புதன், 19 மே, 2010

பெண்கள் பாடசாலை ஒன்றில் பல்வேறு குளறுபடிகள்

மட்டக்களப்பு நகரின் பிரபல்யமான பெண்கள் பாடசாலை ஒன்றில் பல்வேறு குளறுபடிகள் இடம் பெறுவது தெரிய வந்துள்ளது. பெரும்பாலும் கிறிஸ்தவ மாணவர்களையே அதிகம் கொண்டுள்ள மேற்படி பாடசாலையில் எந்த பாடசலையிலும் நடக்காதவாறு மாணவர்களது சீருடை மாற்றப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பொதுவாக அரச பாடசாலைகளில் மாணவ மாணவிகளுக்கு வெள்ளைநிற சீருடை வழக்குவது வழமை. ஆனால் இந்தப் பாடசாலையோ அரச பாடசாலையாகவிருந்தும் வெள்ளை நிறத்தோடு சிவப்பு நிற சீருடையை மாணவர்களுக்கு அணிவித்து அழகு பார்ப்பது வேடிக்கையாகவே இருக்கின்றது. மேலும் அந்த சிவப்பு துணியை வாங்கும் பொறுப்பு மாணவர்களது தலையிலையே கட்டப்படுகின்றது. இதனால் அங்கு கல்வி கற்கும் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவது கலைக்குரிய விடயமாகின்றது. இந்த வருடமும் குறித்த இப்பாடசாலையில் புதிய வடிவில் சீருடை மாற்றப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை விட அங்கு உயர்தரத்தில் கலைப்பிரிவுக்கு பொறுப்பான ஆசிரியை ஒருவர் மாணவிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச சீருடையை கொடுக்காமல் அசமந்தப் போக்குடன் நடந்து கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது.. குறித்த மாணவி கடந்த டிசம்பர் மாதம் சாதாரணதர பரீட்சை எழுதி பெறுபேறுகளுக்காக காத்திருந்த வேளையில் குறித்த பாடசாலையில சீருடை வழங்கப்பட்டுள்ளது. பின்னர் இம்மாணவி தனக்கு உயர்தரம் தொடரக்கூடிய பெறுபேறுகளை பெற்று மீண்டும் அதே பாடசாலையில் இணைந்துள்ளார். இதன் பின்பு மீண்டும் இணைந்து கொண்ட பல மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்ட போதும் கூட சில மாணவர்களுக்கு வழங்காமால் தொடர்ந்தும் இழுபறி நிலைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். குறித்த மாணவி சீருடை கேட்டவுடன் இப்போது எனக்கு நேரமில்லை என தட்டிக் கழித்துள்ளார் ஒரு ஆசிரியை. அதுமட்டுமல்லாது மறுநாள் அம்மாணவியை புதுசீருடை அணிந்து வருமாறும் கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் இம்மாணவி பல கஸ்டத்தின் மத்தியில் கடையில் 600ருபாவுக்கு துணி வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது மாத்திரம் இன்றி அப்பாடசாலையில் மாணவிகளை நல்வழிப்படுத்த வேண்டிய ராகி... எனப்படும் ஒரு ஆசிரியை மாணவிகளுக்கு தொடர்ச்சியாக கூடாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்வதாகவும் மாணவிகள் கவலை தெரிவிக்கின்றனர். அத்தோடு இப்பாடசாலை பொதுவான அரச பாடசாலையாக இருந்த போதிலும் இதனை ஒரு தனி கிறிஸ்தவ பாடசாலையாக மாற்றும் முயற்சிகளும் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. (மின்னஞ்சல் மூலம் இதுபோன்ற செய்திகளை அனுப்புவோர் தமது விலாசம் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றையும் குறிப்பிட்டு எழுதவும். ஏனெனில் நாம் அச்செய்தியை உறுதிப்படுத்தப் பட்ட பின்பே பிரசுரிக்க வேண்டியுள்ளது.)

கருத்துகள் இல்லை: