Kalaignar Seithigal - prem Kumar : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (27.9.2023) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தொகுதி-4 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 10,205 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 12 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி, வாழ்த்தினார்.
பின்னர் விழாவில் முதலமைச்சர் ஆற்றிய உரை பின்வருமாறு :- “அரையணா காசாக இருந்தாலும் அரசாங்க காசு”- என்று கிராமங்களில் சொல்வார்கள். ஏனென்றால், அரசாங்க வேலைக்கு இருக்கின்ற மவுசு, எந்தக் காலத்திலும் குறையாது.
போட்டித் தேர்வுகளில் தேர்வு பெற்று, எப்படியாவது ஒரு அரசுப் பணியை வாங்கிவிட வேண்டும் என்பது, படித்த இளைஞர்களுடைய ஒரு பெரிய கனவு!
இந்த நொடி, உங்களுக்கும் – உங்கள் அப்பா, அம்மாவிற்கும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குமோ, அதே மகிழ்ச்சியோடுதான் நானும் இங்கே உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். ஒருவருக்கு வேலை கிடைக்கிறது என்றால், அது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பயனளிக்கும்.
இன்னும் சொல்லவேண்டும் என்று சொன்னால், பல தலைமுறைக்கும் பயனளிக்கும். அந்த வகையில், பல தலைமுறைக்கு பயனளிக்கப்போகின்ற பணி நியமன ஆணை தான், உங்கள் கையில் ஒப்படைத்திருக்கிறோம்.
பல லட்சம் பேர் தேர்வு எழுதி, லட்சத்தில் ஒருவராக நீங்கள் எல்லாம் தேர்வாகி இருக்கிறீர்கள். இப்படி லட்சத்தில் ஒருவராக இருக்கின்ற உங்களுக்கு, ‘மக்கள் சேவை’-என்ற ஒன்றுதான் இலட்சியமாக இருக்கவேண்டும். அதற்காக மட்டும்தான் நீங்கள் எல்லோரும் பணியாற்ற வேண்டும்.
மக்களுக்காக மக்களால் நடத்தப்படுவதே மக்களாட்சி! அந்த வகையில் அரசாங்கம் தீட்டுகின்ற எந்தத் திட்டமாக இருந்தாலும், அது மக்கள் நன்மைக்காகத்தான்!
அரசின் திட்டங்கள், பல்வேறு சேவைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் மிக முக்கியமான பணியை நீங்கள் எந்தக் குறையுமில்லாமல் நிறைவேற்ற வேண்டும்.
”மக்கள் சேவையே, மகேசன் சேவை”- என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார். அப்படிப்பட்ட மகத்தான பணிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கக்கூடிய உங்கள் எல்லோரையும் இந்த நேரத்தில் நான் மனதார பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன்.
நீங்கள் எல்லோரும் இப்போது அரசு ஊழியர்களாக ஆகியிருக்கிறீர்கள். அரசு ஊழியர்களில் தன்னலம் கருதாமல் மக்களுக்காகவே வாழுகிறவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக நான் இந்த மேடையில் நான் சொல்லியே ஆகவேண்டும்.
கடந்த சனிக்கிழமை, 23-ஆம் தேதி, நான் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தேன். "இறக்கும் முன்பு உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்" என்று அந்த அறிவிப்பில் சொல்லியிருந்தேன். மனித நேயமிக்க இந்த உடல் உறுப்பு தானம் செய்து, அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்ட முதல் நபர், ஒரு அரசு ஊழியர்தான்!
தேனி மாவட்டம், சின்னமனூரில் மூளைச்சாவு அடைந்ததால், உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர் வடிவேலு அவர்களது உடல் நேற்று, அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச் சடங்கில் நம்முடைய மாண்புமிகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களும், மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டார்கள்.
வடிவேலு அவர்களுடைய உடல் உறுப்புகளை தானமாகப் பெற்றவர்களின் குடும்பங்கள் சார்பாக மட்டுமில்லை, அவருடைய குடும்பத்தினருக்கு, தனிப்பட்ட என்னுடைய நன்றியையும், ஏன், உங்கள் அரசு ஊழியர்களாக இங்கே இருக்கக்கூடிய உங்கள் எல்லோருடைய சார்பில் தமிழ்நாடு முதலமைச்சராவும் நான் அந்த குடும்பத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்தச் செய்தி உடல் உறுப்பு தானம் பற்றிய ஒரு பெரும் விழிப்புணர்வை நிச்சயம் ஏற்படுத்தும். அந்த வகையில், அரசு ஊழியராக பணியாற்றுகின்ற வடிவேலு அவர்கள், காலத்திற்கும் மக்களால் நினைவுகூரப்படுவார்.
ஒரு கருவியோ அல்லது இயந்திரமோ சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால், அதில் இருக்கின்ற ஒவ்வொரு பாகமும் பழுதில்லாமல் சிறப்பாக செயல்படவேண்டும். அது போலத்தான், அரசு என்ற மாபெரும் இயந்திரம் சீரிய முறையில் மக்களுக்கு சேவை செய்ய, அரசு ஊழியர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் முழு ஈடுபாட்டுடன் பங்களிக்க வேண்டும்!
"செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல்"
என்ற வள்ளுவரின் வாக்குக்கு நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கொடுத்த உரை அதில் என்ன சொன்னார் என்றால், "ஒரு செயலை செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலை ஆராய்ந்து, அதனை நிகழ்த்துவதற்கான காலத்தினை உணர்ந்து செயல்படுத்த வேண்டும்" என்பதுதான்.
நமது அரசாங்க இயந்திரத்தை திறம்பட செயல்படுத்த தகுதியான அரசு அலுவலர்கள் தெரிவு செய்வதை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகிய முகமைகள் இந்த வேலையை சிறப்பாக செய்து கொண்டு வருகிறார்கள்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற போட்டித் தேர்வுகளுக்கு இலட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பிக்கிறார்கள். அதனால் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது.
இதைச் சரிசெய்ய, விடைத்தாள்களை மதிப்பீடு செய்கின்ற முறையை எளிதாக்கவும், கால தாமதத்தை தவிர்க்கவும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 95 இலட்சம் ரூபாய் செலவில், ஆன்-ஸ்கிரீன் எவாலுவேஷன் லேப் என்ற உயர் தொழில்நுட்பம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
அதே போல, ஆசிரியர் பணிகளுக்கான தெரிவுகள் வெளிப்படையாகவும், விரைவாகவும் செய்து முடிக்க, நமது அரசு 20-9-2021 அன்று குழு ஒன்று அமைக்க ஆணைகள் வெளியிடப்பட்டது.
அந்தக் குழுவினுடைய பரிந்துரை அடிப்படையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தை மறுசீரமைப்பு செய்து 3-1-2023 அன்று ஆணைகள் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி 74 புதிய பணியிடங்கள் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தொழில்நுட்ப பிரிவு, கணக்குப்பிரிவு, நிர்வாகப் பிரிவு, அறிவிக்கைப் பிரிவு, சட்டப்பிரிவு, தகவல் உரிமைச் சட்டப்பிரிவு, குறைதீர்க்கும் பிரிவு ஆகிய பிரிவுகள் எல்லாம் நிரப்பப்பட்டிருக்கிறது.
நம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்று முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில்தான் தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு தரப்பட்டது.
கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக நான் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பயன்பெறவேண்டும் என்று தமிழ் கட்டாயத் தகுதித் தேர்வு தாளை அறிமுகப்படுத்தி, அது இப்போது நடைமுறையில் இருக்கிறது. இதற்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கின்ற வகையில், தமிழ் கட்டாயத் தகுதித் தேர்வு போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்கின்ற எல்லோரும் எதிர்கொள்ளவேண்டும் என்று உரிய சட்டத்திருத்தமும், சட்டமன்றத்தில் நாங்கள் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறோம்.
தமிழ்நாட்டு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்ற பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள் மற்றும் வாரியங்கள் போன்றவற்றில் இருக்கின்ற காலிப் பணியிடங்கள் தேர்வாணையத்தின் வாயிலாக நிரப்ப புதிய சட்டத்தை இயற்றி, அதன் அடிப்படையில், இப்போது தேர்வாகியிருக்கின்ற உங்களுக்கும் இன்று உரிய பணி ஆணை வழங்க இருக்கின்றேன்.
தமிழ்நாட்டுல இருக்கின்ற பல்வேறு ஒன்றிய அரசுத் துறைகளான இரயில்வே - அஞ்சல் துறை - வங்கிகள் – ஆகியவற்றில் இருக்கக்கூடிய காலிப் பணியிடங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தொடர்ந்து நாம் வலியுறுத்திக் கொண்டு வருகிறோம். இது தொடர்பாக மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு 12.10.2021 அன்று கடிதமும் எழுதியிருக்கிறேன்.
அது மட்டுமில்லாமல், ஒன்றிய அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் தமிழ் மொழியிலும் நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறேன். 26.12.2022 அன்று இதை மீண்டும் வலியுறுத்தி இருக்கிறேன். என்னுடைய இந்தக் கோரிக்கையை ஏற்று, ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் வாயிலாக, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தரத்தில், பன்முகப் பணியாளர் (மல்ட்டி- டாஸ்கிங்- ஸ்டாப்ஸ்) பதவிக்காக நடத்தப்படுகின்ற தேர்வை தமிழ் மொழியிலும் எழுதலாம் என்று ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இதை தமிழ்நாட்டு இளைஞர்களுக்காக கழக அரசு பெற்றுத் தந்திருக்கக்கூடிய ஒரு வெற்றியாகவே நான் கருதுகிறேன்.
என்னோட கனவுத் திட்டமான ’நான் முதல்வன் திட்டம்’ பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். கடந்த ஆண்டு மட்டும் 13 லட்சம் இளைஞர்களுக்கு இந்தப் பயிற்சி தரப்பட்டுள்ளது. இது நிர்ணயித்த இலக்கான பத்து லட்சத்தை தாண்டி, பயிற்சி பெற்றிருக்கிறார்கள்!
தனியார் நிறுவனங்களில் பல ஆயிரங்கள் ரூபாய் செலவு செய்து பெற வேண்டிய பயிற்சியை நம்முடைய இளைஞர்களுக்கு இலவசமாக இப்போது வழங்கிக் கொண்டு வருகிறோம்.
ஒன்றிய அரசால் நடத்தப்படுகின்ற போட்டித் தேர்வுகளிலும், நம்முடைய மாணவர்கள் அதிகமாக தேர்வாகவேண்டும் என்று S.S.C, R.R.B, வங்கிப் பணி போன்றவற்றிற்காக 5000 பேருக்கு ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகளை நான் முதல்வன் திட்டத்தில் நாம் நடத்திக் கொண்டு வருகிறோம்.
7.03.2023 அன்று இது துவக்கி வைக்கப்பட்டது. இதில் பயிற்சி பெற்ற 90 நபர்கள், ஒருங்கிணைந்த வங்கிப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட முதனிலைத் தேர்வில் தேர்வாகியிருக்கிறார்கள். மண்டல – ஊரக வங்கிகளில் எழுத்தர் பணிக்கான முதனிலைத் தேர்வில் 40 பேர் தேர்வாகியிருக்கிறார்கள்.
குடிமைப் பணித் தேர்வில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெறவேண்டும் என்று முதனிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 1,000 பேருக்கு மாதந்தோறும் 7,500 ரூபாய் ஊக்கத்தொகையும், பயிற்சியும் வழங்குகின்ற புதிய திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
வருகின்ற அக்டோபர் மாதத்திலிருந்து இது தொடங்கப்படும். இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி, மாநில அரசுப் பணிகள் போலவே, ஒன்றிய அரசுப் பணிகளிலும் நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகளவில் தேர்வாக வேண்டும்.
நம்முடைய அரசு அமைந்த கடந்த இரண்டாண்டு காலத்தில் 12 ஆயிரத்து 576 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது 10 ஆயிரத்து 205 நபர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல், நடப்பாண்டில் மேலும் 17 ஆயிரம் பேருக்கு பல்வேறு அரசுப் பணிகள் வழங்கப்பட இருக்கிறது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில், பல்வேறு அரசுப் பணிகளுக்கு சுமார் 50 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் நான் இங்கே அறிவிக்க விரும்புகிறேன்.
உங்களைப் போன்ற இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் அரசு வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறுவது என்பது அந்தக் குடும்பங்களில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தித் தருவதோடு அரசு நிர்வாகத்தில் ஒரு புதிய வேகத்தையும், உற்சாகத்தையும் இது நிச்சயமாக அளிக்கும்.
அரசின் திட்டங்கள் பாரபட்சமில்லாமல் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சென்றடைய வேண்டும். நம்முடைய அரசின் கொள்கையை அரசின் அங்கமாக இருக்கின்ற நீங்கள் எல்லோரும் மனதில் வைத்து செயலாற்றவேண்டும் என்று நான் உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த அரசு சமூகநீதி காக்கும், மக்கள் நலன் பேணக்கூடிய அரசாக விளங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு அரசனிடம் முறை வேண்டும் போதெல்லாம், எளிமையாக காட்சி தந்து தீர்ப்பை பெற்றால், விரும்பும் போது மழையை பெற்றது போல மக்கள் மகிழ்வார்கள் என்று புறநானூறு சொல்லுகிறது.
“உட்கார வைத்து பேசுங்கள்.. அதுதான் சக மனிதருடைய சுயமரியாதை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
அதைப் போல மக்கள் உங்களிடம் கோரிக்கையுடன் வரும்போதெல்லாம் என்னுடைய இன்னொரு முகமாக, என்னுடைய பிரதிநிதியாக, இந்த அரசாங்கத்தின் அலுவலராக இருக்கின்ற நீங்கள், மக்களை எளிமையாக அணுகி, அவர்கள் குறைகளையும், பிரச்சனைகளையும் தீர்த்து வைத்து, அரசின் திட்டங்களையும், கொள்கைகளையும் அவர்களிடம் சேர்த்து பயனடையச் செய்யவேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள் அதைத்தான் நீங்கள் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
ஏதோ ஒரு ஊரில், ஏதோ ஒரு ஏழையின் கண்ணீரை உங்கள் கரங்கள் துடைத்தால் அதனால் அடைகின்ற பெருமை என்பதும் என்னைத்தான் சேரும். அதே நேரம், யாரோ ஒருத்தர் உதாசீனப்படுத்தினால் அதனால் வருகின்ற வசவும் – திட்டும் கூட என்னைத்தான் வந்து சேரும். எனவே எனக்கு நல்ல பெயராக இருந்தாலும் – கெட்ட பெயராக இருந்தாலும் உங்கள் செயல்பாட்டைப் பொறுத்துதான் அது அமையும்.
உங்களில் யாரும் பொது ஒழுங்கிற்கு மாறாக, பண்பாட்டிற்கு மாறாக நடந்து கொள்ள மாட்டீர்கள் என்று நான் முழுவதுமாக நம்புறேன். நீங்களும் நடுத்தர - ஏழை எளிய – விளிம்பு நிலைக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்தான். யாரால் ஆளாக்கப்பட்டு இந்தப் பணியை நீங்கள் அடைந்திருக்கிறீர்களோ அந்த மக்களுக்கு நீங்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
குரூப்-4 என்பது உங்க முதல் படிதான். இதற்கு அடுத்து மேல் நிலையில் உள்ள தேர்வுகளையும் எழுதி உயர்பொறுப்புகளுக்கு வாருங்கள்.
உங்களால் முடியும்! உங்களால் மட்டுமே முடியும்! உங்களால் முடியாதது வேறு யாராலும் முடியாது என்று இந்த மாநிலத்தின் முதலமைச்சராக மட்டுமில்லை, உங்களுடைய தந்தை நிலையில் இருந்தும் என்னுடைய வாழ்த்துகளைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
நிறைவாக, இன்று பணியாணை பெற்றிருக்கும் உங்களுக்கும், இந்த நிகழ்ச்சியின் மூலமாக அனைத்து மாண்புமிகு அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை அலுவலர்கள் வரை உள்ள அனைவருக்கும் நான் ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புறேன்.
உங்களிடம் கோரிக்கை மனுவுடன் வருகிறவர்களிடம் முதலில் உட்கார வைத்து பேசுங்கள். அவர்களுடைய பிரச்சினையை, கோரிக்கையை காது கொடுத்து கேளுங்கள். அதுவே வந்தவர்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கையைத் தரும்; மன நிறைவை தரும்! உட்கார வைத்து பேசுறதுதான், சக மனிதருடைய சுயமரியாதை என்று நினைத்து அதற்கு மதிப்பு கொடுங்கள். அதனால், என்னுடைய இந்தக் கோரிக்கையை எல்லாரும் கடைப்பிடிப்பீர்கள் என்று நம்புகிறேன். அப்படி கேட்டால், அவர்களுடைய பாதி பிரச்சனை தீர்ந்து போய்விடும், பாதியளவுக்கு நிம்மதியை அடைந்துவிடுவார்கள். "இது உங்கள் அரசு தான்" என்பதை உங்களை சந்திக்க வருகிறவர்களிடம் உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக