புதன், 24 நவம்பர், 2010

வெள்ளைக் கொடியால் சர்வதேசத்தில் சர்ச்சை - சேனுகா சாட்சி


 முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினால் கூறப்பட்ட வெள்ளக்கொடி விவகாரம் சர்வதேச அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியதாக ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சேனுகா செனவிரட்ன தெரிவித்துள்ளார். வெள்ளைக் கொடி விவகார வழக்கில் 5ஆவது சாட்சியமாக இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பில் இணையத்தள பத்திரிகை மூலம், தான் அறிந்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெள்ளைக் கொடி விவகாரம் வெளிவந்ததன் பின்னர், ஐக்கிய நாடுகள் அமையத்தின், சட்டவிரோத மனிதப் படுகொலைகள் தொடர்பில் ஆராயும் பிரதிநிதி, பேராசிரியர் பிலிப் எல்ஸ்டன், சரத் பொன்சேகாவின் கருத்து குறித்து விளக்கம் கோரி கடிதம் ஒன்று அனுப்பியிருந்ததாக சேனுகா செனவிரட்ன தெரிவித்தார். பின்னர், தான் அந்தக் கடிதத்தினை இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர், மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைத்ததாக அவர் இன்று நீதிமன்றில் குறிப்பிட்டார். தனது கடிதத்திற்கு மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ரஜீவ் விஜேசிங்க தெளிவுபடுத்தல் கடிதம் ஒன்றை அனுப்பியதாகவும், அது முழுமைப் பெற்றிருக்காததன் காரணமாக அதனை வாபஸ் பெற்றுக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். வழக்கு விசாரணை நாளைவரை ஒத்திவைக்கப்பட்டதுடன், இன்றைய வழக்கு விசாரணையின் போது சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் கொழும்பு மேல் நீதிமன்றிற்கு வருகைத் தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: