சனி, 11 செப்டம்பர், 2010

புலிகளின் அழிவைக் கூட நம்பமுடியாமல் திண்டாடும் ஒரு கையறுந்த நிலையை

மிகைப்படுத்தப்பட்ட வரலாறில் தொலைந்து விட்ட வீரம் கையேந்தி நிற்கும் தமிழ்ப் பாசிசம்.- கற்சுறாஈழத்திலிருந்து வெளிவரும் புலிகளது பத்திரிகைகளாக இருந்தாலும் சரி கொழும்பிலிருந்து வரும் தமிழ்ப் பத்திரிகைகளாக இருந்தாலும் சரி புலம் பெயர்ந்த பத்திரிகைகள் என்றாலும் சரி தமிழர்களது வீரம் பற்றியும் தமிழினம் பற்றிய ஒரு மாயைத்தனமான மிகைப்படுத்திய கற்பனைக்கூடான எழுத்துமுறையை வளர்த்துக்கொண்டு வந்தது. தமிழர்கள் மீதான புனிதக் கதையாடலாக அது கொண்டிருந்தது. அது ஒவ்வொரு தமிழ் மனங்களிலும் மெல்ல மெல்ல இனவாதத்தைத் தூண்டி விட்டுக் கொண்டு வந்ததை யாரும் கணக்கிடவில்லை.
ஈழத்தில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் மாற்றுக் கருத்துக்கொண்ட பத்திரிகைகள் தொடக்கம் ஜனரஞ்சகப் பத்திரிகைகள் வரை தடைசெய்யப்பட்ட காலங்கள் இருந்தன. புலிகளது செய்தித் தாள்களும் புலிகளது சஞ்சிகைகளுமே மக்களின் வாசிப்புக்குக் கிடைக்கப்பெற்றன. அவற்றில் வருகின்ற புதினங்கள் மட்டுமே உண்மையாக இருந்தது அவர்களுக்கு. அதற்கு இயல்பாகப் பழக்கப்பட்ட மக்கள் புலம்பெயர்ந்த பின்னும் வெளியில் கிடைக்கக்கூடிய எவ்வித செய்திகளையும் உள்வாங்க விருப்பமற்றுப் போனார்கள். புலிகள் மீதோ அல்லது ஈழவிடுதலைப் போராட்டம் மீதோ சிறிய விமர்சனத்தை முன்வைப்பவர்கள் அவர்களின் அறிவுப்படி துரோகிகளது சார்பிலிருந்து வருபவையாக முதல்வார்த்தையிலேயே நிராகரிக்கப்பட்டன. ஆதலினால் மிகக் குறைந்தளவு வெளியுலக அறிவு என்பதையும் பெற்றுக்கொள்ள வசதியிருந்தும் அவர்களால் முடியவில்லை.
இவ்வகையான மந்தநிலைப்போக்கு இறுதியில் புலிகளின் அழிவைக் கூட நம்பமுடியாமல் திண்டாடும் ஒரு கையறுந்த நிலையை நமது மக்களுக்குக் கொடுத்து விட்டிருக்கிறது. கடந்த இரண்டுவருடமாக தொடரும் போரில் இதுவரையான புலிகளது செய்திகள் அல்லது அதன் சார்பு ஊடகங்களது செய்திகள் மே 17ந்திகதி நடைபெற்ற அவர்களது மானங்கெட்ட நிலையை ஊகித்துக் கொள்ளக்கூடியதான ஒரு வாசிப்பு நிலையைக் கொடுக்கவில்லை. போர் ஆரம்பித்த மாவிலாற்றிலும் பின் மூதூர் சம்பூர் போன்ற இடங்களில் பாரிய இராணுவத் தோல்வியைச் சந்தித்த புலிகள் வழமைபோல தற்காலிக பின்வாங்கல் என்று தமது ஊடகங்களில் பொய் எழுதிக் கொண்டிருந்தன. கிழக்குமாகாணத்தை விட்டு முற்றாகப் புலிகள் துடைத்தெறியப்பட்டதை வரலாறு கொண்டாடிக் கொண்டிருந்தது. ஆனால் அநேகமானவர்கள் புலிகள் பதில்தாக்குதலுக்காகப் பின்வாங்குகிறார்கள் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள். புலிகளின் முரட்டுத்தனமான பிடிவாதத்தால் தமது வாழ்வை சீரழித்த மூதூர்மக்கள் மூன்றுமாதகாலம் எந்த உணவுமின்றி இருப்பிடங்களை விட்டு யாரும் கண்டுகொள்ளாமல் தெருவில் நின்றார்கள்.
கிழக்குமாகாணத்தை விட்டு வன்னிப் பிரதேசத்திற்குள் மட்டும் முடங்கிய புலிகள் மீது இராணுவம் போர் தொடுக்கத் தயாராக இருந்தது. அப்போது கூட புலிகள் சுதாகரித்துக் கொள்ளவில்லை. புலிகளும் புலிகளின் ஊடகங்களும் தமது ஒவ்வொரு பின்னடைவையும் முற்போக்கானதாகவே மக்களிடம் பரப்புரை செய்தன. தாம் மிகத் தந்திரோபாயமானவர்கள் என்பதை மக்கள் நம்பும்படி அந்தவகைப் பரப்புரை அமைந்தது. புலிகள் வீரம் செறிந்தவர்கள். அவர்களுடைய பின்வாங்கல்கள் எல்லாமே அரசின் மீதான மிகப்பெரிய தாக்குதலுக்கானது என்று மக்கள் நம்பிக்கொண்டார்கள். வன்னிக்குள் இராணுவம் நுழைய நேர்ந்தால் இலங்கை பூராவும் இரத்த ஆறு ஓடும் என்று அர்த்தப்பட கிளிநொச்சியில் செப்படம்பர் 2008இல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழ்ச்செல்வன் அறிவித்திருந்ததை நாம் கவனிக்க வேண்டும்.
இவ்வாறு தமிழ்ச்செல்வன் சொன்னதையிட்டு தமிழ்ச்சமூகம் வெட்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மாறாக அவ்வாறானதொரு நிலை உருவாவதை தமிழ் மனங்கள் நியாயம் என்று நம்பியது. தமிழ் மக்களை சிங்கள இராணுவம் கொல்வதற்கு ஈடாக அப்பாவிச் சிங்கள மக்களை கொல்வது சரி என்பதாக நமது சமூகம் நம்பியது. கடந்தகாலத்தில் புலிகளால் அறந்தலாவையிலும் ஹபரணையிலும் கென்பார்மிலும் புலிகள் நடாத்திய படுகொலைகளில் அனுபவப்பட்ட சிங்கள அரசு இந்த யுத்தம் தொடங்குவதற்கு முன்னாடியே அதற்கான அத்தனை வழிகளையும் அடைத்துவிட்டது. அவ்வப்போது பஸ்வண்டிகளில் வெடிக்கவைக்கப்பட்ட குண்டுகளைத் தவிர பாரிய அழிவுகளை புலிகள் சிங்கள மக்கள் மீது ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது. புலிகளின் இந்தவகையான படுகொலைச் செயற்பாடுகளால் மிகவும் பாதிக்கப்பட்டுவந்தது தென்பகுதித் தமிழர்களே. புலிகளின் மிகத்துல்லியமாகப் பயிற்றுவிக்கப்பட்ட தற்கொலைக் குண்டுதாரிகள் இலங்கையின் பலபாகங்களிலும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் என்று நம்பிய சிங்கள அரசு கொழும்பிலுள்ள தமிழர்களை முக்கியமாக இளைஞர்களை ஜுன் 2007இல் பலவந்தமாக வெளியேற்றியது. பின் கண்துடைப்பிற்காக மீளக் கொண்டுவந்தாலும் வெளியேற்றியது எத்தனைபேர் திரும்பக் கொண்டுவந்தது எத்தனைபேர் என்ற கணக்கு யாரிடமும் இல்லை. இந்தமாதிரியான செயற்பாடுகளினூடு கொழும்புத் தமிழர்களை முதல் முறையாக வடிகட்டியது இலங்கை அரசு. ஆனால் நமது தமிழ்ப் பத்திரிகைகளோ அதன் ஆய்வாளர்களோ இதை ஒரு இனத்துவேசச் செயற்பாடு என்று வர்ணித்ததற்குப் பின்னால் மறந்துபோயினர்.
pic:prabha with duwaraka
http://www.matrathu.com

கருத்துகள் இல்லை: