திங்கள், 29 நவம்பர், 2010

4 ஒப்பந்தங்களில் இலங்கை - பாகிஸ்தான் கையெழுத்து

பாகிஸ்தான் - இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு வர்த்தக ஆணைக்குழுவை பலப்படுத்துவதற்கு இரு நாடுகளின் ஜனாதிபதிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதுடன் இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்குவதற்கும் பாகிஸ்தான் முன்வந்துள்ளது. அதேவேளை பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் இன்று நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஷிவ் அலி ஸர்தாரிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைககளையடுத்து இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுகளைக் கொண்டவர்கள் விஸா பெறும் அவசியத்தை நீக்குதல், மற்றும் விவசாய ஒத்துழைப்பு, சுங்க விவகாரங்கள், கலை-புத்தாக்க கல்வி ஆகிய துறைகளில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கையெழுத்திடும் வைபவத்தில்இ விஸா விவகாரம் தொடர்பான ஒப்பந்தத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மக்தூம் ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோர் கையெழுத்திட்டனர். ஏனைய 3 ஒப்பந்தங்களில் இலங்கையின் விவசாய அமைச்சின் செயலாளர் கே.ஈ. கருணாதிலக, சுங்க பணிப்பாளர் நாயகம் திருமதி சுதர்மா கருணாதிலக்க நுண்கலைப் பல்லைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜயசேன கோட்டேகொட ஆகியோருடன் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் திருமதி சீமா இலாஸி பலோச் கையெழுத்திட்டார். இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது பயங்கரவாதத்தை இலங்கை தோற்கடித்தமைக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஸர்தாரி பாராட்டு தெரிவித்தார். பாகிஸ்தானும் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: