வெள்ளி, 10 செப்டம்பர், 2010

58 ஆயிரம் கோடி தானியம் வீண் : விசாரிக்க பா.ஜ., கோரிக்கை

புதுடில்லி : "அரசு குடோனில் வைக்கப்பட்டு கெட்டுப்போன 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு தானிய பொருட்கள் குறித்து பார்லிமென்ட் குழு விசாரணை நடத்த வேண்டும்' என, பாரதிய ஜனதா கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பா.ஜ., தலைவர்களான நவ்ஜோத் சித்து, கிரித் சோமய்யா, பிரகாஷ் ஜாவேத்கர் ஆகியோர், குரு ஷேத்திரா, கர்னல் மற்றும் அம்பாலா பகுதிகளில் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் குடோன்களில் சோதனை நடத்தினர். அப்போது, லட்சக்கணக்கான கோதுமை மூட்டைகள் எந்தவிதமான பாதுகாப்புமின்றி வெட்ட வெளியில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அரியானா மாநிலத்தில் உள்ள குடோன்களில் மட்டும் 180 லட்சம் டன் உணவு தானியப் பொருட்கள் அவ்வாறு வெளியே வைக்கப்பட்டிருந்தன. இதன் மூலம் 58 ஆயிரம் கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தான் வீணாகியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, பார்லிமென்ட் குழு விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு பா.ஜ., செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: