மின்னம்பலம் :நடப்பு ஆண்டில் ரூ.11,500 கோடிக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப் பேரவையில் நேற்று (ஆகஸ்ட் 25) தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் கூட்டுறவு, உணவுத் துறை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது, கடந்த 10 ஆண்டுக் காலகட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.60,640 கோடி வட்டியில்லா பயிர்க் கடன் வழங்கப்பட்டது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
அவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, 2001 - 2006 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் 10 மத்திய கூட்டுறவு வங்கிகளைத் தவிர 13 வங்கிகள் நஷ்டத்தில் இயங்கின.
மேலும், 475 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் லாபத்தில் இருந்தன. அடுத்து திமுக ஆட்சியில் 23 வங்கிகள் மட்டுமின்றி, 3,900க்கும் கூடுதலான சங்கங்கள் லாபத்தில் கொண்டு வரப்பட்டன என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், தமிழகத்தில் 4,000 கிடங்குகள் கட்டப்பட்டதாக உறுப்பினர் தெரிவித்தார். இதில் 90 சதவிகித நிதி நபார்டு வங்கிக்கானது. கட்டப்பட்ட கிடங்குகள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. தற்போது திமுக ஆட்சிக் காலத்தில் 5 லட்சம் டன் நெல்லை வைக்கக்கூடிய அளவுக்குக் கிடங்குகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.
அதேபோன்று பயிர்க்கடன் தள்ளுபடியில் 516 கோடி முறைகேடு நடைபெற்றதாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-பிரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக