ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

இலங்கையை பயமுறுத்த அமெரிக்கா முனைகிறதா?நொயல் நடேசன்

-ஜெனிவாவிலிருந்து நொயல் நடேசன்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான விவாதத் தொடர் இம்மாதம் 12 ஆம் திகதியிலிருந்து ஒரு வாரகாலம் நடைபெற்றது. இதில் இலங்கையின் மனிதஉரிமை பற்றிய விடயங்களும் இடம்பெற்றன. செயலார் நாயகம் நவநீதம்பி;ள்ளை தனது உரையில், இலங்கையை குறிப்பிட்டதோடு அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டாலும் பயங்கரவாத தடைச்சட்டம் பலப்படுத்தப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இலங்கையிலிருந்து வந்த தூதுக்குழுவிற்கு அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமை வகித்திருந்தார். இக்குழுவில்  அமைச்சர் நிமால் சிறிபால அமைச்சர் பிரியதர்சன யாப்பா, பாராளுமன்ற பிரதிநிதி சசின் வாஸ் மற்றும் சில உயர் அதிகாரிகளும் வந்திருந்தார்கள். அவர்களில்  வழக்கறிஞர்  மோகான் பீரிஸ் ஜனாதிபதி செயற்குழுவைச் சேர்ந்த  திவரத்தின,  யாழ் மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
 பொதுக்குழு அங்கத்தினருக்கு இலங்கையின் தற்போதைய நிலைமையை எடுத்துக்காட்டும் முகமாக ஒழுங்கு  செய்யப்பட்ட நிகழ்வு 12ஆம் திகதி நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் இலங்கை போரின் பின்னைய நிலைமைகளை அமச்சர் மகிந்த சமரசிங்க விளக்கினார். இவரது உரையில், போரினால் அகதிகளாக்கப்பட்ட 2,94,000 மக்களில் 7000 பேரைத்தவிர ஏனையோர் மீளக் குடியேற்றப்பட்டதாகவும் சரணடைந்த 11,900 விடுதலைப்புலி போராளிகளில் தற்போது 2,753 பேர் மட்டுமே தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததோடு மேலும் 1683 பேர் விரைவில் விடுதலை செய்யப்படவிருப்பதாகவும் உறுதியளித்தார். முப்பது வருடகாலமாக இருந்த அவசரகாலச்சட்டம் ஆகஸ்ட்; 31ஆம் திகதியில் இருந்து நீக்கப்பட்டதையும் குறிப்பிட்டார்.
 அவரது உரையினைத்தொடர்ந்து பொதுச்சபை அங்கத்தினருக்கு சனல் 4 இல் ஒளிபரப்பான இலங்கையின் கொலைக்களம் என்ற தொலைக்காட்சி நிகழ்வுக்கு பதில் அளிக்கும் முகமாக இலங்கை பாதுகாப்பு அமைச்சால் தயாரிக்கப்பட்ட சம்மதிக்கப்பட்ட பொய்கள் என்ற தொலைக்காட்சி நிகழ்வின் 17 நிமிட சுருக்கம் காண்பிக்கப்பட்;டது. இந்த நிகழ்வினையடுத்து கேள்வி நேரமாக அமைக்கப்பட்ட நிகழ்வு அந்கத்துவ நாடுகளின் இலங்கையை பற்றிய கருத்தை ஆராயும்  நிகழ்வாக அமைந்தது.
அமெரிக்க பிரதிநிதி,  இலங்கை  போரின் போது இழைக்கப்பட்ட குற்றங்களாக கருதப்பட்டவற்றை ஆராய்வதற்கு உடன்படாவிட்டால் சர்வதேச நாடுகளால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு உருவாகுவதற்கான சாத்தியம் உள்ளது எனக்கூறியது இலங்கைக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்தது. இதற்கு பதிலளித்த திரு மோகான் பிரிஸ் தற்போதைய உலகச்சூழலில் இலங்கையைப் போன்ற சுயாதிபத்தியமான நாட்டை அச்சுறுத்த முடியாது என்றார் ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவின் கருத்தை ஒத்த கருத்தை வெளியிட்டது.
சர்வதேச மன்னிப்புச் சபை,  சமீபத்தில் இலங்கை அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட கடந்த காலத்தை புரிந்து கொண்டு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகளையும் அதில் அங்கம் வகிக்கும் அதிகாரிகளையும் பற்றி கடுமையான விமர்சனத்தை வெளியிட்டு இருந்தது. ஐ.நா. நிழ்வில் பங்கு பற்றிய மன்னிப்புச் சபையின் அதிகாரி இதேகருத்தைத் தெரிவித்து, இலங்கை சர்வதேசம் அளவிலான சுதந்திரமான  ஆணைக்குழுவை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற கருத்தை வலியுறுத்தினார். அதற்குப்பதிலளித்த மோகான் பீரிஸ் “சுதந்திரமாக நல்லிணக்க ஆணைக்குழு செயல்படாது என்று, அதனது அறிக்கை வெளிவரு முன்னர் எப்படி உங்களால் தீர்மானிக்க முடியும்? அத்துடன் சுதந்திரமான ஆணைக்குழு என எதைச் சொல்லமுடியும்? இலங்கையால் தனது பிரச்சினைகளை தானே தீர்த்துக்கொள்ளள முடியும்” என்று காட்டமாக கூறினார்.
அவசரகாலச் சட்டத்தை நீக்கியதால் மூன்று விடயங்களை செய்வதற்காக பயங்கரவாத சட்டம் தேவையாக இருக்கிறது. பயங்கரவாத தடைச்சட்டம் தற்போது சிறையில் உள்ளவர்களை வைத்திருப்பதற்கும் விடுதலைப்புலி இயக்கம் மற்றும் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் தடையை நீடிப்பதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டியுள்ளது என்றும் மோகான் பீரிஸ் கூறினார்
 இலங்கையின் நிலையை ஆதரித்துப் பேசிய கியூபா பிரதிநிதி இலங்கை இந்த நிகழ்வில் காட்டிய தொலைக்காட்சி பல விடயங்களை புரியவைத்ததாகக் கூறி இலங்கைக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். சீனப்பிரதிநிதி இலங்கை 500 வருட காலனி ஆதிக்கத்தில் துன்பப்பட்ட நாடு. அதனது உள் விவகாரங்களில் வெளியாரின் தலையீடு தேவை இல்லை என்று குறிப்பிட்டு இலங்கைக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். பாகிஸ்தானிய பிரதிநிதியும் தனது ஆதரவை தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் நாடுகளைத் தவிர்ந்த மற்றைய தனியார் நிறுவனங்களும் பங்கு பற்றமுடியும். குளோபல் தமிழ் ஃபோரம் என்ற அமைப்பைச் சேர்ந்த வணக்கத்துக்குரிய பிதா இம்மானுவல் அடிகளார் தமது உரையில், “பாதுகாக்க முடியாத இலங்கையின் மனித உரிமை விவகாரத்தை சிறந்த முறையில் பாதுகாக்க முயற்சி;க்கும் இலங்கைக் குழு” எனக்குறிப்பிட்டு, எப்படி சனல் 4 முற்றாக உண்மையில்லையோ அதே போல் பாதுகாப்பு அமைச்சின் சம்மதிக்கப்பட்ட பொய் என்ற வீடியோவும் முற்றாக உண்மையல்ல. இரண்டுக்கும் இடையில் உண்மையைத் தேட வேண்டும்” என்றார்.
அவசர காலசட்டத்தை நீக்கிய போதிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பலப்படுத்தியதாக குற்றம் சாட்டினார். சர்வதேச ஆணைக்குழுவை வலியுறுத்தினார்.  கனடாவில் இருந்து வந்திருந்த ஹரி ஆனந்த சங்கரி மற்றும் பிரான்சைச் சேர்ந்த கிருபாகரன் சர்வதேச ஆணைக்குழுவின் தேவையை வலியுறுத்திவிட்டு தமிழர் பகுதியில் செயல்படும் கிறிஸ் மனிதர்களைப் பற்றி குறிப்பிட்ட போது, அமைச்சர் மகிந்த சமரசிங்க, “யாழ்ப்பாணம் அரசாங்க அதிபரினால் இதற்குப் பதில் சொல்ல முடியும்” என்றார்.
யாழ.; அரசாங்க அதிபர் இதுபற்றிக் கூறும்போது தங்கம் விலை கூடியதால் ஏற்பட்ட நிலைமைதான் அதற்குக்காரணம் என்றும் தற்போது யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்கள் குறைந்து வரும் புள்ளிவிபரத்தையும்  சொன்னார். யாழ்ப்;பாணத்தில் மீள்குடியேற்றம் அபிவிருத்தி என்பனவற்றைப் பற்றியும்  விளக்கினார்.
இலங்கையைப் பொறுத்தவரையில் சர்வதேச விசாரணைக்கான அழுத்தம் என்பது தொடர்ச்சியாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கவால் பிரயோகிக்கப்படும். அதே வேளையில் சீனா மற்றும் சில இலங்கையின் நேச நாடுகள் இலங்கையை தொடர்ச்சியாக பாதுகாக்கும் என்பது இந்த ஐ.நா. நிகழ்ச்சியில் தெரியவந்தது. தற்பொழுது இலங்கை ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட நல்லிணக்க குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட பின்பு சர்வதேச அழுத்தம் அதிகரிக்க சாத்தியம் உள்ளது. அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் மீண்டும் இந்த விடயம் பொதுக்குழு நாடுகளில் எடுக்கப்படும் போது இலங்கை மேலும் விமர்சனத்துக்கு ஆளாவது குறிப்பிட்ட இடைக்காலத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப்பொறுத்து உள்ளது.

கருத்துகள் இல்லை: