திங்கள், 23 ஆகஸ்ட், 2021

ஆப்கான் நிலையைக் கண்ணீருடன் பகிர்ந்த ஆப்கான் எம்.பி.! Afghan Sikh MP Narender Singh Khalsa in tears

நக்கீரன் செய்திப்பிரிவு  :   :ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றி ஒரு வாரம் முடிந்துவிட்ட நிலையில், அங்குள்ள தமது குடிமக்களை இந்தியா மீட்டு வருகிறது.
தலைநகர் காபூல் சென்ற விமானப்படையைச் சேர்ந்த C- 17 பிரம்மாண்ட விமானம், அங்கிருந்து 107 இந்தியர்கள் மற்றும் ஆப்கானிஸ்தான், நேபாளத்தைச் சேர்ந்த 61 பேர் என மொத்தம் 168 பேரை மீட்டு வந்துள்ளது.
இந்த விமானம் உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தில் உள்ள விமானப்படைத் தளத்தில் வந்திறங்கியது. அப்போது, ஆப்கானிஸ்தான் நாட்டின் தற்போதைய நிலவரத்தை அங்கிருந்து தப்பி வந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான நரேந்தர் சிங் கல்சா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
"ஆப்கானிஸ்தானில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
அங்குள்ள நிலையை நினைத்தால் கண்ணீர் தான் வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக தாங்கள் மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் தற்போது வீணாகிப் போய்விட்டது.  ஆப்கானிஸ்தான் இப்போது மீண்டும் பூஜ்ஜிய நிலைக்கே திரும்பிவிட்டது.
ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளில் தலிபான்கள் சோதனை நடத்தி வருகின்றன. அங்குள்ள கார்கள், ஆயுதங்களை அவர்கள் கைப்பற்றி வருகின்றன.ஆப்கானிஸ்தானில் இன்னும் 200 இந்தியர்கள் சிக்கியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற வேண்டாம் என தலிபான்கள் எங்களைத் தடுத்தனர். ஆனால் அவர்களை நம்ப முடியாது; எது வேண்டுமானாலும் செய்வார்கள். அங்குள்ள எங்கள் சொத்துகள் அனைத்தும் பறிபோய்விட்டன. குடும்பத்துடன் தப்பி வந்து விட்டோம்" என கண்ணீருடன் கூறினார்.
 
இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பிய பெண் ஒருவர் கூறுகையில், "ஆப்கானிஸ்தானில் உள்ள தனது வீட்டை தீ வைத்து எரித்து விட்டனர். பெரும் ஆபத்தில் சிக்கியிருந்த தங்களை மீட்டு உதவிய இந்திய அரசுக்கு நன்றி கூறுகிறேன். தலிபான்கள் கொடூரமானவர்கள் என்பதால்தான், அங்கிருந்து தப்பி வந்துள்ளோம். காபூல் விமான நிலையத்தில் கூட அவர்கள் தங்களைத் தடுத்தனர்" எனத்  தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை: