ஞாயிறு, 22 அக்டோபர், 2023

பாலத்தீனர்களை கிராமம்கிராமமாக காலி செய்யும் இஸ்ரேலியர்கள்

மேற்கு கரையில் வசித்தவர்களின் நிலை என்ன ?

BBC News தமிழ் :  பாலத்தீனர்களை கிராமம் கிராமமாக காலி செய்யும் இஸ்ரேலியர்கள் - மேற்கு கரையில் என்ன நடக்கிறது?
மேற்கு கரையில் வசித்தவர்களின் நிலை என்ன ?
மேற்கு கரையில் குடியேறிய இஸ்ரேலியர்கள் பாலத்தீன விவசாயியை கற்களால் தாக்கும் காட்சி. (2020 அக்டோபரில் எடுக்கப்பட்டது)
அபேத் வாடிக்கு தனது தொலைபேசியில் செய்தி வந்தபோது, அவர் இறுதிச் சடங்கிற்காக தனது வீட்டில் இருந்து கிளம்பிக் கொண்டிருந்தார்.


முகமூடி அணிந்த ஒரு குழுவினர் கோடரிகள், பெட்ரோல் டப்பா மற்றும் செயின்சாவுடன், ஹீப்ரு மற்றும் அரேபிய மொழியில் மிரட்டும் ஒரு வீடியோ அது.
"குஸ்ரா கிராமத்தின் சாக்கடையில் உள்ள அனைத்து எலிகளுக்கும், நாங்கள் உங்களுக்காகக் காத்திருக்கிறோம், நாங்கள் உங்களுக்காகத் துக்கப்பட மாட்டோம்," என அந்த வீடியோவில் உள்ளவர் பேசுகிறார்.

"பழிவாங்கும் நாள் வருகிறது," என்றும் அதில் கூறுகிறார்.

குஸ்ரா, அபேத் வாடியின் கிராமம். மேற்குக் கரையின் வடக்குப் பகுதியில் நப்லஸுக்கு அருகில் இந்த கிராமம் உள்ளது. கிராமத்தைச் சேர்ந்த நான்கு பாலத்தீனர்களுக்கு அன்று இறுதிச் சடங்கு நடக்கவிருந்தது.

இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் குஸ்ராவிற்குள் நுழைந்து பாலத்தீன குடும்பங்களின் வீடுகளைத் தாக்கியதற்கு முந்தைய நாள் - அக்டோபர் 11 புதன்கிழமை - மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

நான்காவது ஒருவர், இஸ்ரேலிய வீரர்களுடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அடுத்த நாள், குஸ்ரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள், சுமார் அரை மணிநேர தொலைவில் உள்ள மருத்துமவனைக்குச் சென்று இறந்தவர்களின் உடல்களைப் பெற்று திரும்பத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

ஆனால், அந்த மருத்துவமனைக்குச் சென்று திரும்புவதற்கு, இஸ்ரேலிய குடியேற்றங்களைக் கடக்க வேண்டும். அது, இஸ்ரேலிய குடியேற்றங்கள் நிறைந்த பகுதி. சாதாரண காலங்களிலேயே அங்கு இஸ்ரேலிய குடியேற்றங்களில் உள்ளவர்களுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையிலான வன்முறை அபாயம் அதிகம் உள்ள பகுதிகள்.

அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, இந்தப் பகுதியில் வன்முறை அதிகளவு உயர்ந்துள்ளது.

மருத்துமவனைக்குச் செல்ல தயாராக இருந்த அபேத் வாடி தனது போனை கீழே வைத்துவிட்டு, மருத்துமவனைக்கு புறப்படும் வேலையை தொடர்ந்தார். மருத்துவமனையில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நான்கு ஆண்களின் உடல்களை அவர்களின் வீட்டிற்கு எடுத்து வர வேண்டியிருந்தது.

“மிரட்டல் விடுத்தாலும் பின்வாங்கப் போவதில்லை. இதுபோல நிறைய கேட்டிருக்கிறேன்,” என்கிறார் அபேத் வாடி.

அவர் தொலைபேசிக்கு செய்தி வந்தபோது, அடுத்த சில மணிநேரங்களில், இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் இறுதி ஊர்வலத்திற்கு வருவார்கள், அதில் தனது சொந்த சகோதரர் மற்றும் இளம் மருமகன் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.

"நாங்கள் இறுதி ஊர்வலத்தை ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தாமதப்படுத்தியிருந்தால், என்ன நம்மை நடந்திருக்கும்? இரண்டாம் நாளே இங்கு குடியேறியிருந்தவர்கள் கிளம்பியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?,” எனக் கேட்டார் அபேத் வாடி.

தாக்கப்படும் பாலத்தீனர்கள்

அபேத் வாடி
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின்படி, ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகான இரண்டு வாரங்கள், மேற்குக் கரையில் உள்ள பாலத்தீனர்களுக்கு மிகக் கடுமையான காலமாக இருந்தது.

அந்தப் பகுதியில் இருந்த 75 பாலத்தீனர்களை, இஸ்ரேலிய ராணுவம் அல்லது குடியேறியவர்கள் கொன்றுள்ளனர். இப்படி குடியேறியவர்களால் தினமும் மூன்று முதல் எட்டு வன்முறை சம்பவங்கள் கடந்த இரண்டு வாரமாக நடந்ததாக ஐ.நா. கூறுகிறது.

பாலத்தீன அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், கடந்த வியாழன் அன்று, இஸ்ரேலியப் படைகள் குறைந்தது 12 பேரைக் கொன்றதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரத்தில், ஒரு ராணுவ அதிகாரி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் வன்முறைகள் கட்டுப்பாட்டை மீறி நடக்கும் ஆபத்து உள்ளதாக ஐ.நா கடந்த வாரம் எச்சரித்துள்ளது.

காஸாவில் விரிவடைந்து வரும் பேரழிவு உலகின் கவனத்தை ஈர்க்கும் அதே வேளையில், இஸ்ரேலிய குடியேற்றக்காரர்கள் தங்களது கிராமங்களுக்குள் நுழைந்து பாலஸ்தீன குடிமக்களை மிரட்டியும், கொலை செய்தும், வெளியேற்ற செய்வதாகக் கூறுகின்றனர். மேற்கு கரையில் உள்ள பாலத்தீனவாசிகள்.

வீடியோ காட்சிகள் அல்லது கிராமவாசிகளின் நேரில் கண்ட சாட்சிகளின் படி, குறைந்தது மூன்று நிகழ்வுகளில், இஸ்ரேலிய குடியேறியவாசிகள் ராணுவ சீருடைகளை அணிந்துள்ளனர் அல்லது இஸ்ரேலிய ராணுவத்துடன் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர்.

குஸ்ராவில் தற்போது இறந்துள்ள முதல் மூன்று ஆண்கள், இஸ்ரேல் குடியேற்றவாசிகளால் தாக்குதலக்கு உள்ளான ஒரு குடும்பத்தை பாதுகாக்கச் சென்றுள்ளனர். அப்போது, இஸ்ரேல் குடியேற்றவாசிகளால் கொல்லப்பட்டதாக, அந்த கிராமத்தில் உள்ள பலர் பிபிசியிடம் தெரிவித்தனர்.

இஸ்ரேல் குடியேறியவர்கள் துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி

ஊரைக் காலி செய்யும் பாலத்தீனர்கள்

உதவிக்கு சென்ற பாலத்தீனிய ஆண்கள் மீது இஸ்ரேல் குடியேறியவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டனர்

இறந்தவர்கள், ஹசன் அபு சொரூர்(16), ஒபைடா அபு சொரூர்(17), மற்றும் முசாப் அபு ரெடா(25) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்த வன்முறையின்போது, பலர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சையளிப்பவர்களில் அமிர் ஒடிஹிம் ஒருவர்.

சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்த 17-வயது ஒபைடா அபு சொரூர் குறித்த தகவலை அவரத தந்தை சைத் ஒடிஹிடம் சொல்ல அவருக்கு அழைத்தேன். “உங்கள் மகன் சேலான காயமடைந்துள்ளார் என நான் அவரிடம் சொன்னேன். என்னால், இந்த அதிர்ச்சி தகவலை அவரிடம் தொலைபேசியில் சொல்ல முடியவில்லை,” என்றார் அமிர்.

மருத்துமவனைக்கு விரைந்துள்ளார் சைத்.

அப்போது, “என் மகன் காயமடைந்ததாக அவர்கள் என்னிடம் சொன்னார்கள், ஆனால், அந்த நேரத்தில் அவரை பாரக்க எனக்கு வாய்ப்பு இல்லாமல் போனது,” என அன்று நடந்ததை நினைவு கூர்ந்தார் சைத்.

“நான் இப்போதே என் மகனைப் பார்க்க வேண்டும் என்று அங்கிருந்தவர்களிடம் கூற, அவர்கள் என்னை அந்த அறைக்குள் அழைத்துச் சென்றனர். நான் அந்த அறைக்குள் நுழைந்து பார்த்தபோது, என் மகன் கடவுளின் கிருபையால் தியாகியாகிருப்பதைக் கண்டேன்,” என்றார்.

இறுதி ஊர்வலத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு
இஸ்ரேலிய குடியேற்றக்காரர்களால் கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

உயிரிழந்த நால்வருக்கும் மறுநாள் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. அபேத் வாடி, முகமூடி அணிந்த மனிதர்களின் கோடரிகள் மற்றும் செயின்சாக்கள் போன்ற உருவங்களை மனதில் இருந்து விலக்கி, உடல்களை மருத்துவமனையில் இருந்து குஸ்ராவுக்கு கொண்டு வரும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார்.

கார்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் நப்லஸ்-ரமல்லா சாலையில் செல்லும் போது, இஸ்ரேலிய குடியேற்றக்காரர்களால் கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வீடியோ காட்சிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் சாட்சியங்களின்படி, அந்த ஊர்வலத்தின்போது, குடியேற்றவாசிகள் கான்வாய் மீது கற்களை வீசினர். இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற சிலர், பதிலுக்கு கற்களை எறிந்தனர். இதற்கு, இஸ்ரேலிய குடியேற்றவாசிகளும், ராணுவ வீரர்களும் துப்பாக்கிச் சூட்டில் பதிலளித்தனர்.

இந்த கடுமையான மற்றும் சீரற்ற துப்பாக்கிச் சூட்டில், அபேட் வாடி தனது சகோதரரும்,ஃபதா இயக்கத்தின் 63 வயதான உள்ளூர் அரசியல்வாதியுமான இப்ராஹிமையும், 24 வயதான சட்ட மாணவர் இப்ராஹிமின் மகன் அகமதையும் இழந்தார். மோதலின் ஒரு பகுதியின் வீடியோ காட்சிகள் அகமது மற்றும் மற்றவர்கள் துப்பாக்கிச் சூட்டில் இருந்து ஓடுவதைக் காட்டுகின்றன.

"என் மருமகனின் வயிற்றில் இரண்டு முறையும் கழுத்தில் ஒரு முறையும் சுடப்பட்டதாகவும், என் சகோதரன் இடுப்பிலும், இதயத்தை நோக்கியம் சுடப்பட்டதாகவும் என்னிடம் சொன்னார்கள்," என்றார் வாடி.

"எங்கள் இறுதி ஊர்வலத்தில் ஆயுதங்கள் எதுவும் இல்லை," என்றும் அவர் கூறினார்.

"வழக்கமாக நாங்கள் கார்களில் பாலத்தீனக் கொடியை பறக்க விடுவோம், ஆனால் பயத்தின் காரணமாக நாங்கள் எங்கள் கொடியை கூட அன்று பறக்கவிடவில்லை." என்றார் வாடி.

அச்சத்தில் உறைந்துள்ள குஸ்ரா கிராமம்

இச்சம்பவங்களைத் தொடர்ந்து குஸ்ரா கிராமமே அச்சத்தில் உள்ளதாக கிராமவாசிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

கடந்த வார இறுதியில் அப்பகுதியில் ஆலிவ் சீசன் ஆரம்பமாக இருந்தது, ஆனால் அறுவடையை நம்பி வருமானம் பெறும் குடியிருப்பாளர்கள், குடியேற்றவாசிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு பயந்து கிராமத்தின் புறநகரில் உள்ள தோப்புகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தனர்.

ஐ.நா.வின் தரவுகளின்படி, சமீபத்திய ஹமாஸ் தாக்குதலுக்கு முன்னதாகவே குடியேற்றவாசிகளால் குறிப்பிடத்தக்க அளவு வன்முறை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாததமும் 100க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மேலும், ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் மட்டும் சுமார் 400 பேர் தங்களது நிலத்தில் இருந்து வெளியிற்றப்பட்டுள்ளதாக ஐ.நா.குறிப்பிடுகிறது.

இஸ்ரேலிய மனித உரிமைகள் அமைப்பான பி’ட்செலெம்(B'Tselem) ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு,"காஸா மற்றும் இஸ்ரேலின் வடக்கே முழு சர்வதேச மற்றும் உள்ளூர் கவனமும் குவிந்துள்ளதை பயன்படுத்தி மேற்குக் கரையில் குடியேறியவர்களின் ஒருங்கிணைந்த பல்வேறு முயற்சிகளை ஆவணப்படுத்தியுள்ளது.

ஹமாஸ் தாக்குதலுக்குப் பின் முதல் ஆறு நாட்களை உள்ளடக்கிய பி’ட்செலெமால் தொகுக்கப்பட்ட தரவுகளின்படி, மேற்குக் கரையில் பாலத்தீனர்களின் சொத்துக்களுக்கு குடியேற்றவாசிகள் அச்சுறுத்தலாக இருந்ததாகவும், உடல்ரீதியாக தாக்குதல் அல்லது சேதம் விளைவித்ததாகவும், இந்த இரு வகைகளிலும் குறைந்தது 46 தனித்தனி சம்பவங்கள் நடந்துள்ளதாக பதிவு செய்துள்ளது.

"கடந்த வாரத்தில் குடியேறியவர்களால் அச்சுறுத்தப்பட்டதால் நிறைய மேய்க்கும் குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் தப்பி ஓடிவிட்டன" என்று பி’ட்செலெமின் செய்தித் தொடர்பாளர் ராய் யெலின் கூறினார். "குடியேறுபவர்கள் குடியிருப்பாளர்களுக்கு வெளியேற காலக்கெடுவை வழங்குகிறார்கள், இல்லையெனில் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அவர்களிடம் கூறுகிறார்கள். இப்படியான அச்சுறுத்தல் காரணமாக சில கிராமங்கள் முற்றிலுமாக காலியாகிவிட்டன" எனக் கூறினார் அவர்.

பாலத்தீனர்களை கிராமம்கிராமமாக காலி செய்யும் இஸ்ரேலியர்கள்

காலியாகும் கிராமங்கள்

அப்படி காலியான கிராமங்களில் ஒன்றான வாடி அல்-சிக், ரமல்லாவுக்கு அருகில் உள்ளது. முன்பு சுமார் 200 பாலத்தீனிய பெடோயின் சமூகம் வசித்து வந்தது.

"பல மாதங்களாக நாங்கள் இரவும் பகலும் குடியேற்றவாசிகளின் துன்புறுத்தல் மற்றும் தாக்குதல்களை எதிர்கொண்டோம், ஆனால் போர் தொடங்கியதில் இருந்து தாக்குதல்கள் அதிகரித்தன," என்றார் வாடி அல்-சிக்கைச் சேர்ந்த விவசாயி அப்துல் ரஹ்மான் கப்னா.

அக்டோபர் 9 ஆம் தேதி, ஏறத்தாழ 60 குடியேற்றவாசிகளைக் கொண்ட குழு, தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களை தாக்கியதாக இப்போது நாடுகடத்தப்பட்ட மூன்று குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

"அவர்கள் எங்களை ஆயுதங்களால் தாக்கி அனைவரையும் பயமுறுத்தினார்கள். பின்னர் அவர்கள் எங்கள் ஆடுகளுடன் வெளியே செல்ல எங்களுக்கு ஒரு மணி நேரம் கொடுத்தார்கள், நாங்கள் வெளியேறவில்லை என்றால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினர்." என்றார் கப்னா.

குடியிருப்பாளர்கள் தப்பிக்க 10 கி.மீ.க்கு அதிகமாக நடந்தனர்.

மற்றொரு குடியிருப்பாளர், அலி அராரா, 35, பிபிசியிடம் பேசுகையில்,"குடியேறுபவர்கள் எங்கள் வீடுகளில் இருந்து அனைத்தையும் திருடினர். என் மகள் பயந்துவிட்டாள், அவர்கள் எங்களை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டார்கள்," என்றார் அவர்.

வாடி அல்-சிக்கில் அச்சுறுத்தல் மற்றும் கட்டாய இடப்பெயர்வு ஆகியவை அக்டோபர் 7 முதல் பிராந்தியம் முழுவதும் உள்ள சமூகங்களில் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டுள்ளதாக மேற்கு கரையில் நடக்கும் வன்முறையைக் கண்காணிக்கும் இஸ்ரேலிய மனித உரிமைக் குழுக்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரத்தில் நடந்த ஒரு சம்பவத்தில் பதிவான ஒரு வீடியோவில், இஸ்ரேலிய குடியேற்றவாசி ஒருவர் ஹெப்ரோனுக்கு அருகிலுள்ள அல்-துவானி என்ற பாலத்தீன கிராமத்திற்குள் நுழைந்து ஆயுதங்கள் எதுவும் இல்லாத ஒரு பாலத்தீனரை வயிற்றில் சுட்டுக் கொன்றார். .

இரண்டு ஆயுதமேந்திய குடியேற்றவாசிகள், ஒரு ராணுவ வீரருடன் சேர்ந்து, கிராமத்தின் புறநகரில் உள்ள ஒரு வீட்டைத் தாக்கியதில் இருந்து இந்த சம்பவம் தொடங்கியது என்று வீட்டின் உரிமையாளர் உட்பட மூன்று குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

"மூன்று இஸ்ரேலியர்கள் எனது வீட்டிற்கு வந்தனர், அவர்கள் ஆயுதம் ஏந்தியிருந்தனர், ஒருவர் ராணுவ சீருடையை அணிந்திருந்தார்" என்று 36 வயதான முசாப் ரபாய் கூறினார்.

"குடியேறியவர்களில் ஒருவர் வீட்டிற்குள் வந்து, என்னைத் தள்ளிவிட்டு, துப்பாக்கியால் தலையில் அடித்து, சுடப் போவதாக மிரட்டினார்," என்கிறார் முசாப்.

அவரின் அலறல் சத்தம்கேட்ட அக்கம் பக்கத்தினர் அவருக்கு உதவியதாக கூறினார் முசாப்.

முசாபிற்கு உதவியவர்களில் ஒருவர் தான் நான்கு பிள்ளைகளுக்கு தந்தையான ஜக்ரிஹா அத்ரா. ஆயுதமேந்திய குடியேற்றக்காரர் ஒருவர் திடீரென்று அத்ராவை அணுகி, தனது துப்பாக்கியால் அவரைத் தாக்கி, சில அடி தூரத்தில் இருந்து வயிற்றில் சுட்டார். இது அத்ராவின் உறவினரால் பதிவு செய்யப்பட்ட வீடியோவில் உள்ளது.

மேற்கு கரையில் வசித்தவர்களின் நிலை என்ன ?

ஆத்ரா இப்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார். "அவர் உயிர் பிழைத்தார், ஆனால் தோட்டா அவரது வயிற்றில் நிறைய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று அவரது உறவினர் பாஸல் கூறினார்.

தாக்குதலுக்கு உள்ளான முசாப் ரபாய், இந்த துப்பாக்கிச் சூடு, குடியேற்றவாசிகளின் பல நாட்கள் அச்சுறுத்தல் மற்றும் சொத்துக்களை அழித்ததன் உச்சக்கட்டமாகும் என்றார்.

"சனிக்கிழமை முதல் அவர்கள் துப்பாக்கி ஏந்தியபடி கிராமத்தைச் சுற்றி நின்று மரங்களை அழிக்க புல்டோசரைப் பயன்படுத்துகிறார்கள்," என்று அவர் கூறினார்.

"இங்கே கிராமத்தில் உள்ள ஆண்கள் ஷிப்டில் தூங்குகிறார்கள். ஒவ்வொருத்தரும் சில மணிநேரங்கள் மட்டுமே தூங்குகிறார்கள். ஒருவேளை குடியேறியவர்கள் தாக்கினால், யாராவது ஒருவராவது எப்போதும் விழித்திருக்க வேண்டும்,"என்றார் அவர்.

மேற்குக் கரை மற்றும் பிற இடங்களில் குடியேறியவர்களுக்கான அமைப்பான யேஷா கவுன்சிலிடம் கருத்து தெரிவிக்க பிபிசி கேட்டது ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர்.

பிராந்தியத்தில் குடியேறியவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பின்யாமின் கவுன்சிலின் செயல் தலைவர் மோதி யோகேவ், வன்முறையில் ஈடுபட்ட குடியேற்றக்காரர்கள் சமூகத்தின் விளிம்புநிலை மக்கள் எனக் கூறினார். "அவர்கள் இருந்தால், மற்ற குற்றவாளிகளைப் போல அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.

கருத்து கேட்க பல கோரிக்கைகளுக்கு இஸ்ரேலிய ராணுவம் மற்றும் இஸ்ரேலிய போலீஸ் படை பதிலளிக்கவில்லை.

இச்சம்பவங்கள் குறித்து பிபிசி பல முறை கருத்துகேட்டும், இஸ்ரேல் ராணுவமும், காவல்துறையும் பதிலளிக்கவில்லை.

மேற்கு கரையில் வசித்தவர்களின் நிலை என்ன ?

பல பாலஸ்தீனியர்களுக்கு இப்போது பயம் என்னவென்றால், மேற்குக் கரையின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.

மேற்கு கரையில் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்பது தான் பாலத்தீனர்களுக்கு இப்போது இருக்கும் பயம்.

கடந்த வாரம் இஸ்ரேல் அரசு 10,000 துப்பாக்கிகளை வாங்குவதாக இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு மந்திரி அறிவித்தார். மேற்குக்கரை குடியேற்றங்களில் உள்ளவர்கள் உட்பட இஸ்ரேலிய குடிமக்களுக்கு ஆயுதம் வழங்குவதற்கு அரசாங்கம் 10,000 துப்பாக்கிகளை வாங்கும் என்று அறிவித்தார்.

குஸ்ராவில், 10,000 துப்பாக்கிகள் பற்றிய செய்தியை தான் கேள்விப்பட்டதாக அபேட் வாடி கூறினார். "குஸ்ரா மக்களுக்கு இது எதையும் மாற்றாது," என்று அவர் கூறினார்.

"குடியேறுபவர்களின் கைகளில் நாங்கள் எப்போதும் துப்பாக்கியைப் பார்த்தோம், அவர்கள் நீண்ட காலமாக எங்களை நோக்கி சுடுகிறார்கள்," என்று அவர் கூறினார்.

குடியேறியவர்கள் மிகவும் ஆக்ரோஷமாக, தீவிரமானவர்களாக மாறியது போல் தோன்றியது. "பண்ணை வீடுகள் எரிக்கப்படுகின்றன, ஆலிவ் மரங்கள் வெட்டப்படுகின்றன, கார்கள் உடைக்கப்படுகின்றன, நிலம் திருடப்படுகிறது" என்று வாடி கூறினார்.

"இது எங்கள் கிராமம். நீங்கள் எந்த கிராமத்தைப் பார்த்தாலும்,அவர்களிடம் கோபமும் வேதனையும் மட்டுமே இருக்கும்," என்று அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: