அரபிக்கடலில் அமைந்துள்ள அழகிய தீவுக்கூட்டம்தான் இலட்சத்தீவு.
சேர மன்னன், சேரமான் பெருமானின் காலத்தில் இங்கு மக்கள் குடியேறி வாழ ஆரம்பித்ததாக பழங்கால நூல்கள் சுட்டிக் காட்டுகின்றன.
பல்லவர்கள் ஆட்சிக்காலத்தில் இத்தீவு தீப இலக்ஷம் என அழைக்கப்பட்டது.
பிறகு திப்பு சுல்தானின் ஆளுகையின் கீழ் இத்தீவு நிர்வாகம் செய்யப்பட்டது. பிறகு ஆங்கிலேயர்கள் வசம் சென்றது. 1956ல் சென்னை மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டு இந்திய ஒன்றிய அரசின் கீழ் கொண்டு வரப்பட்டது.
மொழியியல் மற்றும் கலாச்சார ரீதியாக கேரளாவுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ள இப்பகுதி மக்கள் மேல்மட்ட கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக கேரளாவையே சார்ந்துள்ளனர்.
2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இங்குள்ள மக்கள் தொகை 64,473 ஆகும்.
96.58% முஸ்லிம்களும், 02.77% இந்துக்களும் 00.49% கிருத்துவர்களும் இங்கு வாழ்கின்றனர்.
முதன்மை மொழி மலையாளம் ஆகும். ஆங்கிலம், இந்தி மற்றும் சில வட்டார மொழிகளும் பேச்சு வழக்கில் உண்டு. சுற்றுலா, மீன் பிடித்தல் ஆகியவையே முதன்மையான வருமான வழிமுறைகள்.
இதன் இந்திய ஒன்றிய அதிகாரியாக இருந்த தினேஷ் சர்மா இறந்த பின் மோடியின் குஜராத் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த பிரபுல் படேல் என்ற சங்கி 2020 டிசம்பரில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதற்குப்பிறகு தங்களது சுய திட்டங்களை அரங்கேற்றும் முனைப்பில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டு வருவது மிகுந்த கவலைக்குரிய விஷயம்.
இலட்சத்தீவு மக்களின் தனித்துவமான கலாச்சாரத்தையும், அபிலாஷைகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பல முடிவுகளை அவர் எடுத்து வருகிறார். அண்மையில் காஷ்மீரில் செய்ததைப் போல, இலட்சத்தீவு மக்களின் ஜனநாயக உரிமைகளையும் சாதாரண வாழ்க்கையையும் தகர்த்தெறியும் நடவடிக்கைகளில் பாசிச பாஜக ஈடுபட்டு வருகிறது. காஷ்மீர் ஒரு முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமாக உள்ளது போல், லட்சத்தீவு 97% முஸ்லீம் மக்கள் வாழும் பகுதி என்பதே சங்பரிவாருக்கு எரிச்சலை கிளப்ப போதுமானதாகும்.
ஜனநாயக வழிமுறைகளின் மூலம் நடைமுறைக்கு வந்த தீவு மாவட்ட பஞ்சாயத்தின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அனைத்தும் இந்திய ஒன்றிய அரசின் நிர்வாகியின் சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவை இப்போது இந்திய ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் உள்ளன.
இதில் அரசாங்க சேவையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தீவுவாசிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். 190 ஊழியர்கள் எந்த காரணமும் இல்லாமல் சுற்றுலா துறையிலிருந்து நீக்கப்பட்டனர்.
70,000 க்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட தீவின் வாழ்வாதாரத்தின் முக்கிய ஆதாரமாக அரசு சேவை மற்றும் மீன்பிடித்தல் உள்ளது. கடலோர காவல்படை சட்டத்தின் போர்வையில் அனைத்து மீனவர்களின் கொட்டகைகளும் இடிக்கப்பட்டன.
இலட்சத்தீவில், சமீப காலம் வரை ஒரு நபர் கூட கோவிட் பாதிப்பிற்கு ஆளாகவில்லை. இந்திய ஒன்றிய நிர்வாகியால் கோவிட் நெறிமுறைகள் தகர்த்தெறியப்பட்டப் பிறகு இப்போது லட்சத்தீவில் கோவிட் பாசிடிவ் 60% க்கும் அதிகமாக உள்ளது. இது போதுமான சிறப்பு மருத்துவ வசதிகள் இல்லாத ஒரு தீவில் மிகவும் கடுமையான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இங்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளதால் மதுக்கடைகள் இல்லை. ஆனால் இப்போது சுற்றுலா என்ற பெயரில் மதுபான பார்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. இது உள்ளூர் மக்களின் கலாச்சார உணர்வுகளுக்கு ஒரு முழுமையான அவமானமாக மாறி வருகிறது.
மாட்டிறைச்சி தடைசெய்யப்பட்டு மக்களின் உணவுப்பழக்க வழக்கங்களில் தலையிடப்படுகிறது.
பள்ளி மாணாக்கர்களின் மதிய உணவிலிருந்து இறைச்சியை தடை செய்துள்ளனர். பல அங்கன்வாடிகள் மூடப்பட்டுள்ளது.
CAA / NRC க்கு எதிரான அனைத்து சுவரொட்டிகளும் லட்சத்தீவிலிருந்து அகற்றப்பட்டன.
இலட்சத்தீவு குற்றவாளிகள் இல்லாத ஒரு முன்மாதிரி பகுதி. அனைத்து சிறைகளும் காவல் நிலையங்களும் காலியாக உள்ளன. மக்களை அச்சுறுத்தும் நோக்கோடு இப்போது குண்டர் சட்டம் உடனடியாக இலட்சத்தீவில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பஞ்சாயத்து தேர்தலில் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பவர்கள் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலட்சத்தீவுடன் மிக நீண்ட தொடர்பு கொண்டிருந்த கேரளாவில் உள்ள பேபூர் துறைமுகத்துடனான தொடர்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி தீவு மீனவர்கள் சரக்கு கையாளுதல் உட்பட அனைத்து போக்குவரத்து தொடர்புகளுக்கும் கர்நாடகாவில் உள்ள மங்களூர் துறைமுகத்தையே பயன்படுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகிறது..
நிர்வாக அமைப்புகளிலிருந்து தீவுவாசிகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளனர்.
இந்திய ஒன்றிய அரசின் புதிய நிர்வாகி பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு ஒரு குறுகிய காலத்தில் இலட்சத்தீவில் திணிக்கப்பட்டுள்ள சில நடவடிக்கைகள் இவை.
இன பாகுபாட்டிற்கான சங்பரிவாரின் நீண்ட கால திட்டத்தின் ஆரம்பமே இது என்ற ஐயமே எழுகிறது.
அம்பானி, அதானி போன்ற ஏகபோகங்களின் பெரிய சுற்றுலாத் திட்டங்களுக்கு வழி வகுக்க உள்ளூர் மக்களை விரட்டும் முயற்சியாகவும் இது காணப்படுகிறது. காஷ்மீரிலும் ஆளும் வர்க்கத்திற்கு இதே போன்ற குறிக்கோள் இருந்தது.
இலட்சத்தீவு மக்களின் அடையாளம் மற்றும் கலாச்சாரம் கேள்விக்குறியாகி வரும் இவ்வேளையில் மக்களை அவர்களின் வாழ்வாதாரத்திற்காக, சுய உரிமை பாதுகாப்பிற்காக ஒன்றிணைக்கும் பொறுப்பு நமக்குள்ளது.
மாநிலங்களின் உரிமைகளில் தலையிட்டு அவர்களின் மொழி, கல்வி, கலாச்சாரம், உணவு, உணர்வுகளை வேட்டையாடி வரும் இந்திய ஒன்றிய அரசின் ஒற்றை, மைய அதிகார போக்கை தடுத்து நிறுத்தும் வகையில் பாசிச பாஜக அல்லாத அனைத்து மாநில மக்கள் பிரதிநிதிகளும், அரசியல் தலைமையும், பொது மக்களும் இந்த பிரச்சினையில் தீவிரமாகவும் நேர்மையாகவும் கவனம் செலுத்த வேண்டும்.
~ கே.எஸ். அப்துல் ரஹ்மான்
#standwithlakshwadeep
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக