புதன், 14 செப்டம்பர், 2011

ரொபேர்ட்.ஓ.பிளேக் நேற்று யாழ். விஜயம்: நிலைமைகள் நேரில் ஆராய்வு:விஜயத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: பல்கலை மாணவர் சந்திப்பு ரத்து!

2ம் இணைப்பு:-அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட்.ஓ.பிளேக் நேற்று யாழ். விஜயம்: நிலைமைகள் நேரில் ஆராய்வு:விஜயத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: பல்கலை மாணவர் சந்திப்பு ரத்து!


யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட்.ஓ.பிளேக் யாழ் பிராந்திய மக்களின் இயல்புவாழ்க்கை, வாழ்வாதார நிலைமைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்துக் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

நேற்றுக்காலை யாழ்ப்பாணம் சென்ற பிளேக், யாழ் மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கத்தைச் சந்தித்து யாழ் குடாநாட்டின் நிலைமைகள் குறித்துக் கலந்துரை யாடியிருந்தார்.

யாழ். குடாநாட்டு மக்களின் வாழ்வாதாரம், தற்பொழுது மேற் கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகள், மீள்குடியேற்றப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றி அவர் கேட்டறிந்துகொண்டார் என மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் தெரிவித்தார்.

இச்சந்திப்புத் தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அவர், யாழ்ப்பாணத்தில் என்ன விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று பிளேக் கேட்டார். வீடமைப்பு, வாழ்வாதாரம் மற்றும் யுத்தத்தின் பின்னர் அதிகரித்திருக்கும் வேலையில்லாப் பிரச்சினைக்கான தீர்வு போன்ற விடயங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதை நாம் விளக்கமாக அவருக்கு எடுத்துக் கூறினோம்.

யாழ்ப்பாணத்தின் இயல்பு வாழ்க்கை குறித்தும் அவர் கேட்டார்.

நிலைமை சுமுகமாக இருப்பதாகவும், அண்மைக் காலமாக அதிகரித்திருக்கும் கொள்ளைச் சம்பவங்கள் குறித்தும் விளக்கமளித்தோம்.

குழப்பமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் உயர்மட்டக் குழுக்கள், விழிப்புக் குழுக்கள் பற்றி நாம் அவருக்கு தெளிவாக எடுத்துக்கூறினோம்.

மீள்குடியேற்றம் பற்றிக் கேட்ட அவர், ஏன் சிலர் இன்னமும் மீள் குடியமர்த்தப்படவில்லையென வினாவினார். கண்ணிவெடி அகற்றும் பணிகள் இன்னமும் பூர்த்தியடையாததால் மீள்குடியேற்றத்தைப் பூர்த்திசெய்வதில் தாமதம் காணப்படுகின்றது என்ற விளக்கத்தையும் நாம் அவருக்கு வழங்கியிருந்தோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தில் அரசசார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளையும் பிளேக் சந்தித்திருந்தார்.

இதன் பின்னர் யாழ்ப்பாணம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அமெரிக்க நிலையத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பிரதிநிதிகளைச் சந்திப்பத ற்காக அமெரிக்கன் நிலையத்துக்குச் சென்றார்.

இதன்போது, அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட்.ஓ.பிளேக்கின் யாழ்ப்பாண விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றும் நடைபெற்றது.

விக்கிலீக்ஸ் என்ன வேதாகமமா? கொடுத்த தகவலுக்கு ஆதாரம் என்ன?’ ‘விலைபோகாத எங்கள் தமிழ் குலப் பெண்களை இழிவுபடுத்த வந்தீரோ?’ போன்ற வாசகங்களைத் தாங்கியதாக ஆர்ப்பாட்டக் காரர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து பிளேக், அமெரிக்க நிலையத்துக்கான விஜயத்தை இடைநிறுத்துக்கொண்டு திரும்பினார். அங்கிருந்து யாழ் ஆயர் இல்லத்துக்குச் சென்ற ரொபேர்ட்.ஓ.பிளேக், அங்குள்ள முக்கியஸ்தர்களைச் சந்தித்து யாழ் குடாநாட்டின் பிந்திய நிலைவரங்கள் குறித்தும் ஆராய்ந்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு திரும்பிய ரொபேர்ட்.ஓ.பிளேக், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும் வடபகுதியின் நிலைப்பாடுகள் குறித்து இந்தச் சந்திப்பில் முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: