திங்கள், 29 நவம்பர், 2010

புலிகளின் சர்வதேசத் தலைவர் புலனாய்வுப் பிரிவால் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பைச் சேர்ந்த சிரேஷ்ட தலைவர் ஒருவர் கொழும்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலீட்டாளர் என்ற போர்வையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது அரச புலனாய்வுப்பிரிவினர் குறித்த நபரை கைதுசெய்துள்ளதாக படைத்தரப்பை ஆதாரங்காட்டி கொழும்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கிரன் என்ற அழைக்கப்படும் குறித்த சிரேஷ்ட தலைவர் புலிகளின் சர்வதேச வலையமைப்பு நிதிக்கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடையவர் என அந்தச் செய்திகளில் கூறப்பட்டுள்ளது. கொழும்பின் முக்கிய ஹோட்டல் ஒன்றில் வைத்து குறித்த சந்தேகநபரை புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
அவுஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் தமிழீழ விடுதலைப்புலிகளின் சார்பில் நிதிதிரட்டும் நடவடிக்கைகளில் குறித்த நபர் ஈடுபட்டு வந்ததாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு முதல் அதிகமாகத் தேடப்பட்டுவரும் குற்றவாளிகள் பட்டியலில் கிரனின் பெயர் முக்கிய இடத்தை வகித்துவந்ததாகவும் அந்தத் தகவல்களில் குறிப்பிடப்படுகிறது.
தெனியாய பிரதேசத்தில் குறித்த நபருக்கு தேயிலைத் தோட்டம் ஒன்று உள்ளதாகவும் தப்பிச் சென்ற விடுதலைப்புலி உறுப்பினர்கள் முதலீட்டாளர்கள் என்ற போர்வை யில் மீண்டும் நாடுதிரும்பி வருவதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின் றது

கருத்துகள் இல்லை: