செங்கல்பட்டு: ""பா.ம.க., ஆட்சிக்கு வந்தால், நகரத்திற்கு இடம் பெயர்ந்த மக்கள், மீண்டும் கிராமத்திற்கே திரும்பும் நிலை ஏற்படும் '' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க., பொதுக்குழுக் கூட்டம், கூடுவாஞ்சேரியில், நேற்று நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: உள்ளாட்சித் தேர்தலில், நம் கட்சி தனித்துப் போட்டியிடுவதை, தமிழக மக்கள் வரவேற்றுள்ளனர். திராவிட கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., கரைந்து வருகின்றன. எந்தக் கட்சியையும் நம்பி, பா.ம.க., துவக்கப்படவில்லை. மக்களை நம்பி துவக்கிஉள்ளோம். தி.மு.க., வையும், அ.தி.மு.க., வையும் நம்பி, இனி பயன் இல்லை. வானில் மேகமும், கடலில் நீரும் இருக்கும் வரை, தி.மு.க., அ.தி.மு.க., உடன் கூட்டணி வைத்துக் கொண்டிருந்தால், நாம் முதல்வராக முடியாது. தமிழக முதல்வர் ஆடு, மாடு கொடுக்கிறேன் என்கிறார். இவ்வாறு செய்தால், படிப்பறிவு இல்லாத
நாடாக, தமிழகம் மாறிவிடும். ஏற்கனவே, தமிழகத்தில் தாலி இழக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆண்கள் குடித்துவிட்டு, குறுகிய வயதில் இறப்பதே இதற்குக் காரணம். பென்னாகரம் இடைத்தேர்தலில், தி.மு.க., 75 ஆயிரம் கோடி ரூபாய் இரைத்து வெற்றி பெற்றது. பா.ம.க., 42 ஆயிரம் ஓட்டுகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப்பெற்றது. அதே தொகுதியில், தற்போது நடந்த சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., டெபாசிட்டை இழந்துள்ளது. மறைமலைநகர் அருகே, துணை நகரம் வரஎதிர்ப்பு தெரிவித்தோம். அதை மீறி, தமிழக அரசு விளைநிலங்களை, வெளிநாட்டினருக்கு தாரை வார்த்தது. காஞ்சிபுரம் ஏரி மாவட்ட
மாகவும், சோறு போடும் மாவட்டமாகவும் கருதப்பட்டது. தற்போது, விளைநிலங்களை இழந்துவிட்ட விவசாயிகள், நாங்கள் வாழ்வதா, சாவதா எனக் கேள்வி கேட்கின்றனர். நாம் ஆட்சிக்கு வந்தால், நகரத்திற்கு இடம் பெயர்ந்த மக்கள், மீண்டும் கிராமத்திற்கே திரும்பும் நிலைமை வரும். இன்று, நாம் தெளிவு பெற்று தன்னிச்சையாகக் கட்சியை வளர்க்க, முடிவு செய்து விட்டோம். "பட்டி தொட்டி எங்கும் இன்பம் கொட்டிக் கிடக்கும்' என்ற நிலையை, தமிழகத்தில் உருவாக்க நாம் பாடுபட வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில், நம் கட்சியினர் யார் போட்டியிட்டாலும், ஒற்றுமையாகக் கட்சிப்பணியாற்ற வேண்டும். ஒரு ரூபாய் கூட செலவு செய்யக்கூடாது. பூத் செலவைக் கூட கேட்கக்கூடாது. இந்தியாவுக்கு வழிகாட்டியாக நாம் செயல்பட வேண்டும் . இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக