை ஏற்றிக்கொள்ள, இன்னொருவன் எனது சைக்கிளை ஓட்டி வந்தான்.

அந்த மூவருடனும் நான் வீடு சென்றதும், எனது மனைவியும், மாமனாரும் ஒன்றும் புரியாது சற்று வியப்புடனும் அச்சத்துடனும் அவர்களையும் என்னையும் நோக்கினர். நான் நேராக மனைவியிடம் சென்று, அவர்கள் என்னைக் கைதுசெய்து அழைத்துச்செல்ல வந்திருக்கும் விடயத்தைக் கூறினேன்.

நான் கூறியதைக் கேட்டதும், மனைவி கண்கலங்கி அழத்தொடங்கினார். எனக்கு அவர்களால் பெரிதாக ஒன்றும் நடந்துவிடாது என்று சொல்லி, மனைவியைத் தேற்ற முயன்றேன். உண்மையில் எனக்கு அவர்கள் மீது துளியும் நம்பிக்கை இல்லையென்ற போதிலும், மனைவியைச் சமாதானப்படுத்துவதற்காக அவ்வாறு கூறினேன்.

இதற்கிடையில், சின்னவன் எனது வீட்டைச் சோதனையிடப்போவதாகக் கூறினான். நான் தாராளமாகச் சோதனையிடலாம் எனக் கூறினேன். அவன் எமது வீட்டில் இருந்த இரண்டு அறைகளில், எமது படுக்கை அறைக்குள் மட்டும் நேரடியாகப் புகுந்து, அங்குமிங்கும் நோட்டமிட்டுவிட்டு, அங்கிருந்த மேசையைத் திறந்து அதற்குள் இருந்த எனது நாட்குறிப்பை (டயறி) மட்டும் எடுத்துக்கொண்டான். வேறு ஒன்றும் அவனுக்குத் தேவையான பொருட்கள் அங்கு இருக்கவில்லைப்போலும்!

அந்த நாட்குறிப்பை எடுத்துக்கொண்டதையிட்டு நான் கவலையேதும் படவில்லை. ஏனெனில் எனக்கு தினசரி நாட்குறிப்பு எழுதும் பழக்கம் என்றும் இருந்ததில்லை. பெரும்பாலும் சிலருடைய முகவரிகளையும், சில கொடுக்கல் வாங்கல் கணக்குகளையும் மட்டும்தான், நான் அவற்றில் எழுதி வைப்பது வழக்கம். சின்னவன் எடுத்த அந்த நாட்குறிப்புப் புத்தகத்தில் அதுகூட இருக்கவில்லை. கல்வியங்காட்டிலுள்ள ஒரு நண்பரின் திருமணத்துக்குப் போனது மட்டுமே, அதில் எழுதப்பட்டிருந்த ஒரேயொரு விடயம்!

புலிகள் என்னைக் கைதுசெய்த சம்பவம், எனது மனைவியை பெரிதும் பாதித்ததிற்கு நிறையக் காரணங்கள் இருந்தன. என்னைக் கைதுசெய்வதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே எமக்கு நன்கு பரிச்சயமான பலர் – தில்லை, செல்வி, அன்ரன், மனோகரன் எனப் பலர் – புலிகளால் கைதுசெய்யப்பட்டு, அவர்கள் பற்றிய தகவல் ஏதும் தெரியாமல் இருந்தது. செல்வியைப் பற்றிய தகவல் அறிவதற்காக செல்வியின் திருமணமான தங்கை கைக்குழந்தையுடன் சேமமடுவிலிருந்து யாழ்ப்பாணம் வந்து, பல நாட்கள் தங்கியிருந்து, புலிகளின் முகாம்களுக்கும், செல்வி கல்வி கற்று வந்த யாழ்.பல்கலைக்கழகத்துக்கும் அலைந்து திரிந்தும் எவ்வித பயனும் இல்லாமல் வீடு திரும்பியிருந்தார். அவர் எமது வீட்டுக்கும் வந்திருந்தபடியால், எனது மனைவிக்கும் இந்த விடயங்கள் யாவும் நன்கு தெரிந்திருந்தது. எனவே எனது நிலையும் அதுவாகவே போய்விடுமோ என எனது மனைவி அஞ்சியதில் நியாயமிருந்தது.

மனைவி பயப்பட்டதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. நான் புலிகளின் இவ்வாறான கைது நடவடிக்கைகளின் போது அடிக்கடி ஒரு விடயத்தை எனது மனைவிக்குக் கூறுவதுண்டு. அதாவது, “புலிகள் பெரும்பாலும் என்னைப் பிடிக்கமாட்டாங்கள். அப்படியில்லாமல் அவங்கள் என்னைப் பிடித்தாங்கள் என்றால், பிறகு நான் ஒருக்காலும் திரும்பி வரமாட்டேன்” என நான் கூறுவதுண்டு. எனவே இப்பொழுது அவர்கள் என்னைப் பிடிக்க வந்தபடியால், எனது வாழ்வும் தனது வாழ்வும் அத்துடன் முடிந்துவிடப் போகிறது என மனைவி கவலையடைந்தார்.

என்னைக் கைதுசெய்யமாட்டார்கள் என நான் தைரியத்துடன் கூறிவந்ததிற்கு ஒரு காரணம் இருந்தது. அதில் ஒன்று, நான் எனது 17வது வயதில் இருந்து எனது மக்களுக்காக, எனது சொந்த நலன்களை சுகங்களைத் துறந்து உழைத்து வந்திருக்கிறேன். ஆரம்பத்தில் மாணவர் பிரச்சினைக்கான போராட்டங்களிலும், பின்னர் உயர்சாதி வெறியர்களுக்கெதிரான தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்களிலும், பின்னர் வன்னிப் பிரதேசத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக நடைபெற்ற பேராட்டங்களிலும் நான் தீவிர பங்கெடுத்து வந்திருக்கின்றேன்.

பின்னர், 1970களில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீவிரமடைந்து, அரசியல்ரீதியான போராட்டங்கள் ஆரம்பமான போது, அதிலும் பங்குபற்றியுள்ளேன். தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்ட இயக்கங்கள் ஆரம்பமாவதற்கு முன்னரே எமது கட்சியான இலங்கை மார்க்சிச – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி, ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’ என்ற வெகுஜன அமைப்பை உருவாக்கிய போது, அதில் முன்னணி நபர்களில் ஒருவராகச் செயல்பட்டுள்ளேன். நான் பங்குபற்றிய இந்தப் போராட்டங்களின் போது, சில தடவைகள் பொலிசாரால் தாக்கப்பட்டதுடன், பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டும் உள்ளேன். நான் பின்பற்றிய கொள்கைகள், நடைமுறைகள் காரணமாக, பழமைவாதப் பிடிப்புள்ள எனது உறவினர்கள் சிலரால் நீணடகாலம் ஒதுக்கி வைக்கட்டும் வந்திருக்கிறேன்.

இவை தவிர, பெரும்பாலான தமிழ் ஆயுதப்போராட்ட இயக்கங்கள் ஆரம்பம் முதலே என்னுடன் நெருங்கிய உறவுகளைப் பேணிவந்துள்ளன. அந்த நேரத்தில் இந்த இயக்கங்கள், தமது பிரச்சார ஏடுகளை அச்சிடுவதற்கு யாழ்ப்பாணத்திலுள்ள எந்தவொரு அச்சகமும் முன்வரவில்லை. அதற்குக் காரணம், இந்த இயக்கங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியை எதிர்த்து தமது அரசியலை ஆரம்பித்ததால், அவர்களது எந்தவொரு பிரசுரத்தையும் அச்சிட்டுக் கொடுக்கக்கூடாது என, கூட்டணியின் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் அச்சகங்கள் (எம்மைத்தவிர) எல்லாவற்றையும் தடுத்திருந்தார்.

எனவே, அமிர்தலிங்கத்தின் வேண்டுகோளுக்கோ மிரட்டலுக்கு அடிபணியாத எமது ‘நொதேர்ண் பிறின்ரேர்ஸ்’ அச்சகத்தை நாடி, அநேகமான இயக்கங்கள் உதவி கேட்டு வந்தன. பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் ஒன்றுபட்டு இருந்த காலத்தில் ஆரம்பித்த ‘உணர்வு’ பத்திரிகை, ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்க மாணவர் அமைப்பின் ‘ஈழ மாணவர் குரல்’, இப்பொழுது சிறையில் இருக்கும் தேவதாசின் ‘பலிபீடம்’, ‘உதயசூரியன்’, ‘சிம்மக்குரல்’, எமது கட்சியின் ‘போராளி’ என பல பத்திரிகைகளை நான் அச்சிட்டேன். அத்துடன் இயக்கங்களின் பிரசாரப் பிரசுரங்கள், யாழ்.பல்கலைக்கழகத்தில் செயல்பட்ட புலிகளின் மறுமலர்ச்சிக்கழக வெளியீடுகள் எனப் பலவற்றையும் அச்சிட்டேன். இவற்றை அச்சிட்டதால், பல தடவைகள் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகளுக்கும் உள்படுத்தப்பட்டேன்.

அந்த நேரத்தில் என்னுடன் நல்ல உறவுகளைப் பேணியதில் புலிகளின் இயக்கமும் ஒன்று. அந்த இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் தவிர்ந்த ஏனைய முன்னணி உறுப்பினர்களான மாத்தையா, அன்ரன் பாலசிங்கம், திலீபன், கிட்டு, மூர்த்தி (அப்போதைய அரசியல் பொறுப்பாளர் – தமிழ்செல்வனின் அண்ணன்), யோகி, லோறன்ஸ் திலகர், சந்தோசம், புதுவை இரத்தினதுரை, பண்டிதர் என பலரும் என்னுடன் பழகி வந்தனர்.

இந்திய அமைதிப்படை காலத்தில், யாழ்.பல்கலைக்கழகத்துக்கு முன்னால் அமைந்திருந்த எனது புத்தகக்கடைக்கு அருகாமையில் இருந்த புலிகளின் இரண்டு மாடித் தலைமைக் காரியாலயத்தில், ஒரு கட்டத்தில் மேல்மாடியில் இந்திய இராணுவ அதிகாரியின் காரியாலயமும், கீழ்த்தளத்தில் பலிகளின் காரியாலயமும் செயற்பட்டன. இரு பகுதியினரும் எனது கடையில்தான் கொழும்பு தினசரிகளை வாங்குவது வழமை. பத்திரிகைப் பிரியரான அன்ரன் பாலசிங்கம் (ஆரம்பத்தில் பாலசிங்கம் வீரகேசரி பத்திரிகையில் வேலை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது), கொழும்பிலிருந்து பத்திரிகைகளைக் கொண்டுவரும் ‘யாழ்தேவி’ புகையிரதம் யாழ்ப்பாணம் வந்துசேரும் பிற்பகல் 2 மணி அளவில் எனது கடையில் வந்து காவல் இருந்து பத்திரிகைகளை தானே எடுத்துச் செல்வது வழக்கம். அந்த நேரத்தில் அவர் என்னுடன் பொதுவாக உரையாடுவார். அதன்காரணமாக அவருடன் எனக்கு நன்கு அறிமுகம் ஏற்பட்டிருந்தது.

எல்லோருடனும் நான் பழகினாலும், என்னுடைய கொள்கைகள் மிகவும் வெளிப்படையானவை. நான் எப்பொழுதும் மார்க்சிச – லெனினிச நிலைப்பாட்டிலிருந்தோ, கட்சி நிலைப்பாட்டிலிருந்தோ என்னை விலகாமல் பார்த்துக் கொண்டேன். தமிழ் மக்களின் பிரச்சினை தீவிரமடைந்து, ஆயுதப் போராட்டமாக அது வெடித்த பின்பு, எமது கட்சியிலிருந்த பலர் – முன்னணித் தோழர்கள் உட்பட - பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து வேலைசெய்ய ஆரம்பித்தனர். எமது கட்சியால் உருவாக்கப்பட்ட ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’ என்ற அமைப்புக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட சிலர், அதன் அடிப்படைக் கொள்கையான ‘ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் பகுதிகளுக்கு சுயாட்சி’ என்பதைக் கைவிட்டு, பிற்போக்கானதும், அடைய முடியாததுமான ‘தமிழ ஈழம்’ என்ற கொள்கைக்கு மாறியதுடன், முன்னணியின் பெயரையும் ‘தமிழீழ தேசிய விடுதலை முன்னணி’ (NLFT) என மாற்றிக் கொண்டனர் அதன்காரணமாக அந்த இயக்கத்துடனும் நாம் அரசியல் ரீதியான தொடர்புகளைத் துண்டித்திருந்தோம். ஆனால் தனிப்பட்ட முறையில் அனைத்து இயக்க உறுப்பினர்களுடனும் நட்புடன் உறவாடி வந்தோம்.

எமது கட்சியிலிருந்த மிகச்சிலரே இவ்வாறு நிலை தளும்பாது எமது கொள்கையில் உறுதியாக நின்றனர். இந்தப் போராட்டம் பிற்போக்கானது, ஒருபோதும் வெற்றி பெறாது என்ற அசையாத நிலைப்பாட்டில் நாம் நின்றோம். வரலாறு அதை இன்று தெளிவாக நிரூபித்துள்ளதையிட்டு, நாம் பெருமையும் மகிழ்ச்சியுமடையாமல் இருக்க முடியாது.

எனவே, புலிகள் எல்லா இயக்கங்களையும் ஒன்றன் பின் ஒன்றாகத் தடைசெய்து, அந்த இயக்கங்களின் உறுப்பினர்களை ஒன்றில் கொன்று குவித்தோ அல்லது கைது செய்தோ அராஜகம் விளைவித்த போது, அவர்கள் தமக்கு போட்டி எனக்கருதிய எந்தவொரு இயக்கத்திலும் அங்கம் வகிக்காத என் மீது கை வைப்பார்கள் என நான் நினைத்திருக்கவில்லை. அந்தத் துணிச்சலில்தான், அவர்கள் என்னைத்தேடி ஒருபோதம் வரமாட்டார்கள் என  எனது மனைவிக்கு நம்பிக்கை ஊட்டி வந்தேன்.

ஆனால் அவர்கள் என்னையே தேடி வந்து கைதுசெய்த போது, ஜேர்மனியில் ஹிட்லர் தலைமையிலான நாஜிகள் எவ்வாறு முதலில் கம்யூனிஸ்ட்டுகளில் ஆரம்பித்து, பின்னர் ஜனநாயகவாதிகள், யூதர்கள் விரிந்து சென்று, கடைசியில் தனது சொந்த ஜேர்மன் மக்கள் மீதே கை வைத்தார்களோ, அதேபோல புலிகள் மாற்று தமிழ் இயக்கங்கள் என்று ஆரம்பித்து, ஆயுதம் ஏந்தாத, அதுவும் அரசியலிலிருந்து சற்று ஒதுங்கியிருந்த என் போன்றவர்கள் மீதும் கையை வைத்தனர்.

அவர்களது கைது எனக்கு ஒன்றைத் தெளிவாக உணர்த்தியது. அதாவது பாசிசவாதிகள் தங்கள் நோக்கங்களை அடைவதற்கு மக்களை இலேசாக ஈர்க்கும் வௌ;வேறு இன, மொழி, மத உணர்வுகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால் குணாம்சத்தைப் பொறுத்தவரையில் எல்லா நாட்டுப் பாசிஸ்ட்டுகளும் ஒரே இனம்தான் என்பதே அது.

மனைவி அழுது குழற அவர்களுடன் புறப்பட்டேன். புறப்படும்போது, உடுத்திருந்த உடுப்புடன், எனக்கு தொய்வு கடுமையாகும் போது நான் வழக்கமாக அணியும் கம்பளி சுவெற்றரையும், சில மருந்துக் குளிகைகளையும் மட்டும் எடுத்துக் கொண்டேன்.

தொடரும்

கருத்துகள் இல்லை: