திங்கள், 6 செப்டம்பர், 2010

பிரான்ஸில் ஜிப்ஸி இனத்தோரின் வீடுகள் உடைக்கப்பட்டன.


சிறுபான்மை மக்களின் உரிமை கோரி
பிரான்ஸ் அரசுக்கெதிராக ஐரோப்பிய நாடுகளில  ஆர்ப்பாட்டம்
பிரான்ஸில் ஆயிரக்கணக்கான ஜிப்ஸி இனத்தோர் கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறுபான்மையினத்தோரின் உரிமைகளைப் பேணுமாறும், தங்களுக்கு நஷ்டஈடுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கோஷமிட்டனர். பிரான்ஸில் ஜிப்ஸி இனத்தோரின் வீடுகள் உடைக்கப்பட்டன. பலர் பிரான்ஸை விட்டு நாடுகடத்தப்பட்டனர். இன்னும் சிலர் வேலைகளிலிருந்து நீக்கப்பட்டனர். இவற்றுக்கு மேலாக குடியேற்றவாசிகளைக் கட்டுப்படுத்தவும் ஜிப்ஸி இனத்தோருக்கு எதிராகவும் பிரான்ஸ் பாராளுமன்றத்தில் சட்டமியற்றப்பட்டது.
இவைகளை எதிர்த்தே சனிக்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளிலும் பிரான்ஸ் அரசாங்கத்தால் ஜிப்ஸி இனத்தோர் நடத்தப்படும் முறைகளுக்கெதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஐரோப்பிய நாடுகளில் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்களில் ஒரு இலட்சம் பேர் கலந்து கொண்டனர். சிறுபான்மையினரின் உரிமைகள் மனித உரிமைகளை பிரான்ஸ் பாதுகாக்க வேண்டுமென்றும், மதித்து நடக்க வேண்டுமெனவும் ஆர்ப்பாட்ட க்காரர்கள் கோஷமிட்டனர்.
பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளிலுள்ள பிரான்ஸ் தூதுவர்களை வெளியேற்றும்படியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டிக் கொண்டனர். பிரான்ஸ் தலைநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாத்திரம் பத்தா யிரம் பேர் கலந்து கொண்டனர். பிரான்ஸின் முக்கிய நகரங்கள் நான்கில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. வர்த்தக அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள், பொது அமைப்புகள் என்பன ஜிப்ஸி இனத்தோரின் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு வழங்கின. உருவப் படங்களை தாங்கிய அட்டைகளில் சர்கோஸி பெரும் குற்றவாளி எனப் பொறிக்கப்பட்டிருந்தது.
பிரான்ஸ் உள்துறை அமைச்சர் இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில் பொதுமக்களை இடையூறு செய்யும் வகையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டம் சட்ட விரோதமானது. நாட்டையும், சட்டத்தையும் பாதுகாப்பதில் பிரான்ஸ் உறுதியாகச் செயற்படும். கடுமையான சட்டங்கள் குற்றச் செயல்களைக் குறைக்கும் என்ற நம்பிக்கையிலே இயற்றப்படுவதாகக் கூறினார். அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் 77 ஆயிரம் பேர் வரையே கலந்துகொண்டதாகவும் ஒரு இலட்சம் பேர் என மிகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பிரான்ஸில் 15 ஆயிரம் ஜிப்ஸி இனத்தோர் உள்ளனர். இவர்கள் பல்கேரியா, இத்தாலி போன்ற நாடுகளுக்கு நாடுகடத்தப்பட்டனர். சட்டவிரோமமாக பிரான்ஸிற்குள் நுழைந்ததால் சர்கோஸியின் அரசாங்கம் இவர்களுக்கெதிராக கடுமையான சட்டங்களை இயற்றியது. இதனால் உலகளவில் இவ்விடயம் பிரபல்யமானமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை: