“டெக்கான் ஹெரால்டு” நாளிதழில் வெளியான தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
அண்மைக் காலமாக தமிழக அரசியலில், கலைஞரும் ஜெயலலிதாவும் முன்னிலையில் இருந்து கோலோச்சி வந்தார்கள். ஆனால், தமிழகத்தில் புதிய முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் அவர்களிடையே நிலவி வந்த விரோத நிலை என்பது மாறத் தொடங்கியுள்ளது. இது மோதல் போக்கில் அல்லாமல் சமரசத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளது.
சொல்லப்போனால் 2011ஆம் ஆண்டிலேயே இதற்கான அடித்தளத்தை மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். அப்போது நடைபெற்ற ஜெயலலிதா பதவி ஏற்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டது, அனைத்து தரப்பினரையும், குறிப்பாக அரசியல் நோக்கங்களிடையே பெருத்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே நடைபெற்ற இதுபோன்றதொரு நிகழ்ச்சியைப்போலவே தற்போதும் இன்னுமொரு நிகழ்வை மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ளார். அது, கொரோனா தொற்று நோய் பிரச்சினையை கட்டுப்படுத்த அரசுக்கு உதவிட அனைத்துக் கட்சிகள் அடங்கிய குழுவினை ஏற்படுத்தி இருப்பதுதான்.
அரசியல் புத்திசாலித்தனம்!
முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட 13 பேர் கொண்ட குழுவில் தி.மு.க.வைச் சேர்ந்த ஒரேயொரு உறுப்பினர்தான் இடம் பெற்றுள்ளார். மற்றபடி அ.தி.மு.க. அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் இன்னொரு உறுப்பினராக உள்ளார். மாநில நலன்களுக்காக, ஆண்டுக்கணக்கில் அரசியலில் எதிரியாக இருந்தாலும் அவர்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவதே ஒரு அரசியல் புத்திசாலித்தனம்.
ஏற்கனவே விஜயபாஸ்கர் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை கையாண்ட அனுபவம் இருப்பதால் அவரையும் இக்குழுவில் பயன்படுத்திக் கொண்டுள்ளார். இப்படிப்பட்ட ராஜதந்திர நிலையை துரதிருஷ்டவசமாக, மற்ற மாநில முதலமைச்சர்களோ அல்லது பிரதமர் மோடியோ மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு எதிர்க்கட்சியினரை ஆலோசிப்பதே இல்லை!
மத்திய அரசை எடுத்துக் கொண்டால், எதிர்க்கட்சியினரிடம் இதுபற்றி ஆலோசிப்பதே இல்லை. அப்படியும் ஒரு சில எதிர்க்கட்சியினர் நல்ல ஆலோசனைகளைன்தெரிவித்தாலோ அவர்களை அவதூறாக நடத்துகிறார்கள். இது தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சில யோசனைகான குறிப்பிட்டு, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். அவருக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பதில் கடிதம் எழுதி, அதில் மன்மோகன் சிங் பற்றி அவமதிக்கும் விதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மன்மோகன் சிங்கை அவமதித்த மோடி!
வழக்கம் இல்லை என்றாலும் மரியாதைக்காவது பிரதமர் தாமாக பதில் கடிதம் எழுதி இருக்கலாம். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மாநிலத்தின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு சென்றபோது நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்தான் வலைதளத்தில் பதில் தெரிவித்திருந்தார். அநேகமாக எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களும், முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடாவைத் தவிர்த்து மற்ற தலைவர்கள் அனைவரும் மத்திய அரசிடம் தொடர்பு கொள்ளும்போது இதே நிலைதான் உள்ளது.
நிபுணர்களும் அதிகாரிகளும் எந்த ஆலோசனைகளை வழங்கினாலும் அரசியல் தலைமைதான் இறுதி முடிவெடுக்க வேண்டிய நிலை உள்ளது. தேசிய நெருக்கடி ஏற்படும் சூழலில் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் தமிழ்நாட்டின் நிலையை பின்பற்றி அரசுக்கு யோசனை தெரிவிக்க பல்வேறு அனைத்துக் கட்சிக் குழுக்களை ஏற்படுத்தவேண்டும்.
மத்திய அரசு இவ்விஷயத்தில் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வதும் அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலே கொரோனா தொற்றை தடுப்பதில் இந்தியாவின் முயற்சி அப்பட்டமாக தடைப்படும். அனைத்துத் தரப்பும் அரசியலை மறந்து ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான், குறைந்தபட்சம் கொரோனா தடுப்பு விஷயத்தில் இணைந்து போராடினால்தான் கடுமையான நிலையில் இருந்து இந்தியா பழைய நிலைக்கு மீண்டு வரும்” எனத் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக