Dinamalar : புதுடில்லி, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், பெரிய மாநிலங்களான மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானை பா.ஜ., கைப்பற்றுகிறது. சத்தீஸ்கரில் ஆட்சியை தக்க வைப்பதுடன், காங்கிரசுக்கு போனசாக தெலுங்கானா கிடைக்கும் என, தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளில் தெரியவந்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மிசோரமில், கடும் இழுபறி நிலவும் எனவும் தெரியவந்துள்ளது.
லோக்சபாவுக்கு, அடுத்தாண்டு ஏப்., - மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இதில், மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் பா.ஜ., உள்ளது.
அதே நேரத்தில், 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்காமல் துவண்டிருந்த காங்கிரஸ், கடும் போட்டியைக் கொடுக்க தயாராகி வருகிறது.
கடும் இழுபறி
இந்நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உட்பட, ஐந்து மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடந்தது. இது, லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் 7ல் துவங்கி, நேற்று வரை ஓட்டுப் பதிவுகள் நடந்தன. தேர்தல் முடிவுகள், நாளை மறுதினம் வெளியாக உள்ளன.
கடைசிகட்ட ஓட்டுப் பதிவு தெலுங்கானாவில் நேற்று முடிந்த நிலையில், பல தனியார் 'டிவி சேனல்'கள், தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
இவற்றில், மத்திய பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைப்பதுடன், ராஜஸ்தானையும் பா.ஜ., கைப்பற்றும் என, கூறப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் ஆட்சியை தக்க வைக்கும் காங்கிரசுக்கு, போனசாக தெலுங்கானா கிடைக்கும் என, அதில் தெரியவந்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மிசோரமில் கடும் இழுபறி நிலவுவதால், தொங்கு சட்டசபை அமையலாம் எனவும் இதில் தெரியவந்துள்ளது.
சத்தீஸ்கர்: மொத்தம், 90 தொகுதிகள் உள்ள சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடரும் என, பெம்பாலான கணிப்புகள் கூறுகின்றன. பெரும்பான்மைக்கு, 46 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ், 50; பா.ஜ., 38 இடங்களில் வெற்றி பெறும் என, கணிப்புகள் கூறுகின்றன.
மத்திய பிரதேசம்: மிகப் பெரிய மாநிலமான இங்கு, 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2003ல் இருந்து இங்கு பா.ஜ., ஆட்சியை பிடித்து வந்துள்ளது.
கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. ஆனால், உள்கட்சி மோதலால் காங்., ஆட்சியை இழக்க, 2020ல் பா.ஜ., மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
கடந்த 2005ல் முதல் முறையாக முதல்வரான, சிவராஜ் சிங் சவுகான், பா.ஜ.,வின் நீண்டகால முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தற்போது ஐந்தாவது முறையாக அவர் முதல்வராகும் வாய்ப்பு கிடைக்கும் என, கணிப்புகள் கூறுகின்றன.
ஆனால் தேர்தல் பிரசாரத்தின்போது, முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே பா.ஜ., தேர்தலை சந்தித்தது. அதனால், அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்பதை கட்சித் தலைமையே முடிவு செய்யும்.
பெரும்பான்மைக்கு, 116 இடங்கள் தேவை என்ற நிலையில், பா.ஜ., 125 இடங்களிலும் காங்கிரஸ், 102 இடங்களிலும் வெற்றி பெறும் என, கணிப்புகள் கூறுகின்றன.
ராஜஸ்தான்: மொத்தம், 200 தொகுதிகள் உள்ள இங்கு, 199 தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் நடந்துள்ளது. கடந்த 1990களில் இருந்து நடந்த தேர்தல்களில், ஆளுங்கட்சி வென்றதில்லை.
மீண்டும் வெல்லும்
அது இந்தத் தேர்தலிலும் தொடரும் என, கணிப்புகள் கூறுகின்றன.
பெரும்பான்மைக்கு 101 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் 76 இடங்களில் வெல்லும் என, கணிப்புகள் கூறுகின்றன.
இங்கும் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலை சந்தித்த பா.ஜ.,வுக்கு, 111 இடங்கள் கிடைக்கும் என, கணிப்புகள் கூறுகின்றன.
தெலுங்கானா: கடந்த 2014ல் உருவான இந்த மாநிலத்தில், 119 தொகுதிகள் உள்ளன. தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் வென்ற, முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்ட்ர சமிதி, மீண்டும் வெல்லும் என, தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கூறின.
ஆனால், இங்கு பெரிய திருப்பமாக, காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என, தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் கூறுகின்றன. பெரும்பான்மைக்கு, 60 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ், 60 தொகுதிகளில் வெல்லும் என, கணிப்புகள் கூறுகின்றன.
ஆளும் பி.ஆர்.எஸ்., எனப்படும் பாரத் ராஷ்ட்ர சமிதி, 48 இடங்களில் வெல்லும். அசாதுதீன் ஓவைசியின், ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி, ஆறு இடங்களையும், பா.ஜ., ஐந்து இடங்களையும் பிடிக்கும் என, கணிப்புகள் கூறுகின்றன.
மிசோரம்: வடகிழக்கு மாநிலமான மிசோரமில், 40 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், கடும் இழுபறி நிலவும் என, கணிப்புகள் கூறுகின்றன. முதல்வர் ஜோரம்தங்கா தலைமையிலான மிசோ தேசிய முன்னணி மற்றும் ஜோரம் மக்கள் இயக்கம் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இசட். பி.எம்., எனப்படும் ஜோரம் மக்கள் கட்சி, 17 இடங்களிலும், எம்.என்.எப்., எனப்படும் மிசோ தேசிய முன்னணி, 14 இடங்களிலும் வெல்லும். காங்கிரஸ், எட்டு இடங்களிலும், பா.ஜ., ஒரு இடத்திலும் வெல்லும் என, கணிப்புகள் கூறுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக