திங்கள், 17 மே, 2010

முள்ளிவாய்க்கால் முதலாமாண்டு நினைவு தினக் கூட்டம்- பாமக புறக்கணிப்பு?

சென்னை: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் முள்ளிவாய்க்கால்  முதலாம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது. இதில் பாமக சார்பில் யாரும் பங்கேற்பதாகத் தெரியவில்லை.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் முள்ளிவாய்க்கால் படுகொலை முதலாம் ஆண்டு நினைவு நாள் பொதுக் கூட்டம் தியாகராய நகரில் நாளை மாலை நடக்கிறது.

கூட்டத்திற்கு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ நெடுமாறன் தலைமை தாங்குகிறார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றுகிறார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சி.மகேந்திரன், புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் ஆகியோரும் பேசுகிறார்கள். அனைவரையும் தென் சென்னை மாவட்ட ம.தி. மு.க. செயலாளர் வேளச் சேரி மணிமாறன் வரவேற்று பேசுகிறார். பீடா ரவி உள்பட கட்சி நிர்வாகிகள் பலரும் விழா ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வருகின்றனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை தென் சென்னை மாவட்ட ம.தி.மு.க. செய்து வருகிறது.

இதில் பாமக சார்பில் யாரும் பங்கேற்பதாகத் தெரியவில்லை. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னின்றுதான் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை தொடங்கினார். இருப்பினும் சமீபகாலமாக அவர் திமுகவுக்கு சாதகமாக மாறி வருவதால் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லையா என்று தெரியவில்லை.

கருத்துகள் இல்லை: