வியாழன், 26 ஆகஸ்ட், 2021

தாமிரபரணி பாயும் வழியெல்லாம் வரலாற்றை தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கிறது

May be an image of tree and outdoors

May be an image of ‎text that says '‎ه ஆதிச்சநல்லூர் நாகரிக மக்கள் பயன்படுத்திய பொருட்கள், இரும்பு ஆயுதங்கள். படங்கள்: al அபிசு விக்னேக‎'‎

Sundar P  :  தாமிரபரணி, ஸ்ரீவைகுண்டம்,  ஆழ்வார் திருநகரி,  ஏரல்,  ஆத்தூர் வழியாக கடலை நோக்கி பயணிக்கிறது.
 வழியெல்லாம் வரலாற்றை தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கிறது இந்த நதி.
 தோண்டத் தோண்ட ஆச்சர்யம்.
கொற்கையும் ஆதிச்சநல்லூரும் பிரமிக்க வைக்கின்றன.  
மேற்குலகில் நாகரிகம் வளர்ச்சி அடையாத அந்தக் காலகட்டத்தில் இங்கே மாட மாளிகைகளும் கூடகோபுரங்களும் கட்டி மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
கொற்கை...
தூத்துக்குடி மாவட்டம்,  ஆத்தூரிலிருந்து ஏரல் செல்லும் வழியில் இருக்கிறது கொற்கை.  ஊர் முகப்பில் வீழ்ந்து கிடக்கிறது ஒரு மரம். சுமார் 2000 ஆண்டுகள் பழமையான வன்னி மரம் என்கிறார்கள்.
அதன் கீழே சில கற்சிலைகள் இருக்கின்றன.
ஆள் அரவமற்ற தெருக்கள்,
சிறு பள்ளிக்கூடம்,
ஆளே இல்லாத ஒரு தேநீர் கடை என சிற்றூராக காட்சியளிக்கிறது கொற்கை.
 இந்தச் சாலையிலா முத்துக்களை குவித்து வைத்து விற்றார்கள்? ஆயிரக்கணக்கில் அரேபியக் குதிரைகள் வந்திறங்கிய துறைமுகமா இது?
எங்கே அந்த கடல் அலைகள்?

எங்கே அந்தக் குளம்பொலிகள்? காலச்சக்கரத்துக்கு கருணை ஏது?
கொற்கையைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் ஏராளம்.
வெளிநாட்டுப் பயணியான தாலமி, கி.பி.130 வரை கொற்கை பாண்டியரின் துறைமுகமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

கி.மு. 300 தொடங்கி கி.பி. 500 வரை பழம் பாண்டியர்கள் கொற்கையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்தார்கள். பின்னர் அது மதுரைக்கு மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
தாமிரபரணி கடலில் கலக்கும் முன்பு வண்டலுடன் முத்துக்களையும் வாரிக்கொண்டு வந்திருக்கிறது. அந்த முத்துக்களால் பிரசித்தி பெற்றதுதான் கொற்கை. இங்கே கிடைத்த முத்துக்கள் உலகம் முழுவதும் புகழ் பெற்றன. கிரேக்கர்களும் அரேபியர்களும் போட்டிப் போட்டுக்கொண்டு முத்துக்களை வாங்கிச் சென்றார்கள்.
 “கொற்கையை ஆண்ட பாண்டிய மன்னர்கள், ரோம் நாட்டின் அகஸ்டஸ் மன்னனின் அரசவைக்கு கொற்கை முத்துக்களை பரிசாக அளித்தார்கள்” என்று குறிப்பிடுகிறார் வரலாற்று அறிஞர் ஸ்டிராபோ.
பாண்டிய மன்னர்களின் குதிரைப்படைகளுக்காக ஆண்டுதோறும் கொற்கைத் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான பாய்மரக் கப்பல்களில் 16,000 அரேபியக் குதிரைகள் வந்திறங்கின என்று குறிப்பிடுகிறார் வரலாற்று ஆசிரியர் வாசப்.

‘மறப்போர் பாண்டியன் அறத்தின் காக்கும் கொற்கையம் பெருந்துறை முத்து’ என்கிறது அகநானூறு.
‘நற்றிறம் படரா கொற்கை வேந்தே’ என்கிறது சிலப்பதிகாரம்.
 “கி.மு.2500-ம் ஆண்டு உக்கிரப் பெருவழுதியால் நிறுவப்பட்டு, அகத்தியராலும் பிற தமிழ் புலவர்களாலும் தமிழ் ஆய்வு செய்யப்பட்ட இடைச்சங்கம் எழுந்தது கொற்கையில்தான்” என்று தனது ‘கோநகர் கொற்கை’ நூலில் குறிப்பிட்டுள்ளார் வரலாற்று ஆசிரியர் ராகவன் அருணாசல கவிராயர்.
சங்க இலக்கியம் மற்றும் வரலாற்றில் ‘மதுரோதய நல்லூர், பாண்டிய கபாடம், கொல்கை, கொல்கை குடா’ என்றெல்லாம் கொற்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற்காலத்தில் மார்கோபோலோ மற்றும் கிரேக்கர்களின் குறிப்புகளிலிருந்து கொற்கையை ஆய்வு செய்த பிஷப் கால்டுவெல், அன்றைய ஆங்கிலேய அரசின் உதவியுடன் இங்கே அகழ்வாராய்ச்சி மேற்கொண்டார்.
அவர் எழுதிய குறிப்பில்,  ‘இங்கே நிலமட்டத்திலிருந்து எட்டு அடிக்கு கீழே பழங்கால கொற்கைத் துறைமுகம் இருந்துள்ளது. அதில் பாதி கடலிலும் மீதி தாமிரபரணியிலும் புதையுண்டிருக்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்றைய காலத்தில் தாமிரபரணி இங்கே வடக்கு நோக்கி ஓடியது. தற்போது நதி திசைமாறி ஏரலை நோக்கி தெற்கு திசையில் ஓடுகிறது.

அதை உறுதி செய்யும் வகையில் இங்கே நட்டாத்தியம்மன் கோயில் இருக்கிறது. ஆற்றில் நடுவே அமைந்த அம்மன் கோயில் என்பதே அதன் பொருள். ஆறு இன்று திசை மாறியிருப்பதை இது உணர்த்துகிறது.
அதன் பின்பு மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறை கொற்கையில் 12 இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்து ஏராளமான தொல்பொருள்களை கண்டெடுத்துள்ளது.
தென் தமிழகத்தை கடல்கோள் கொண்டபோது கொற்கை அழிந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆனால், இன்று கொற்கையில் கடல் இல்லை. கடல் அலைகள் இல்லை. கடல் காற்றுகூட இல்லை. ஆனாலும், ஊருக்குள் நடக்கும் போது பாதத்தின் அடியில் சங்குகளும் சிப்பிகளும் மிதிபடுகின்றன. வாழ்வாங்கு வாழ்ந்த தமிழர் வரலாற்றின் எஞ்சிய சாட்சியங்கள் அவை.
ஆதிச்சநல்லூர் நாகரிகம்...
------------------------------------------
தாமிரபரணி நதிக்கரையிலிருக்கும் ஆதிச்சநல்லூர் நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முற்பட்டது என்கிறார்கள் தொல்லியல் அறிஞர்கள்.
 சுமார் 135 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் சோகோர் இங்கே ஆய்வுகளை மேற்கொண்டார்.
அதில் கிடைத்த தொல்பொருட்களை ‘ஆதிச்சநல்லூர் பொக்கிஷம்’ என்கிற பெயரில் பெர்லின் அருங்காட்சியகத்தில் வைத்தார்.
1902-ம் ஆண்டு அலெக்சாண்டர் இரியா என்பவர், இங்கே ஏராளமான முதுமக்கள் தாழிகள், மண்பாண்டங்கள், ஈட்டி, கோடாரி, பலிவாள், குத்துக் கத்தி உள்ளிட்டவற்றை கண்டெடுத்தார். இவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டன.
அதன் பின்பு தொல்லியல் துறை, கடந்த 2004-ம் ஆண்டு ஆய்வுகளை மேற்கொண்டது.
 114 ஏக்கரில் நிலத்தை தோண்டி செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 185 முதுமக்கள் தாழிகளும், இரும்புப் பொருட்களும் கிடைத்தன.
(தி இந்து 22.08.2015)
 நன்றி ; திணையகம் பதிவு

 No photo description available.

 May be an image of map and text

கருத்துகள் இல்லை: