சனி, 28 ஆகஸ்ட், 2021

இலங்கை தமிழர்களுக்கு உறுதுணையாக நாம் இருக்கிறோம் : முதல்வர் ஸ்டாலின்! அகதிகள் முகாம், இனி மறுவாழ்வு முகாம் என்று அழைக்கப்படும்

 மின்னம்பலம் :இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாம், இனி மறுவாழ்வு முகாம் என்று அழைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்கள் நலனுக்காக, நேற்று நடைபெற்ற சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்தார். இலங்கை தமிழர்களுக்கு ரூ.108 கோடி மதிப்பில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும், தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்களின் அகதிகள் முகாமில் வீடுகள், சாலைகள் சீரமைக்கப்படும்.
இலங்கை தமிழர்கள் முகாம்களில் உள்ள 7,469 பழுதடைந்த வீடுகளும் 231 கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கட்டித் தரப்படும். அவர்களது குழந்தைகள் கல்விக்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். முகாம்களில் உள்ள மின் வசதி, கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற இதர அடிப்படை வசதிகளை மேம்படுத்திட 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

இந்நிலையில் இன்று(ஆகஸ்ட் 28) சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “நேற்று சட்டப்பேரவையில் இலங்கை தமிழர்கள் குறித்து பேசும்போது அகதிகள் என்று பேசினார்கள். நானும் அப்படிதான் கூறினேன். இன்று முதல் இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாம் என்று கூறாமல் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என்று அழைக்கப்படும். ஏனென்றால், அவர்கள் அனாதைகள் அல்ல; அவர்களுக்கு உறுதுணையாக எப்போதும் நாம் இருக்கிறோம். அவர்களுக்கு நாம் இருக்கிறோம் என்ற உணர்வை வெளிப்படுத்துவதன் அடையாளமாக இனி, இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம் எனப் பெயர்மாற்றம் செய்து ஆணை பிறப்பிக்கப்படுகிறது” என்று கூறினார்.

-வினிதா

கருத்துகள் இல்லை: