ஞாயிறு, 3 ஜூலை, 2011

சாய்பாபா தனி அறையில் திடீர் ரெய்டு 77 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகை பறிமுதல்

புட்டபர்த்தி : புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாய்பாபாவின் தனி அறையில் அனந்தபூர் மாவட்ட இணை கலெக்டர் நேற்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது ரூ.76.89 லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி, வைர ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து அறக்கட்டளை உறுப்பினர்களிடம் இன்று தீவிர விசாரணை நடக்கிறது. உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த சத்ய சாய்பாபா, கடந்த ஏப்ரல் 24-ம் தேதி மரணம் அடைந்தார். அவர் தங்கியிருந்த யஜுர் மந்திர் அறை கடந்த மாதம் 17-ம் தேதி அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் ஸ்டேட் வங்கி அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. சாய்பாபாவின் பிரத்யேக பெட்டக அறையின் சாவி வங்கி லாக்கரில் இருந்து கொண்டு வரப்பட்டு திறக்கப்பட்டது. அந்த அறையில் 98 கிலோ தங்கம், 307 கிலோ வெள்ளி, ரூ.12 கோடி ரொக்கம் இருந்தது. அவை ஸ்டேட் பாங்க்கில் டெபாசிட் செய்யப்பட்டது. இரண்டு நாள் கழித்து புட்டபர்த்தியில் இருந்து பெங்களூர் சென்ற காரை போலீசார் சோதனை செய்தனர். அதில் ரூ.25 லட்சம் கடத்தி செல்லப்பட்டது தெரிந்தது. இதுதொடர்பாக அறக்கட்டளை உறுப்பினர் ஒருவரின் கார் டிரைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அடுத்த நாளே பஸ்சில் கடத்தப்பட்ட ரூ.10 கோடி பிடிபட்டது. சாய்பாபா அறையில் இருந்து பணம் கடத்தப்படுவதாக தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் கைப்பற்றிய பணத்துக்கும் சாய்பாபா அறக்கட்டளைக்கும் எந்த தொடர்பும் இல்லை என அறக்கட்டளை உறுப்பினர்கள் பேட்டி அளித்தனர். இந்நிலையில், பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாய்பாபாவின் தனி அறையில் அனந்தபூர் மாவட்ட இணை கலெக்டர் அனிதா ராமச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
இதுகுறித்து கலெக்டர் அனிதா ராமச்சந்திரன் கூறியதாவது:சாய்பாபாவின் யஜுர் மந்திர் கட்டிடத்தில் ஏற்கனவே சோதனை செய்யப்பட்ட சாய்பாபா அறையை தவிர மற்ற நான்கு அறைகளில் நேற்று காலை முதல் மாலை வரை சோதனை நடத்தினோம். அவற்றில் தங்க நகைகள், வெள்ளி ஆபரணங்கள், ஒரு வைர மோதிரம், விலையுயர்ந்த வாட்ச்கள், பாபாவின் பட்டாடைகள், பட்டுப் புடவைகள், பேனாக்கள் இருந்தன. இவற்றில் 906 கிராம் தங்கத் தாலிகள், 116 கிலோ வெள்ளி ஆபரணங்கள், ரூ.3 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரம் ஆகியவையும் அடங்கும். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.76.89 லட்சம் என மதிப்பிட்டுள்ளோம். இவ்வாறு கலெக்டர் அனிதா கூறினார். யஜுர் மந்திர் கட்டிடத்தில் ஏற்கனவே நடந்த சோதனையின்போது இந்த நகைகள் பற்றி அறக்கட்டளை உறுப்பினர்கள் ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என அனந்தபூர் மாவட்ட அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சாய்பாபா ஆசிரமத்தில் இருக்கும் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது என பக்தர்கள் மத்தியில் ஏற்கனவே வதந்தி பரவி வரும் நிலையில், யஜுர் மந்திர் கட்டிடத்தில் ரூ.77 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சாய்பாபா அறக்கட்டளை உறுப்பினர்களிடம் அனந்தபூர் மாவட்ட அதிகாரிகள் இன்று விசாரணை நடத்துகின்றனர்.

கருத்துகள் இல்லை: