புதன், 25 ஆகஸ்ட், 2021

திருவண்ணாமலை: 1000 ஆண்டுகள் பழைமையான அய்யனார் சிற்பம் கண்டுபிடிப்பு… சிற்பம் கூறும் சேதி என்ன?

அய்யனார் சிற்பம்
Vikatan - அ.கண்ணதாசன் : திருவண்ணாமலை மாவட்ட எல்லை பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் 10ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிற்பமும், 9ம் நூற்றாண்டை சேர்ந்த விஷ்ணு சிலையும் கண்டறியப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டம், அவலூர்பேட்டை சாலையின் அருகே மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது காட்டுவாநத்தம் கிராமம். இங்கு, திருவண்ணாமலை மரபுசார் அமைப்பைச் சேர்ந்த ராஜ் பன்னீர்செல்வம் மற்றும் வினோத் ஆய்வுக்காகச் சென்றிருந்த போது, அந்தக் கிராமத்தில் உள்ள வேடியப்பன் கோயில் பற்றி அதே கிராமத்தை சேர்ந்த பவுன்குமார் என்பவர் தகவல் அளித்துள்ளார். அதன்படி, ஏரிக்கரையில் அமைந்துள்ள வேடியப்பன் கோவிலில் ஆய்வு செய்துள்ளனர் இந்த அமைப்பினர்.இது தொடர்பாக ராஜ் பன்னீர் செல்வத்திடம் பேசினோம். “அவலூர்பேட்டை சாலையில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவிலேயே காட்டுவாநத்தம் உள்ளது. ஊரின் துவக்கத்தில் சிவன் கோயில் ஒன்றைக் கட்டிக்கொண்டு இருந்தார்கள். அங்கிருந்து சுமார் 800 மீட்டர் இடைவெளியில் உள்ள ஏரிக்கரை பகுதிக்குச் சென்றோம்.
!
அய்யனார் சிற்பம்
அய்யனார் சிற்பம்

ஒரு வயல்வெளிக்கு பக்கத்தில் அந்த அழகிய புடைப்பு சிற்பம் இருந்தது. 3 அடி அகலம், 3 அடி உயரத்திலான கற்பலகையில் கையில் செண்டு ஏந்திய நிலையில் காணப்படுகிறார் அய்யனாரப்பன். இவரையே இந்த ஊர் மக்கள் ‘வேடியப்பன்’ எனும் பெயர் கொண்டு அழைக்கின்றனர். பரந்து விரிந்த சடையுடன், வட்ட வடிவிலான முகமும், இரு காதுகளிலும் பத்ர குண்டலமும் அணிந்து, சுகாசன கோலத்தில் இடது காலை பீடத்தில் அமர்த்தியும் வலது காலை கீழே தொங்கவிட்டும் கம்பீரமாக அமர்ந்துள்ளார். வலது கரத்தில் கடக முத்திரையில் செண்டை ஆயுதமாகவும், இடது கையை தனது தொடையின் மீது வைத்தும் அழகாகக் காட்சி தருகிறார்.

கழுத்தில் கண்டிகை மற்றும் சவடி ஆகிய அணிகலன்களுடன் முப்புரி நூலுடன், கைகளில் கைவலையும் அணிந்து கம்பீரமாகக் காட்சி தருகிறார். இவரது மனைவிகளான பூர்ணா வலப்புறத்திலும், புஷ்கலா இடபுறத்திலும் நின்றபடி காட்சி தருகின்றனர். காதில் குண்டலம், சிரத்தில் கரண்ட மகுடம் தரித்து, தத்தமது ஆயுதங்களுடன் காணப்படுகின்றனர். அய்யனாரின் பாதத்தின் அருகில் வேடன் ஒருவர் வேட்டையாடும் காட்சி இடம் பெற்றிருப்பது சிறப்பான ஒன்று. நீண்ட தாடியை கொண்ட வேடன் ஒருவன் தொடை வரை உடை அணிந்து, ஒரு கையில் வில்லும்; மறு கையில் அம்பும் ஏந்தி நின்றிருக்கிறார். அதன் அருகே வேட்டை நாய் ஒன்று இரண்டு மான்களை துரத்திச்செல்கிறது. ஒரு மான் பயந்து ஓட, மற்றொரு மானின் தலை நாயின் வாயில் அகப்பட்டபடி, தலை மட்டும் சற்று திரும்பிய நிலையில் அழகாகக் காட்டப்பட்டுள்ளது.

அவரது வாகனமான யானை அவரின் தோலின் அருகே அழகாக செதுக்கப்பட்டுள்ளது. அய்யனார் சிற்பத்தின் வடிவமைப்பு மற்றும் அதில் இடம்பெற்றுள்ள சிற்ப காட்சிகளின் அமைதியை வைத்து பார்த்தால் இந்தச் சிற்பம் கி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கும் எனக் கூறலாம். இத்தகு சிறப்பு வாய்ந்த இந்தச் சிற்பம் ஆட்கள் நடமாற்றம் அற்ற ஏரிக்கரை பகுதியில் உள்ளது. இந்த அய்யனாருக்கு பெரிதளவில் பூஜைகள் நடைபெறுவதில்லை போல! அந்தப் பகுதியிலுள்ள நிலத்துக்காரர்கள்தான் பராமரித்து அவ்வப்போது பூஜை செய்து வழிபட்டு வருகிறார்கள். இங்கிருந்து நான்கு வயலைத் தாண்டி போனால் புதர் போன்ற ஒரு பகுதி இருக்கிறது. அதில், ஒரு சிலை கிடப்பதை கண்டோம். 4 அடி உயரத்திலான அந்தச் சிலை, 9ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர்கள் காலத்தைச் சேர்ந்த விஷ்ணு சிலை என்பதை கண்டறிந்தோம். நீண்ட நாள்களாக வழிபாடு அற்று காணப்படுவதால் முகம் மற்றும் உடல் பகுதி தேய்ந்த நிலையில் காணப்படுகிறது. அதை அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.

கருத்துகள் இல்லை: