வெள்ளி, 10 செப்டம்பர், 2010

பாராளுமன்றத்தில் சரவணபவான்- டக்ளஸ் : கருத்து மோதல

விவாதத்தில் தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. ஈஸ்வரபாதம் சரவணபவான் உரையாற்றிய போது அமைச்சர் டக்ளஸ் அதனை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தார். இதன் ஒருகட்டத்தில் சரவணபவான், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையைக் கொண்ட டக்ளஸ் தேவானந்தாவால் இந்த அரசியலமைப்புத் திருத்தத்தைத் தடுத்து நிறுத்த முடியுமா?

இந்தத் திருத்தத்தின் மூலம் பொலிஸ், காணி அதிகாரங்கள் பறிபோகின்றனவே என டக்ளஸை நோக்கிக் கேட்டார். இதற்கு பதிலளித்த டக்ளஸ், அதனை அரசுடன் பேசித் தீர்த்துக்கொள்ள முடியும் என்று கூறிவிட்டு மேலும் சில கருத்துகளைக் கூறினார். இதனை எதிர்த்த சரவணபவான் நீங்கள் தவறான பதில்களை வழங்குகின்றீர்கள் என்றார். இல்லையில்லை நீங்கள் தான் மக்களைத் தவறான பாதைக்குக் கொண்டு செல்கின்றீர்கள் என்று டக்ளஸ் கூறினார்.

தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் உரையாற்றுகையில், வடக்கில் அமைச்சர்களை தெரிந்தவர்களுக்குத்தான் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன என்று குற்றம்சாட்டினார். இதனை எதிர்த்த அமைச்சர் டக்ளஸ், நீங்கள் யாரைக் குறிப்பிடுகின்றீர்கள் என்பதைச் சரியான தகவலுடன் கூறவேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த சுரேஷ், வடக்கில் நீங்கள் மட்டும் அமைச்சரல்ல. மன்னாரில் போய்க் கேட்டால் அங்குள்ள அமைச்சர் பற்றி கதை கதையாய்த் தெரியவரும் என்றார். இதற்கு டக்ளஸ் ஏதோ கூற முற்பட்ட போது அமைச்சரே எனது தொப்பி உங்களுக்கு அளவென்றால் நீங்கள் போட்டுக் கொள்ளுங்கள் என்று சுரேஷ் கூறினார். நீங்கள் எனக்கு அளவாகத்தானே தொப்பியைத் தருவீர்கள் என்று டக்ளஸ் கூறினார்.

இங்கு மேர்வின் சில்வா உரையாற்றுகையில், பாராளுமன்ற அறைகளில் யாரையும் தாம்பத்யம் நடத்த அனுமதிக்க முடியாது. வி சர் நாயை அடித்துக் கொன்றால் யாரும் நீதிமன்றம் போகமாட்டார்கள். மனித உரிமை அமைப்புகளுக்கும் செல்லமாட்டார்கள். வி சர் நாய் போல் சிலர் (சரத் பொன்சேகாவை காட்டி) இங்குள்ளனர் என்று கூறினார். அத்துடன் தமிழ் மக்கள் எமது சொந்தக்காரர்கள். மன்னர் காலத்திலேயே எமக்கும் தமிழர்களுக்குமிடையே திருமண உறவுகள் உள்ளன. அதனை நாம் தமிழர், சிங்களவர் என்று வேறுபடாமல் ஒரே கோப்பையில் சாப்பிடவேண்டும் எனக் கூறினார்.

வழக்கமாகவே தனது உரைகளில் தமிழ் மக்கள் மீது துவேசத்தைக் காட்டும் எல்லாவலமேதானந்த தேரர் எம்.பி. இம்முறை தமிழ் மக்களைப் புகழ்ந்துதள்ளினார். வன்னியில் தான் சில இடங்களுக்கு தொல்லியில் ஆய்வுக்காகச் சென்ற போது புராதன பௌத்த விகாரைகள் உள்ள இடத்தில் தமிழ் மக்கள் குடியிருந்ததாகவும் தான் இதனைச் சுட்டிக்காட்டியபோது அவர்கள் உடனடியாக அவ்விடத்தை விட்டுத்தர முன்வந்ததாகவும் இதன் மூலம் விட்டுக் கொடுப்பதில் தமிழ் மக்கள் சிறந்தவர்களாக உள்ளதைத் தான் கண்டுகொண்டதாகவும் கூறினார்.

கருத்துகள் இல்லை: