1919 இல் அமானுல்லா கான் ஆப்கானிஸ்தானில் ஆட்சிக்கு வந்தபோது, அவரது மனைவி சோராயா தார்சியின் கருத்துக்கள் மக்களின் கவனத்தை ஈர்த்தன. பல நூற்றாண்டுகளாக பிற்போக்கான மற்றும் பழமைவாத கலாச்சாரத்தில் வாழும் ஒரு நாட்டிற்கு இந்த எண்ணங்கள் புதியவை.
சில வருடங்களுக்குப் பிறகு, அமானுல்லா கான் தனது பட்டத்தை அமீரிலிருந்து பாட்ஷா என்று மாற்றி ஆப்கானிஸ்தானின் ஷா ஆனார்.
அமானுல்லாவின் ஆட்சி 1929 வரை நீடித்தது. இந்த காலகட்டத்தில் அவரும் ராணி சோராயாவும் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் கல்வியில் உறுதிப்பாட்டுடன் இருந்தனர்.
1926 இல், அமானுல்லா கான் ஒரு அறிக்கையில், ‘நான் மக்களின் ராஜாவாக இருக்கலாம், ஆனால் கல்வி அமைச்சர் என் மனைவிதான்’ என்று கூறியிருந்தார். அவரின் இந்த கருத்து, ஆப்கானிஸ்தானில் சோராயாவின் பங்கை தெளிவாக்கியது.
2014 ல் கொடுக்கப்பட்ட ஒரு நேர்காணலில், அமானுல்லா கான் மற்றும் சோராயா தார்சியின் இளைய மகள் இளவரசி இண்டியா, தனது அம்மாவைப் பற்றி இவ்வாறு சொல்கிறார். ‘என் அம்மா பெண் குழந்தைகளுக்காக முதல் பள்ளிக்கூடத்தை திறந்தார். தனது இரண்டு மகள்களையும் பள்ளிக்கு அனுப்பி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தார். ‘
1929 இல் அமானுல்லா கான் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டபோது, அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவரது இளைய மகள் பம்பாயில் பிறந்தார். இந்த காரணத்திற்காக, அவர் தனது மகளுக்கு இண்டியா என்று பெயரிட்டார்.
‘என் அம்மாவின் சாதனைகள் இன்னும் ஆப்கானிஸ்தான் மக்களால் மதிக்கப்படுகின்றன’ என்று இளவரசி இண்டியா அல்-ஜசீராவுக்கு அளித்த பேட்டியில், கூறியிருந்தார்.
“என் அம்மாவின் பேச்சை மக்கள் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள். ஆப்கானியப் பெண்களை சுதந்திரமாக இருக்கவும், எழுதவும் படிக்கவும் அவர் எப்படி ஊக்கப்படுத்தினார் என்பதை மக்கள் மறக்கவில்லை.”
அதே நேரத்தில், ராணி சோராயா தனது காலத்தின் தனித்தன்மை வாய்ந்த அசாதாரண பெண்களில் ஒருவர் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.
‘அறிவை பெருக்கு’
ராணி சோராயா ஆப்கானிஸ்தானின் பெண்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு அவர்களின் உரிமைகளைப் பற்றி விவாதித்தார்.
1926 ல் ஆப்கானிஸ்தானின் சுதந்திர தின விழாவில் ஆற்றிய உரையில் பெண்களின் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டி, “சுதந்திரம் நம் அனைவருக்கும் சொந்தமானது. அதனால்தான் நாம் அதை கொண்டாடுகிறோம். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே நம் நாட்டின் சேவைக்கு ஆண்கள் மட்டுமே தேவைப்பட்டார்கள் என்பதை உங்களால் நம்பமுடிகிறதா? நமது நாட்டின் ஆரம்ப ஆண்டுகள் மற்றும் இஸ்லாத்தின் எழுச்சியின்போது இருந்ததைப் போலவே பெண்களின் பங்கேற்பு இருக்கவேண்டும்,” என்று குறிப்பிட்டார்.
“நாம் அனைவரும் தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதையும், கல்வி கற்காமல் இதைச் செய்ய முடியாது என்பதையும் அவர்களின் உதாரணங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.”
“அதனால்தான் இஸ்லாத்தின் ஆரம்ப ஆண்டுகளில் பெண்கள் வகித்த அதே பாத்திரத்தை பெண்களாகிய நாமும் ஏற்க வேண்டும். இதற்காக நாம் அனைவரும் முடிந்தவரை அறிவைப் பெற முயற்சிக்க வேண்டும்.”
1921 இல் காபூலில் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான முதல் ஆரம்பப் பள்ளியை ராணி சோராயா தொடங்கினார். அதன் பெயர் மஸ்துராத் பள்ளி.
1928 ஆம் ஆண்டில், மஸ்துராத் பள்ளியின் 15 மாணவிகள் உயர்கல்விக்காக துருக்கிக்கு அனுப்பப்பட்டதாக அரபு ந்யூஸின் ஒரு கட்டுரையில், ஜொனாதன் கோர்னால் மற்றும் சையது சலாவுதீன் குறிப்பிட்டுள்ளனர்.
மஸ்துராத் பள்ளியில் படித்த காபூலின் செல்வாக்கு மிக்க குடும்பங்களைச் சேர்ந்த 15 பெண்கள் துருக்கிக்கு உயர்கல்விக்காக அனுப்பப்பட்டனர் என்று இந்தக்கட்டுரை குறிப்பிடுகிறது.
கல்வியாளர் ஷிரீன் கான் புர்கி தனது புத்தகத்தில், ‘திருமணமாகாத சிறுமிகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவது ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.’என்று கூறியுள்ளார்.
பெண்களை துருக்கிக்கு படிக்க அனுப்பும் நடவடிக்கை மேற்கத்திய கலாசாரத்தின் ஊடுருவலாக பார்க்கப்பட்டது.
“ஆப்கானிஸ்தானின் ஆளும் வர்க்கம் பெண்களுக்கு வழங்க முயன்ற சமஉரிமை, ஆப்கானிஸ்தானின் அடிப்படை யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது,” என்று ‘லேண்ட் ஆஃப் தி அன்கான்கரபிள் தி லைஃப்ஸ் ஆஃப் காண்டெம்ப்ரரி ஆப்கான் விமன்’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஷிரீன் புர்கி கூறுகிறார்.
பெற்றோரின் தாக்கம்
ராணி சோராயா தார்சியின் தந்தை, மஹ்மூத் தார்சி, ஒரு செல்வாக்கு மிக்க ஆப்கானிஸ்தான் அரசியல்வாதி மற்றும் அறிவுஜீவியாக இருந்தார். அவர் தனது நாட்டில் தாராளவாத கொள்கைகளை கொண்டு வந்தார்.
அவரது சிந்தனையின் தாக்கம் அவரது மகள் சோராயா மீது மட்டுமல்ல, அவரது தீவிர தொண்டரான ஒரு இளைஞன் மீதும் ஏற்பட்டது. பின்னர் அந்த இளைஞன் அவரது மருமகனாகவும் ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளராகவும் ஆனார்.
“தார்சி பெண்களுக்கான கொள்கைகளை வகுப்பதில் மற்றும் செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். அவர் ஒரு திருமணம் மட்டுமே செய்துகொண்டார். அவர் தனது குடும்பப் பெண்களுக்கு படிப்பதற்கும் வேலை செய்வதற்கும் வாய்ப்புகளை வழங்கினார். இந்தப் பெண்கள் பொது இடங்களில் பர்தா அணியாமல் காணப்பட்டனர்,”என்று சான் டியாகோ மாகாண பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹூமா அகமது கோஷ் கூறுகிறார்,
‘அமானுல்லா, பர்தா மற்றும் பலதார மணத்திற்கு எதிராக ஒரு பொது பிரச்சாரத்தைத் தொடங்கினார். காபூலில் மட்டுமின்றி நாட்டின் உள்பகுதிகளிலும் பெண்களின் கல்விக்கு அவர் முக்கியத்துவம் அளித்தார்,” என ஹுமா கோஷ் கூறுகிறார்,
பெண்களுக்கு உடலை மறைக்கவோ அல்லது சிறப்பு பர்தா அணியவோ இஸ்லாம் கட்டளையிடவில்லை என்று ஒரு பொதுக் கூட்டத்தில் அமானுல்லா கூறினார்.
அமானுல்லாவின் பேச்சு முடிந்ததும் சோராயா தனது முகத்திரையை அகற்றினார். அங்கிருந்த பெண்களும் அவ்வாறே செய்தனர்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்ட படங்களில் அவர் தொப்பி அணிந்திருப்பதையும் காணலாம்.
குடும்பம்
சோராயா 1899 ஆம் ஆண்டு நவம்பர் 24 அன்று சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ்ஸில் பிறந்தார். அந்த நேரத்தில் டமாஸ்கஸ், ஓஸ்மானியா சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
சோராயா சிறுவயதில் இங்கு தங்கி கல்வி கற்றார். பின்னர் அவரது குடும்பம் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பியது.
1901 ஆம் ஆண்டில் அமானுல்லா கானின் தந்தை ஹபிபுல்லா கான் ஆப்கானிஸ்தானின் அமீர்(அரசர்) ஆனபோது, வெளிநாட்டில் வாழும் பல குடும்பங்கள் நாடு திரும்பின.
அரசுடன் சேர்ந்து நாட்டின் வளர்ச்சியின் பொறுப்பை ஏற்க தார்சி அழைக்கப்பட்டார்.
இளவரசர் அமானுல்லா கானும், சோராயா தார்சியும் காதலித்து 1913 இல் திருமணம் செய்து கொண்டனர். ஹபிபுல்லா கான் கொலை செய்யப்பட்டபிறகு, அமானுல்லா கான் அமீர் ஆனார். நாட்டின் ஆட்சி இந்த தம்பதியின் கைகளில் வந்தது.
அமானுல்லா கான் தனது நாட்டை பிரிட்டிஷ் பேரரசிலிருந்து விடுவித்தார் மற்றும் 1919 இல் அவர் ஆப்கானிஸ்தானை சுதந்திர நாடாக அறிவித்தார்.
அல் ஜசீரா பத்திரிகையாளர் தான்யா கோட்சுஜியான் 2014 இல் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், ராணி சோராயா குதிரையில் சவாரி செய்து வேட்டையாடியதாகவும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கெளரவ பட்டம் பெற்றதாகவும் கூறினார்.
சிரியா வம்சாவளியை சேர்ந்த சோராயாவின் தாய் அஸ்மா ரஸ்மியா தார்சி, ஆப்கானிஸ்தானின் முதல் மகளிர் இதழைத் தொடங்கினார். அதில் இஸ்லாமிய உலகில் வெற்றிகரமான பெண்கள் மற்றும் உயர் அந்தஸ்துள்ள பெண்கள் பற்றிய கட்டுரைகள் இருந்தன.
இந்த இதழின் பெயர் இர்ஷாத்-இ-நிஸ்வான். அவரது மகள் சோராயா அதன் வெளியீட்டில் அவருக்கு உதவினார். சோராயா பாலின சமத்துவம் தொடர்பான உள்ளடக்கத்தையும் ஊக்குவித்தார்.
இந்த இதழை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இதுபோன்ற பல பத்திரிக்கைகள் வெளியிடப்பட்டன.
ராணியின் பயணம்
ராணி சோராயா மற்றும் அவரது கணவர் 1927-28 இல் ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இங்கே அவர்கள் பல கெளரவங்களைப் பெற்றார்.
ஐரோப்பாவின் சுற்றுப்பயணத்தில் அவர்களைப் பார்க்க பல நகரங்களில் பெரும் கூட்டம் கூடியது என்று கோர்னால் மற்றும் சலாவுதீன் தெரிவிக்கின்றனர்.
அரச தம்பதியினர் இந்த பயணத்தின் போது தாங்கள் பார்த்ததை, நாடு திரும்பியபிறகு, இங்கேயும் செயல்படுத்த முயன்றனர்.
புகைப்படங்களும் சர்ச்சையும்
ஆனால் இந்த சுற்றுப்பயணத்தில் எடுக்கப்பட்ட சில படங்கள் ஆப்கானிஸ்தான் மக்களை கோபப்படுத்தின.
ராணி சோராயா ஐரோப்பிய ஆண்களுடன் பர்தா இல்லாமல் இருந்தார். சில படங்களில் அவர் ஸ்லீவ்லெஸ் ஆடை அணிந்திருந்தார்.
“நாட்டின் கலாச்சாரம், மதம் மற்றும் கெளரவத்தை சீர்குலைப்பதாக, அடிப்படைவாத மதகுருமார்கள் மற்றும் பிராந்திய தலைவர்கள் இந்த படங்களை பார்த்தார்கள்.”
பல புகைப்படங்கள் தவறான நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டன என்றும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் தொடர்புடைய மக்கள் நாட்டை சீர்குலைக்க ஆப்கானிஸ்தானின் பழங்குடி பகுதிகளில் அவற்றை விநியோகித்ததாகவும் சில வட்டாரங்கள் தெரிவித்தன.
அரச குடும்பத்திற்கு எதிராக கோபம் அதிகரித்தது. இறுதியில் அவர்கள் 1929 இல் நாட்டை விட்டு வெளியேறி இத்தாலியில் தஞ்சம் அடைய வேண்டிவந்தது. இத்துடன், ஆப்கானிஸ்தானின் வளர்ச்சித் திட்டமும் நிறுத்தப்பட்டது.
1928 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து, ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் உருவாகத்தொடங்கியது. இதன் போது ஹபிபுல்லா காலாகனி சில காலம் ஆட்சியில் அமர்ந்தார். ஆனால் அதன்பிறகு ஆட்சிப்பொறுப்பு முகமது நாதிர் ஷாவிடம் வந்தது. 1929 முதல் 1933 வரை நாட்டின் ஆட்சியாளராக அவர் இருந்தார்.
நாதிர் ஷா பெண்களுக்காக திறக்கப்பட்ட பள்ளிகளை மூடிவிட்டு பர்தாவைமீண்டும் அறிமுகப்படுத்தினார்.
இருப்பினும், நாதிர் ஷாவின் மகனும், ஆப்கானிஸ்தானின் நீண்டகால ஆட்சியாளருமான முகமது ஜாஹிர் ஷா (1933-1973) ஆட்சிக்காலத்தில் அமானுல்லாவின் கொள்கைகள் படிப்படியாக மீண்டும் அமல்செய்யப்பட்டன.
முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்மணி
ராணி சோராயா தனது கணவர் இறந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1968 இல் இத்தாலியில் காலமானார்.
அவரது உடல் ராணுவ மரியாதையுடன் ரோம் விமான நிலையத்தில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
1927 ஆம் ஆண்டில், டைம் இதழின் 100 செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் அவர் சேர்க்கப்பட்டார். அவரது முகம் பத்திரிகையின் அட்டைப்படமாக வெளியிடப்பட்டது..
“ஆப்கானிஸ்தானின் ராணியாகவும், மன்னர் அமானுல்லா கானின் மனைவியாகவும், அவர் 1920 களில் மத்திய கிழக்கில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவரானார். மேலும் அவரது முற்போக்கான கருத்துக்கள் உலகளாவிய அங்கீகாரத்தைக் பெற்றுத்தந்தன,”என்று பத்திரிகையாளர் சுய்ன் ஹெய்னெஸ் அவரைப் பற்றி எழுதினார்.
ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, 1970 களில், தார்சியின் கருத்துக்கள் ஆப்கானிஸ்தானில் மீண்டும் வலுப்பெறத்தொடங்கின. பெண்களுக்கு, கல்வி மற்றும் வேலைகளில் அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
கல்வியைத் தவிர, அரசியலில் நுழைய பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, திருமண வயதும் அதிகரிக்கப்பட்டது.
2018 இல் மார்டன் டிப்ளமஸி இதழில் ‘ஆப்கானிஸ்தானில் பெண்களின் நிலை’ என்ற கட்டுரையை ஆராய்ச்சியாளர் அமானுல்லா பாமிக், வெளியிட்டார். மன்னர் அமானுல்லா கான் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முன்னெடுத்துச்சென்ற அரசியலமைப்பு இயக்கம் காரணமாக ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு சுதந்திரமும், மனித உரிமைகளும் கிடைத்துள்ளன என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ,சோவியத் ஆதரவு பெற்ற இடதுசாரி அரசின் வீழ்ச்சிக்குப் பிறகும், முஜாஹிதீன் மற்றும் தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியபிறகும், இந்த மதிப்புகள் அனைத்தும் புதையுண்டன.
கடந்த இரண்டு தசாப்தங்களில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீண்டும் சுதந்திரம் பெற்றனர். ஆனால் இப்போது நாடு மீண்டும் தாலிபன்களின் ஆட்சியின் கீழ் வந்துள்ளது. பெண்கள், சமூக மற்றும் மனித உரிமை மீறல்களை எதிர்கொள்ளக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
எனினும், ஆப்கானிஸ்தானில் பெண்கள் படிக்கவும் வேலை செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் வலியுறுத்தியுள்ளார்.
‘எங்கள் கட்டமைப்பின் கீழ் பெண்கள் படிக்கவும் வேலை செய்யவும் நாங்கள் சுதந்திரம் கொடுப்போம். இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளை அவர்கள் பெறுவார்கள்,” என்று காபூலில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் முஜாஹித் தெரிவித்தார்.
உலகத்தின் கண்கள் இப்போது ஆப்கானிஸ்தானின் மேல் உள்ளன. தாலிபன் ஆட்சியின் கீழ் பெண்களுக்கு என்ன ஆகும் என்று அனைவரும் இப்போது கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக