Jaganathan Sekar : எம்.எஸ்.சுவாமிநாதனும் நம்மாழ்வாரும்:
சுவாமிநாதனையும் நம்மாழ்வாரையும் எதிரெதிர் துருவங்களில் நிறுத்தி ஒரு பக்கம் நின்று இன்னொருவரை சாடுதல் கூடாது இருவரும் தேவை, இருவரையும் போற்றுவோம் என்கிறார் சமஸ்.
அப்பதிவில் சிறு கமெண்ட் எழுதினேன். சற்றே விரிவாக இங்கு.
இல்லை நம்மாழ்வாரையும் சுவாமிநாதனையும் ஒரு சேர பாராட்ட முடியாது, கூடாது.
நம்மாழ்வார் அறிவியலுக்கு எதிர்புறம் நின்று அறிவியல் சம்பந்தமில்லாத கருத்துகளைக் கொண்டு அறிவியலை எதிர்த்தவர்.
அப்படியான எதிர்ப்பில் நின்று போன கடிகாரம் ஒரு நாளில் இரண்டு முறையாவது சரியான நேரத்தை காட்டுவதைப் போல் இரண்டு கருத்துகளாவது பொருந்தும்
அதற்காக அத்தரப்புக்கு அறிவியல் தரப்புக்கு நிகரான மதிப்பளிக்கக் கூடாது.
அறிவியலும், அறிவியலாளர்களும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களல்ல
ஆனால் அந்த விமர்சனத்துக்கென்று சட்டகம் உள்ளது.
மனம் போன போக்கில் இயற்கை என்ற போர்வையில் கருத்துகளை அள்ளித் தெளித்தவர் நம்மாழ்வார்.
அவர் பொருட்படுத்தக் கூடியவரே அல்ல
அதுவும் சுவாமிநாதனை பேசும் தளத்தில் பொருட்படுத்தக் கூடியவரல்ல.
தமிழகத்துக்கென்று ஒரு அறிவியல் விரோத போக்கு ஒன்றுண்டு.
இந்த புள்ளியில் தான் இந்துத்துவத் தரப்பும் திராவிட தரப்பும் ஒன்று சேரும்.
இருவரும் மேற்கத்திய அறிவியலை சந்தேகம் கொண்டு பார்ப்பதோடு மரபு சார் வழிகள் என்ற போர்வையில் அறிவியலுக்கும் மானுடத்துக்கும் விரோதமானவற்றை முன்மொழிவார்கள்.
ஒருவருக்கு ஆயுர்வேதமே சிறந்த மரபு மருத்துவம், இன்னொருவருக்கு சித்தா. ஒருவருக்கு மூலிகை, இன்னொருவருக்கு கபசுரக் குடிநீர்.
சுவாமிநாதனும் பசுமைப் புரட்சி இன்று வேறு தளங்களில் முன்னேறிவிட்ட அறிவியல் தளத்தில் இருந்து விமர்சனம் செய்யப்பட்டுள்ளனர்.
எப்பேற்பட்ட இழி நிலையிலிருந்து பசுமைப் புரட்சி நம்மை மீட்டதென்று அறிய பெஞ்சமின் சீகல் எழுதிய “Hungry Nation: Food, Famine and the making of modern India” முக்கியமானதொரு அறிமுகம்.
இந்தியா பசியை விறட்டி அடித்ததில் இரண்டு தமிழர்கள் பெரும் பங்காற்றினர், ஒருவர் சுவாமிநாதன், இன்னொருவர் சி.சுப்ரமணியம்.
பஞ்சம் தலை விரித்தாடிய ஒரு காலத்தில் நேரு ஒரு பொதுக்கூட்டத்துக்கு போனார்,
வந்தவர்கள் “நேரு வாழ்க” என்று கோஷமிட்ட போது, “உங்களுக்கு உணவில்லை, உணவு தரும் நிலையில் இந்தியா இல்லை எதற்கு இந்த கோஷம்” என்று சொல்லி நேரு அழுதார்.
ஜெயமோகன் ஒரு முறை (2009?)) கலிபோர்னியா சென்ற போது அங்கு ஒரு அருங்காட்சியகத்தில் அமெரிக்காவுக்கு உணவு தருமாறு இறைஞ்சி நேரு எழுதிய கடிதமொன்று இருந்ததாம்.
ஜெயமோகனுடன் சென்றவர், “பாருங்க சார் நம்மள அவமானப்படுத்தறுதுக்கே இக்கடிதத்தை காட்சிப் படுத்தியிருக்கிறார்கள்” என்றாராம்.
அதற்கு ஜெயமோகன் “நான் அப்படி நினைக்கவில்லை. பெரும் செல்வ சீமான் நேரு
ஆனால் தன் மக்கள் துயர் துடைக்க மண்டியிடவும் தயங்கவில்லை.
இப்படி ஒரு தலைவன் இருந்தான் என்பது எனக்கு பெருமை தான்” (நினைவில் இருந்து எழுதுகிறேன்
ஆகவே மேற்கோள்கள் சாராம்சங்கள்). பின்னர் இந்திராவை லிண்டன் ஜான்சனும் நிக்ஸனும் அவமதித்தனர். இனி இந்தியா உணவுக்கு கையேந்த கூடாதென்று உருவானதே பசுமைப் புரட்சி.
கடைசி வரை சோவியத் பேரரசு தன் குடிமக்களுக்கு உணவளிக்க அமெரிக்காவை தான் நம்பி இருந்தது. அதனோடு ஒப்பிட்டால் ஒரு வல்லரசு சாதிக்க முடியாததை இந்தியா சாதித்தது என்றால் அதில் சுவாமிநாதனின் பங்கு மிக முக்கியம்.
இந்தியாவில், அதிலும் தமிழ்நாட்டில், அப்துல் கலாம் விஞ்ஞானி என்று ஒரு புரளி உலவுகிறது.
அவர் விஞ்ஞானி அல்ல.
கூடங்குளம் பிரச்சனையின் போது அவரது பிம்பத்தை இந்திய அரசு அசிங்கமாக பயன்படுத்திக் கொண்டது. அறிவியலுக்கு புறம்பான கூக்குரல்களின் எதிர்ப்பை சமாளிக்க கலாம் பிம்பத்தை அரசு பயன்படுத்தியது.
அவரும் கூடங்குளம் அனுமின் நிலையம் 100% பாதுகாப்பானது என்று எந்த அறிவியலாளரும் சொல்லத் தயங்குவதை தயக்கமில்லாமல் சொன்னார்.
அது தவறு. இங்கே அறிவியலுக்குப் புறம்பான அச்சங்களை அறிவியலைக் கொண்டு வெளிப்படையாக விளக்காமல் இன்னொரு பிம்பத்தை வைத்து சமாளித்தார்கள்.
சமஸின் பதிவில் தொடர்ந்த உரையாடலில் அவர் மக்கள் நம்மாழ்வாரை அப்படியே ஏற்பதில்லை சாராம்சபடுத்திக் கொள்வார்கள், காந்தியை அப்படிச் சொல்வதில்லையா என்கிறார்.
இதுவும் உண்மை. ஆனால் இந்த சாரம்சபடுத்தலில் ஒரு அபாயகரமான சமரசம் இருக்கிறது.
“இதிலும் உண்மை”, “அதிலும் உண்மை” என்று இங்கே இரண்டு கவளம், அங்கே இரண்டு கவளம் என்று பந்தி சாப்பாடு மாதிரி அறிவியலும் அறிவியலுக்கு புறம்பான தரப்பும் ஒரு சேர பார்க்கப்படுகிறது.
அறிவியல் அறிந்து அறிவியலின் சட்டகத்துக்குட்பட்டு அறிவியலை கேள்விக் கேட்பது வேறு,
அறிவியலை அறியாமல், அறிவியலை மறுத்து குருட்டாம்போக்கில் கேள்விக் கேட்பது வேறு.
இரண்டாவது தரப்பை நாம் இடையீடு என்ற அளவில் கூட அங்கீகரிக்கவே கூடாது.
காந்தியை நாம் சாராம்சபடுத்தவில்லையா என்கிறார் சமஸ்.
ஆம் அதில் தான் பிரச்சனையே.
நாம் காந்தியை மத நல்லிணக்கம், ஒடுக்கப்பட்டவர் முன்னேற்றம், தீண்டாமை ஒழிப்பு என்று சாராம்சபடுத்தி ஏற்கவில்லை
மாறாக அந்நிய ஏகாதிபத்திய எதிர்ப்பு, ஹே ராம், கதராடை என்று சாராம்சபடுத்தி தான் ஏற்றோம். காந்திக்கே தன் அறிவியல் எதிர்ப்புகளின் எல்லையும் அடிப்படையும் பெரும் ஜனத்திரளுக்கு எற்றதல்ல என்று உணர்ந்து தான் தேசத்துக்கு நேருவின் தலைமை அவசியமென்று கருதினார்.
நம்மாள்வாரின் ப்பிரச்சனை அவரை சாராம்சபடுத்தினால் அறிவியல் எதிர்ப்பு, இயற்கை சார் வாழ்க்கை என்று தான் சொல்ல முடியும்.
அறிவியலும் வர்த்தக நலன்களும் பேராசைகளும் இணைவதால் தவறுகளும் குற்றங்களும் கூட நிகழ்கின்றன இது அறிவியலின் குற்றமன்று நம் அமைப்புகளின் குற்றம்.
இந்த தவறுகளும் குற்றங்களும் அறிவியல் சாராதவற்றிலும் நிகழ்கிறது.
நவீன மருத்துவத்துக்கு எதிராகப் பேசுவோர் பலரும் மருத்துவத் துறையின் ஊழல்களையும் பேராசைகளையும் மருத்துவ அறிவியலின் மீது சுமத்துகிறார்கள்.
நவீன மருத்துவம் இன்று செயல்படும் ஸ்கேலில் மரபு மருத்துவம் செயல்பட்டால் அத்துறையின் ஊழல்கள் மட்டுமல்ல அறிவியலுக்கு புறம்பான அத்துறையின் குறைகள் பூதாகரமாக வெளிவரும் என்பதே உண்மை. அதே போல் இந்த இயற்கை விவசாயம், மரபணு மாற்றிய தானியங்கள் எதிர்ப்பு ஆகியவையும்.
சுவாமிநாதன் மீதும் அவர் நடத்திய அமைப்பின் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவற்றை தாராளமாக விமர்சிக்கலாம், எழுதலாம்.
பசியை வென்ற இந்தியாவின் இன்றைய தலையாயப் பிரச்சனை உபரி அரசி முதலியவற்றை தரமாக சேமிப்பதும் அதனை ஏழைகளுக்கு விநியோகிப்பதும் தான்.
இதில் அறிவியல் உதவும் ஆனால் முதன்மைத் தேவை நிர்வாகமும் அரசியல் கொள்கை தொலைநோக்கும். நம்மாள்வார்களை புறம் தள்ளுவோம் முன்னேறுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக