புதன், 27 செப்டம்பர், 2023

விஜயலட்சுமி ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!

minnambalam.com - monisha : சீமான் மீது அளித்த புகார் குறித்த விசாரணைக்கு நடிகை விஜயலட்சுமி ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 26) உத்தரவிட்டுள்ளது.
தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏமாற்றிவிட்டதாக கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
அந்த புகாரை அப்போதே வாபஸ் வாங்கிய நிலையில் தற்போது மீண்டும் சீமான்  மீது புகார் கொடுத்து இந்த புகாரையும் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி இரவோடு இரவாக வாபஸ் பெற்றுக் கொண்டார்.
இதனிடையே விஜயலட்சுமி தன் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான் நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது ஏன் என விளக்கம் அளிக்க வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 26 ஆம் தேதிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒத்தி வைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் வழக்கை 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது ஏன் என்பது குறித்து பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் சீமான் மீதான வழக்கை ரத்து செய்வதற்கு நடிகை விஜயலட்சுமியிடம் விளக்கம் கேட்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இதனால் வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி நடிகை விஜயலட்சுமி ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மோனிஷா

கருத்துகள் இல்லை: