குவார்ட்டர் கட்டிங் என்று படத்திற்குப் பெயர் வைத்த பின்னர் கேளிக்கை வரி விலக்கு சலுகையையும் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அந்தத் தலைப்புக்கு முன்னால் பெரிதாக 'வ' என்ற எழுத்தைப் போட்டு சமாளித்துள்ளனர் காயத்ரி-புஷ்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள குவார்ட்டர் கட்டிங் படக் குழுவினர்.
இப்படத்தை தயாரித்திருப்பது தயாநிதி அழகிரி . எனவே பெரிய அளவில் விதிமுறைகள் பார்க்கப்படாது என படக் குழுவினர் நினைத்திருக்கலாம். இருந்தாலும் குற்றம் சாட்டி விரல்கள் நீண்டு விடுமே என்ற யோசனையில் குவார்ட்டர் கட்டிங் டைட்டிலுக்கு மேலே 'வ' என்ற எழுத்தைப் போட்டு விட்டனர்.
அதென்ன வித்தியாசமான தலைப்பாக இருக்கிறதே என்று இயக்குநர்களான புஷ்கர்-காயத்ரியிடம் கேட்டால்,
'வ' என்பதற்கு என்ன அர்த்தம் என பலரும் யோசித்திருப்பீர்கள். தமிழ் அகராதிப்படி 'வ' என்றால், ஒன்றின் கீழ் நான்கு என்று அர்த்தம். அதாவது கால் பங்கு என்று பொருள். இதை ஆங்கிலத்தில் சொன்னால் குவார்ட்டர் தானே, அதான் இந்த படத்திற்கு 'வ' என்று தலைப்பு வைத்துவிட்டோம் என்றனர்.
'வ' என்பது தமிழில் கால் என்று பொருள் வரும் வார்த்தைதானா என்பதை தமிழறிஞர்கள்தான் விளக்க வேண்டும்.
கேளிக்கை வரி விலக்கு என்ற தமிழக அரசின் சலுகைக்கு ஆரம்பத்தில் நல்ல மரியாதை இருந்தது. உண்மையான தமிழ்ப் பெயர்களை நல்ல பெயர்களை வைக்க ஆரம்பித்தனர் தயாரிப்பாளர்கள். ஆனால் இப்போது பழைய குருடி கதவைத் திறடி கதையாகியுள்ளது.
போடா போடி என்று ஒரு படம், தில்லாலங்கடி என்று ஒரு படம், இப்போது குவார்ட்டர் கட்டிங் என்று நன்றாக பிரபலப்படுத்தி விட்டு 'வ' என்ற ஒரு எழுத்தைப் போட்டு ஒரு படம் என தமிழ் சினிமா தன் போக்கில் போய்க் கொண்டுதான் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக