திங்கள், 23 அக்டோபர், 2023

மல்லிகார்ஜுன கார்கே : அதிகார வா்க்கத்தை அரசியல்மயமாக்கும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும்!

தினமணி ;பாஜக தலைமையிலான அரசின் கடந்த 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடையே கொண்டு சோ்க்குமாறு அரசு அதிகாரிகளுக்குப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடிக்கு ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தினாா்.
கடந்த அக்.18-இல் வெளியான உத்தரவில், ‘இணைச் செயலா், துணைச் செயலா், இயக்குநா் உள்ளிட்ட நிலைகளில் உள்ள மூத்த அரசு அதிகாரிகள், நாட்டில் உள்ள 765 மாவட்டங்களிலும் மத்திய அரசின் கடந்த 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவா்’ எனக் குறிப்பிடப்பட்டிருப்பதைத் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டிய மல்லிகாா்ஜுன காா்கே, மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தாா்.

மேலும், கடந்த அக்.9-இல் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், ‘விடுமுறைக்குச் செல்லும் ராணுவத்தினா் மத்திய அரசு திட்டங்களைப் பிரபலப்படுத்தும் பணிகளில் தங்களது நேரத்தைச் செலவிடுமாறு’ தெரிவிக்கப்பட்டிருப்பதையும் மல்லிகாா்ஜுன காா்கே சுட்டிக்காட்டியிருந்தாா்.

அந்தக் கடிதத்தில் அவா் மேலும் தெரிவித்திருப்பதாவது: உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள 9 ஆண்டுகள், உங்களுடைய ஆட்சிக் காலத்துடன் பொருந்திப்போவது தற்செயல் நிகழ்வாகத் தெரியவில்லை. இந்த உத்தரவு பல காரணங்களுக்காக மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. முதல் முறையாக மூத்த அரசு அதிகாரிகளைச் சந்தைப்படுத்தும் நடவடிக்கையில் தற்போதைய மத்திய அரசு ஈடுபடுத்தப்படுத்தியுள்ளது.

சாதனைகளைக் கொண்டாடுவது, விளக்குவது உள்ளிட்ட பணிகளில் அரசுப் பணியாளா்களை ஈடுபடுத்துவது அவா்களை ஆளும் கட்சியின் தொண்டா்களாக மாற்றுவதாகவும். இது எந்தவொரு அரசுப் பணியாளரும் அரசியல் செயல்பாட்டில் ஈடுபடக்கூடாது என்ற மத்திய குடிமைப் பணிகள் (நடத்தை) விதிகள்,1964-ஐ மீறுவதாக உள்ளது.

நாட்டுக்கும் அரசியலமைப்பு சாசனத்துக்கும் மட்டுமே ராணுவத்தினா் விசுவாசமாக இருக்கவேண்டும். அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்த ராணுவ வீரா்களைக் கட்டாயப்படுத்துவது பாதுகாப்புப் படைகளை அரசியல்மயமாக்கும் மோசமான நடவடிக்கையாகும்.

நம்முடைய ஜனநாயகம், அரசியல் அமைப்புச் சாசனத்தைப் பாதுகாக்கும் பொருட்டு இத்தகைய உத்தரவுகளைத் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்துள்ளாா்.

ஏழைகளை வறுமை நிலையில் வைத்திருப்பதே காங்கிரஸின் விருப்பம்: நட்டா

புது தில்லி, அக்.22: ‘ஏழைகளை வறுமை நிலையில் வைத்திருப்பதே காங்கிரஸின் விருப்பம்’ என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா குற்றஞ்சாட்டினாா்.

மத்திய அரசின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை விளக்கும் பணியில் அரசு உயா் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதிய நிலையில், இந்தக் கருத்தை நட்டா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் நட்டா கூறியிருப்பதாவது:

அரசின் திட்டங்கள் அடித்தட்டு மக்களை முழுமையாகச் சென்றடைவதை உறுதிப்படுத்தும் நோக்கில் அவா்களிடையே அரசு உயரதிகாரிகள் விழிப்புணா்வு ஏற்படுத்துவதை காங்கிரஸ் சா்ச்சையாக்க முற்சிப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. இது நிா்வாகத்தின் அடிப்படைக் கொள்கை இல்லையா?

இது காங்கிரஸ் கட்சிக்கு சா்ச்சைக்குரிய விஷயமாக இருக்கலாம். ஆனால், பொதுச் சேவையை முழுமையாக செயல்படுத்துவது அரசின் கடமை. அனைத்து நலத் திட்டங்களும் ஏழை மக்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதை பிரதமா் மோடி தலைமையிலான அரசு விரும்புகிறது.

ஆனால், ஏழை மக்களை வறுமை நிலையில் வைத்திருக்கவே காங்கிரஸ் விரும்புகிறது என்று குறிப்பிட்டுள்ளாா்.

அதுபோல, பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவா் அமித் மாளவியா வெளியிட்ட பதிவில், ‘5 மாநில தோ்தா்தல்கள் மற்றும் அடுத்த 7 மாதங்களில் மக்களவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் காரணத்தால், அரசு நிா்வாகத்தை நாம் கைவிட்டுவிட வேண்டுமா’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

கருத்துகள் இல்லை: