மின்னம்பலம் - christopher : திமுக அமைச்சர்களுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்
திமுக அமைச்சர்களுக்கு எதிராக அதிமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை ரத்து செய்து உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 29) உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996-2001 ஆண்டுகளில் திமுக ஆட்சியின்போது அமைச்சர்களாக இருந்த கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, கோ.சி.மணி, மற்றும் மதுரை திமுக மேயராக இருந்த குழந்தைவேலு ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்ததாக அடுத்து வந்த அதிமுக அரசு வழக்கு தொடர்ந்தது.
91 -96 அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ரகுபதி அதன் பின் திமுகவிற்கு மாறினார். அவர் மீதும் 2001 -06 அதிமுக ஆட்சியில் சொத்து குவிப்பு வழக்கு போடப்பட்டது.
இந்த வழக்குகள் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களில் நடந்த விசாரணை முடிவில் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவாய், நரசிம்மா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் குமணண்துரை ஆகியோர் ஆஜராகினர்.
அவர்கள் தங்களது வாதத்தில், “இந்த வழக்கு பல ஆண்டுகள் கடந்து காலதாமதமாக தொடரப்பட்டுள்ளது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று தெரிவித்தனர்.
இதனையடுத்து மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க எந்தவித முகாந்திரமும் இல்லை என்று கூறி தமிழ்நாடு அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி மற்றும் மதுரை முன்னாள் மேயர் குழந்தைவேலு ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துகுவிப்பு வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக