ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

போலீசார் கடத்தனர: தயாரிப்பாளர்/விநியோகஸ்தர்,சிவகாசி, போக்கிரி விநியோகித்தும்

போலீசார் தான் என்னை கடத்தி சென்றனர்: படஅதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு

திருச்சி கே.கே.நகரை சேர்ந்தவர் முகமது அலி ஜின்னா(35),  சினிமா பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர். நடிகர் பரத் நடித்த சேவல் படத்தை தயாரித்தும், விஜய் நடித்த சிவகாசி, போக்கிரி திரைப்படங்களை விநியோகித்தும் உள்ளார்.
 இந்த நிலையில் இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே ஒரு ஷாப்பிங் மாலில் நேற்று முன்தினம் தனது நூடுல்ஸ் கடை திறப்பு விழா பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் முகமது அலி ஜின்னாவை கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் கடத்தி சென்றனர். பட்டப்பகலில் சினிமா பட தயாரிப்பாளர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி சினிமா தயாரிப்பாளரை கடத்திய கும்பல் யார்? அவர் எங்கு இருக்கிறார் என்றும் விசாரணை நடத்தினார்.

அப்போது ஜின்னாவை சென்னை போலீசார் ஒரு விசாரணைக்காக காரில் அழைத்து சென்ற விவரம் திருச்சி போலீசாருக்கு தெரியவந்தது.

இதற்கிடையே மாலையில் ஜின்னா தனது நூடுல்ஸ் கடை ஊழியர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தான் பணப்பிரச்சினை தொடர்பாக சென்னை செல்வதாகவும், கடை திறப்பு விழாவை நடத்தி முடிக்கும்படியும் கூறினார். இதையடுத்து நூடுல்ஸ் கடை திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.
இந்த நிலையில் ஜின்னா நேற்று காலை சென்னையில் இருந்து திருச்சி வந்தார். கடத்தல் சம்பவம் குறித்து அவர் செய்தியாளர்களிடம்,

’’எனக்கும், சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சினிமாவுக்கு கடன் ஏற்பாடு செய்து தரும் ராஜு என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரம் இருந்தது.
 இது குறித்து சென்னை விருகம்பாக்கம் போலீசில் ராஜு என் மீது புகார் கொடுத்து உள்ளார். அந்த புகார் கொடுத்த விவரம் எனக்கு தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடை திறப்பு விழா ஏற்பாடுகளை கவனித்துக்கொண்டிருந்த என்னை நேற்று முன்தினம் சிலர் சந்தித்து பேசினர்.
பின்னர் என்னை காருக்குள் தள்ளி காரை வேகமாக சென்னை பைபாஸ் ரோட்டில் ஓட்டி சென்றனர். என்னை எங்கு அழைத்து செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, பேசாமல் எங்களுடன் வா? என்று மிரட்டினார்கள்.
 காரில் செல்லும் வழியில் என்னை அழைத்து சென்றவர்களில் ஒருவர் செக்போஸ்ட்களில் தன்னை சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி என்று தனது அடையாள அட்டையை காண்பித்து கொண்டே சென்றார்.
இதனால் செக்போஸ்ட்களில் பணியில் இருந்த போலீசார் என்னை கடத்தி சென்றவர்களிடம் விசாரிக்கவில்லை. அப்போது தான் என்னை அழைத்து சென்றது சென்னை போலீசார் என்று எனக்கு தெரியவந்தது. அந்த காரில் போலீசார் தவிர வேறு சிலரும் இருந்தனர்.
அவர்கள் என்னை சென்னை விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து என்னிடம் கடன் பற்றி விசாரணை நடத்தினர். அப்போது நான் அவர்களிடம் பணம் விவகாரம் பற்றி கூறி இருந்தால், திருச்சியிலேயே அமர்ந்து பேசி இருக்கலாம். அல்லது முறைப்படி கண்டோன்மெண்ட் போலீசுக்கு தகவல் தெரிவித்து என்னை அழைத்து சென்று இருக்கலாம். இப்படி திடீரென்று காரில் கடத்தி சென்றது நியாயமா? என்று கேட்டேன்.
இதற்கிடையே பத்திரிகை மற்றும் டி.வி.யில் என்னை கடத்திய சம்பவம் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே, விருகம்பாக்கம் போலீசார் அங்கிருந்து என்னை அனுப்பி விட்டனர்.

அதன்பிறகு நேற்று காலை திருச்சிக்கு வந்தேன். மேலும் என்னை காரில் கடத்திய சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டோன்மெண்ட் போலீசில் புகார் கொடுத்து உள்ளேன்’’என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: