செவ்வாய், 18 மே, 2010

எட்டு மாவட்டங்களில் பெரும் மழை; வெள்ளம் சுமார் 2 இலட்சம் பேர் நிர்க்கதி; 6 பேர் பலி

நாட்டின் பல்வேறு பாகங்களிலும் நேற்று பெய்த மின்னலுடன் கூடிய அடை மழை காரணமாக அறுவர் உயிரிழந்திருப்பதுடன் 16 பேர் காயமடைந் திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர நடவடிக்கைளுக்கான பணிப்பாளர் பிரிகேடியர் என். பி. வேரகம தெரிவித்தார். எட்டு மாவட்டங்களிலுள்ள 45 ஆயிரத்து 75 குடும்பங்களைச் சேர்ந்த, ஒரு இலட்சத்து 91 ஆயிரத்து 908 பேர் கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் பெய்த அடை மழை வெள்ளத்தினால் நிர்க்கதிக்குள்ளாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, குருணாகல், காலி, புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே நேற்றைய மழையினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இம் மாவட்டங்களிலுள்ள 18 வீடுகள் முழுமையாகவும் 47 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளமை தெரிய வந்துள்ளது. அடை மழை காரணமாக கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஐவரும் மின்னல் தாக்கியதில் அனுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் நேற்று உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை 11 பேர் மழையினாலும் அனுராதபுரத்தைச் சேர்ந்த 5 பேர் மின்னல் தாக்கியதில் காயமடைந்து வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.களுகங்கை மற்றும் களனி கங்கையின் நீர்மட்டங்கள் அதிகரித்து வருவதாகவும் பணிப்பாளர் பிரிகேடியர் என். பி. வேரகம தெரிவித்தார்.
இம்மழை காரணமாக மேல் மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கையும், போக்குவரத்துகளும் பெரிதும் பாதிக்கப் பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.இம்மழையினால் மேல் மாகாணத் திலுள்ள பல வீதிகள் நீரில் மூழ்கியதே இதற்குக் காரணமாகும். அதனால் தாழ் நிலங்களில் தேங்கியுள்ள மழைநீர் துரிதமாக வழிந்தோடுவதற்குத் தேவையான ஏற்பாடுகளும் அவசர அவசரமாக மேற்கொள்ளப்படுகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இக்கடும் மழை காரணமாக கம்பஹா மாவட்ட மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இம் மாவட்டத்திலுள்ள பதினொரு பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 15 ஆயிரத்து 65 குடும்பங்களைச் சேர்ந்த 59 ஆயிரத்து 785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்திலுள்ள குடுப்பிட்டிய ஓயா பெருக்கெடுத்துள்ளது என்றார்.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கம்பஹா மாவட்ட இணைப்பாளர் குறிப்பிடுகையில், இம்மழை காரணமாக கம்பஹா - மினுவாங்கொட, கம்பஹா - ஜாஎல, கம்பஹா - உருதொட்ட, பெலும்மகஹா - வெலிவேரிய வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன என்றார்.கொழும்பு மாவட்ட இணைப்பாளர் கூறுகையில், மழை காரணமாக 1913 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புவக்குபிட்டிய ஓய உட்பட இப்பிரதேசத்திலுள்ள மூன்று ஆறுகள் பெருக்கெடுத்துள்ளன. இம்மாவட்டத்திலும் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன என்றார்.
இதேவேளை களுத்துறை, பண்டாரகம, பாணந்துறை பகுதிகளில் வெள்ளத்தினால் 2720 குடும்பங்களைச் சேர்ந்த 13316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். களுத்துறையில் வெள்ளத்தினால் ஒரு வீடு முற்றாகச் சேதமுற்றுள்ளதுடன் 6 வீடுகள் பகுதி அளவில் சேதம் அடைந்துள்ளன.
குகுலே கங்கை மின்சார திட்டத்தின் இரு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் தாழ்ந்த பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. களுத்துறையில் 1406 குடும்பங்களைச் சேர்ந்த 6890 பேரும், பாணந்துறையில் 1300 குடும்பங்களைச் சேர்ந்த 6370 பேரும், பண்டாரகமையில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் பாடசாலைகள் இயங்கிய போதிலும் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் வரவு வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுவதாக களுத்துறை பிரதேச செயலாளர் சிறிசோம லொகுவிதான தெரிவித்தார்.
களுகங்கையின் நீர் மட்டம் மேலும் அதிகரித்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

கருத்துகள் இல்லை: