ஞாயிறு, 16 மே, 2010

யாழ்ப்பாணத்திலிருந்து பொலிஸ்சேவைக்கு தெரிவானோர் வடக்கில் கடமையாற்றுவர்.

யாழ்.மாவட்டத்திலிருந்து பொலிஸ் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 355 தமிழ் இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டதும் அவர்களுக்கு களுத்துறை பொலிஸ் பயிற்சிக்கல்லூரியில் ஆறு மாதகால பயிற்சியளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சியைப் பெற்ற பின்னர் அவர்கள் தமிழ் பிரதேச பொலிஸ் நிலையங்களில் பணியாற்றுவார்கள்.இவ்வாறு யாழ். உதவிப்பொலிஸ் அத்தியட்சர் நிஹால் மெண்டிஸ் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய நடமாடும் சேவை நேற்று சனிக்கிழமை வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் நடைபெற்றபோது அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் 1975 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முப்பது வருடங்களின் பின்னர் தற்போதுதான் தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைக்கப்படுகின்றனர். அரசின் திட்டத்தின்படி மூவாயிரம் தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைக்கப்படவுள்ளனர்.
எதிர்காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ் பொலிஸ் அத்திட்சர்களே கடமையாற்றுவார்கள். களுத்துறையில் உள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பொலிஸ் சேவையில் சேர்ந்துள்ள சிங்கள இளைஞர்களுக்கு வழங்கப்படும் அனைத்து பயிற்சிகளும் தமிழ் இளைஞர்களுக்கும் வழங்கப்படும். தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உங்களின் பகுதிகளில் சேவையாற்றப்போவதை நினைத்து மகிழ்ச்சியடைகின்றேன்.
இங்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களுக்கு விரைவில் நியமனக்கடிதம் வழங்கப்படும் என்றார்.  பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நல்லுறவையும் ஐக்கியத்தையும் வளர்க்கும் நோக்கமாக இடம்பெற்ற இந்த நடமாடும் சேவையில் போக்குவரத்து விதிமுறைகள்,மது,போதைவஸ்து என்பவற்றை தடுப்பது சம்பந்தமான அறிவுரைகளும் வழங்கப்பட்டன. வறிய மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை: