புதன், 27 செப்டம்பர், 2023

ஹரே கிருஷ்ணா இயக்கம் பசுக்களை கசாப்பு கடைக்காரர்களுக்கு விற்று விடுகிறார்கள்! மேனகா காந்தி அதிரடி

 மாலை மலர் : மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் மறைந்த மூத்த மகனான சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தி. இவர் தீவிர வனவிலங்கு உரிமை ஆர்வலராகவும் சுற்றுபுற சூழல் ஆர்வலராகவும் செயல்படுபவர்.
தற்போது ஆளும் பா.ஜ.க.வை சேர்ந்த மக்களவை உறுப்பினராக இருக்கும் இவர் பல முறை மக்களவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.
இந்துக்கள் வழிபடும் தெய்வமான பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரால் இந்தியாவை சேர்ந்த இந்து மதகுரு 'ஸ்ரீபக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதர்' என்பவரால் தொடங்கப்பட்ட இயக்கம், இஸ்கான் எனும் "சர்வதேச கிருஷ்ணர் விழிப்புணர்வுக்கான சமூக அமைப்பு" (ISKCON). "ஹரே ராமா ஹரே கிருஷ்ணா" இயக்கம் எனவும் வழங்கப்படும்


இந்த இயக்கத்திற்கு, அமெரிக்கா உட்பட பல்வேறு மேற்கத்திய நாடுகளிலும் கிளைகள் உள்ளது.
தங்கள் கோட்பாடுகளில் ஒன்றாக சைவ உணவு பழக்கத்தை பிரச்சாரம் செய்யும் இவர்கள் உணவில் பாலை முக்கிய பொருளாக சேர்த்து கொள்ளும் பழக்கமுள்ளதால் பசுக்களை வளர்ப்பதில் ஈடுபாடுடையவர்கள். அதற்காக பசுக்களை வளர்க்கும் கோசாலைகளை அதிகளவில் பராமரித்து வருகிறார்கள்.
இந்நிலையில், மேனகா காந்தி, இந்த அமைப்பின் மீது குற்றம்சாட்டி வீடியோ பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:
இஸ்கான் நாட்டிலேயே மிக பெரிய மோசடி அமைப்பு. அவர்கள் கோசாலை அமைக்க அரசாங்கத்திடமிருந்து உதவிகளை பெற்று பெரிய நிலபரப்புகளை பெற்று கொள்கிறார்கள். பால் மற்றும் பசு வளர்ப்பை ஊக்கப்படுத்தி பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், அவர்களை போல் பசுக்களை இறைச்சிக்கு அதிகளவில் விற்பனை செய்பவர்கள் யாருமில்லை. ஆந்திராவிலுள்ள அனந்தபூர் கோசாலைக்கு சென்றிருந்தேன். அங்கு பால் தருவதை நிறுத்தியதால் பராமரிக்கப்படும் பசுக்கள் ஒன்றை கூட என்னால் காண முடியவில்லை. அனேகமாக அவர்கள் பசுக்களை கசாப்பு கடைக்காரர்களுக்கு விற்று விடுகிறார்கள்.
இவ்வாறு மேனகா தெரிவித்திருந்தார்.

இக்குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து இஸ்கான் இயக்க செய்தி தொடர்பாளர் யுதிஷ்டிர் கோவிந்தா தாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் அதில் கூறியதாவது;

மேனகா காந்தியின் இந்த கருத்து ஆச்சரியத்தை அளிக்கிறது. மாட்டிறைச்சியை பெருமளவில் உண்ணும் பல நாடுகளில் கூட இஸ்கான் பசுக்களை காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் 60க்கும் மேற்பட்ட கோசாலைகளை அமைத்து பசுக்களையும், எருதுக்களையும் அவை பால் சுரப்பதை நிறுத்திய பிறகும் கூட அதன் வாழ்நாள் முழுவதும் இஸ்கான் பராமரித்து வருகிறது. விபத்தில் காயமடைந்த பசுக்களையும், கசாப்பு கடைக்கு கொண்டு செல்லப்படும் பசுக்களையும் மீட்டு வளர்த்து வருகிறது. எங்கள் அமைப்பின் கோசாலைகளை நேரில் கண்டு பலர் பாராட்டியுள்ளனர். உள்ளூர் அதிகாரிகளால் தரப்பட்ட சில கோப்புகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அவற்றை பரிசீலித்தால் உண்மை விளங்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: