செவ்வாய், 7 செப்டம்பர், 2010

ஈரான் பெண்ணுக்கு 99 கசையடி கொடுத்து தண்டனை-விரைவில் கல்லால் அடித்து மரண தண்டனை

ஈரானைச் சேர்ந்த சகினே முகம்மதி அஷ்டியானி என்ற பெண்ணுக்கு 99 கசையடிகள் கொடுத்து தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் அவரை பொதுமக்கள் மத்தியில் நிறுத்தி கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இதனால் உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அஷ்டியானிக்கு வயது 40. இரண்டு குழந்தைகளின் தாய். இவருக்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு கல்லால் அடித்துக் கொலை செய்ய தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், இவரது முகத்தை வெளியில் தெரியும்படி புகைப்படம் வெளியானதற்காக 99 கசையடி தண்டனையும் கொடுக்கப்பட்டது.

கல்லால் அடித்துக் கொல்லும் தீர்ப்புக்கு உலக நாடுகளிலிருந்து கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன. மேலும் ரம்ஜான் மாதத்தின்போது இவ்வாறு செய்வதற்கு இஸ்லாமிய நாடுகளிலும் கூட கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து தண்டனையை நிறுத்தி வைத்தது ஈரான் இஸ்லாமிய கோர்ட்.

இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகை முடிந்த பிறகு அஷ்டியானிக்கு கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. இதை அவரது வழக்கறிஞர் ஜாவித் ஹட்டன் கியான் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அஷ்டியானிக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்படலாம் என நானும், அவரது இரு குழந்தைகளும் அஞ்சுகிறோம்.

இன்னும் ரம்ஜானுக்கு 3 நாட்களே உள்ளதால் ரம்ஜான் முடிந்தவுடன் தண்டனை நிறைவேற்றப்படும் என அச்சமாக உள்ளது என்றார்.

99 கசையடிகள் தரப்பட்டன:

இதற்கிடையே, இன்னொரு தண்டனையான 99 கசையடிகள் தரும் தண்டனையை நிறைவேற்றி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை ஒரு வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார். இன்னொருவர் சரியாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்த ஒரு பெண்தான், அஷ்டியானிக்கு கசையடி தண்டனை கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: