நக்கீரன் : தமிழகத்தில் கள் இறக்கி சந்தைப்படுத்தும் உரிமை மீட்பு போராட்டம் வருகிற ஜன.21-ம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என சிதம்பரத்தில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் அவர் தமிழ்நாடு அரசிடம் கள்ளுக்கு அனுமதி கேட்பதும், கள்ளுக்கடைகளை திறக்க கோருவதும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானவை.
1950 ஜனவரி 26-ம் தேதி அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது.
அந்த சட்டத்தின்படிதான் கள் இறக்குவதும், பருகுவதுமாகும். கலப்படத்தை காரணம் காட்டி தமிழ்நாடு அரசு அந்த உரிமையை பறித்துள்ளது.
புதுச்சேரி, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில், உலகளவில் கள்ளுக்கு தடை கிடையாது.
ஒரு மரத்து கள்ளை 48 நாட்கள் ஒரு மண்டலம் தொடர்ந்து பருகி வந்தால் பல நோய்கள் குணமாகும். இது மருத்துவம். கள் ஒரு அருமருந்து. சித்தவைத்தியத்தில் முக்கியமான மூலப்பொருள் கள்ளு. இயற்கை வைத்தியத்திற்கு பஞ்சகவ்யம் தயாரிக்க முக்கியமானது.
மதுவினால் பாதிக்கப்பட்ட கல்லீரலை பாதுகாப்பது கள்ளுதான். அரசியலமைப்பு சட்டம் 47 வது பிரிவில் சொல்லப்பட்டிருக்கும் மருத்துவ சட்டம் பொருளற்று போய்விடும். தமிழ்நாடு அரசு கள்ளுக்கு வீற்றிருக்கும் தடையை நீக்க வேண்டும். வரும் 2024 தேர்தல் தேதிக்கு முன்பு தடையை நீக்க வேண்டும். கள்ளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுக்க வேண்டும், கள்ளுக்கடைகளை தமிழ்நாட்டில் திறக்க வேண்டும் என சில கட்சி தலைவர்கள் கூறுகின்றனர். அரசியலமைப்பு சட்டம் குறித்து புரிதல் இல்லாமல் கருத்துகளை தெரிவிக்கின்றனர். கள்ளுக்கும் தடை கூடாது, கள்ளுக்கடையும் கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை. கலப்படத்துடன் விற்பனை செய்வதுதான் கள்ளுக்கடையின் நோக்கம்.
கள்ளுக்கு தடை நீக்கப்படும் போதுதான் பனைக்கு எதிர்காலம். பனை பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. ஒரு காலத்தில் பனை மரத்தை வைத்துதான் வீடுகள் கட்டப்பட்டது. தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. கள்ளுக்கான தடையை நீக்கினால்தான் பனையை காப்பாற்ற முடியும். பனையை பயிரிடலாம், ஆனால் கள் இறக்கக்கூடாது என்பது நியாயமா? ஆங்கிலேயர் காலத்தில் 50 கோடி இருந்த பனை மரங்கள், தற்போது 5 கோடியாக குறைந்துள்ளது. அதற்கு கள் தடைதான் முதன்மையான காரணம். தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாற வேண்டும் என்றால், பனை, தென்னை, ஈச்ச மரங்களிலிருந்து நீராகவோ, கள்ளாகவோ, பதநீராகவோ இறக்கி குடித்தும், விற்றுக்கொள்ளலாம் என்றும், இவற்றை மதிப்பு கூட்டப்பட்ட பண்டங்களாக மாற்றி உள்நாட்டிலும், உலகளவிலும் சந்தை படுத்திக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் எனக் கூறினார். இவருடன் பெருநிலக்கிழார் ராமலிங்கம் உடன் இருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக