செவ்வாய், 25 மே, 2021

செல்வப்பெருந்தகை! புரட்சி பாரதம், புதிய தமிழகம், வி.சி.க, பகுஜன் சமாஜ் கட்சிகளில் பயணித்து காங்கிரசில் வந்துசேர்ந்தார்

சர்ச்சைக்குரிய மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதா? போராட்டம் நடத்திய  எம்.எல்.ஏ. விஜயதாரணி கைது! | Congress MLA Vijayadharani and other 50 arrest  when they protest ...
தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி

பிபிசி :தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவராக கு.செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது?
போட்டியில் 3 பேர்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர், துணைத் தலைவர் ஆகியபதவிகளுக்கான தேர்வு குறித்து சத்தியமூர்த்தி பவனில் 2 முறை கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டங்களில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 13 பேர் புதிய முகங்களாக இருந்ததால், `மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ ஆக தேர்வான சீனியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்’ என்ற குரல்கள் எழுந்தன.

இதற்கிடையே, கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிரின்ஸ், விஜயதரணி, முனிரத்தினம் ஆகியோர் இடையே தலைவர் பதவிக்கு போட்டி நிலவியது.



அதேநேரம், கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ்குமார், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராஜ்குமார் ஆகியோரும் தலைவர் பதவிக்கு முயற்சித்து வந்தனர். இந்த விவகாரத்தில் குளச்சல் எம்.எல்.ஏ பிரின்ஸ் மற்றும் விளவங்கோடு விஜயதரணி இடையே நேரடியாக மோதல் வெடித்தது.

கடந்த 12 ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவுவை வாழ்த்திப் பேசுவது தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

செல்வப்பெருந்தகை அறிவிப்பு வெளிவரும் முன்பாக  பேசிய விஜயதரணி, `சட்டப்பேரவை கட்சித் தலைவர் பதவியை கேட்டு வருகிறேன்.

சீனியர் உறுப்பினர் என்பதால் கட்சி பரிசீலிக்கும் என நினைக்கிறேன். தேர்தலில் போட்டியிட கட்சி சார்பாக பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. எனவே, ஒரு பெண் என்ற அடிப்படையில் தலைமை எனது பெயரை கவனத்தில் கொள்ள வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ` அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலோடு தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக கு.செல்வபெருந்தகையும் துணைத் தலைவராக எஸ்.ராஜேஷ்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்’ என கூறப்பட்டிருந்தது.

“இந்த அறிவிப்பின் மூலம் மோதல்கள் ஏற்படவே வாய்ப்பு அதிகம்” என்கின்றனர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சிலர்.

இது தொடர்பாக அவர்கள்  சில தகவல்களைப் பட்டியலிட்டனர். “தென்மாவட்டங்களில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகியவவை காங்கிரஸ் கட்சிக்குப் பலம் சேர்க்கும் வகையில் உள்ளன.

கன்னியாகுமரியில் உள்ள கிள்ளியூர் தொகுதியில் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் வெற்றி பெற்றார். மேற்கண்ட 3 மாவட்டங்களில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு 6 எம்.எல்.ஏக்கள் கிடைத்துள்ளனர். இதைத் தவிர்த்து மற்ற தொகுதிகளில் தி.மு.கவின் கூட்டணி பலத்தில்தான் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்” என்கின்றனர்.
யாருக்கு யார் ஆதரவு?

“இவர்களில் ராஜேஷ்குமார், பாரம்பரியமாகவே காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரைத் தலைவராக்க வேண்டும் என எம்.பி.க்களான மாணிக்கம் தாகூர், டாக்டர் ஜெயக்குமார், விஜய் வசந்த் ஆகியோர் முயன்றனர்.

பெரும்பாலான எம்.எல்.ஏக்களின் ஆதரவும் ராஜேஷ் பக்கம் இருந்தது. இந்த நிலையில், சோனியா காந்தியிடம் பேசிய ப.சிதம்பரம், ` தலித் வாக்கு வங்கியை நம் பக்கம் திருப்ப வேண்டும் என்றால் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவரை தலைவராக்க வேண்டும்’ எனக் கூறி செல்வப்பெருந்தகையின் பெயரை முன்மொழிந்தார். ஆனால், அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு தலித் வாக்கு வங்கி என்ற ஒன்றெல்லாம் கிடையாது.

இங்கு தலித் சமுதாயத்தைச் சேர்ந்த 3 பேர் தலைவர்களாக இருந்தாலும், அவர்கள் தலித் மக்களிடம் சென்று காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டதில்லை. இந்தக் கட்சியில் 2010ஆம் ஆண்டில்தான் செல்வப்பெருந்தகை இணைந்தார். அவர் இரண்டு முறை காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு தோற்றுவிட்டார்.

இவரது நியமனத்தை காங்கிரஸ் நிர்வாகிகளில் பலரும் ரசிக்கவில்லை. புரட்சி பாரதம், புதிய தமிழகம், வி.சி.க, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றில் பதவி வகித்து விட்டு காங்கிரஸ் பக்கம் செல்வப்பெருந்தகை வந்தார். இவருக்கு திருமகன் ஈ.வே.ரா, ரூபி மனோகரன் என இரண்டு எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது” என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக  பேசிய சத்தியமூர்த்தி பவன் நிர்வாகிகள் சிலர், “ சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக சத்தியமூர்த்தி பவனில் நடந்த கூட்டத்தில் சீனியர் காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவும் புதுச்சேரி வைத்திலிங்கமும் பங்கேற்றுள்ளனர்.

அந்தக் கூட்டத்தில் தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி ஆகியோர் பங்கேற்கவில்லை. அதில், பங்கேற்ற 18 எம்.எல்.ஏக்களுக்கும் துண்டுச் சீட்டு ஒன்று வழங்கப்பட்டது. அதில், எம்.எல்.ஏவின் பெயர், பரிந்துரைக்க விரும்பும் சட்டப்பேரவை கட்சித் தலைவர் என இரண்டே வரிகள் இடம்பெற்றிருந்தன.

அதில், யார் தலைவராக வர வேண்டும் என எழுதி கையொப்பமிட்டுக் கொடுத்துள்ளனர். இதில் யாருக்குப் பெரும்பான்மை உள்ளது என்பது குறித்தெல்லாம் சோனியா காந்திக்கு அளித்த அறிக்கையில் கார்கே குறிப்பிடவில்லை.

எம்.எல்.ஏக்களின் பதிலை மட்டுமே அறிக்கையாகக் கொடுத்தார். ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் எடுத்த முயற்சிகளின் விளைவாக தலைவர் பதவிக்கு செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்” என்கின்றனர்.

`உங்களின் நியமனம் காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளதே?’ என ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ கு.செல்வப்பெருந்தகையிடம்  விசாரித்த போது“இந்த விவகாரம் தொடர்பாக பிறகு பேசுகிறேன்,” என்றார்.

இதையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத் தலைவர் ஆ.கோபண்ணாவிடம் பேசினோம். “தென்மாவட்ட மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் தேர்வு இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், அதற்கு மாறாக காங்கிரஸ் தலைமை இப்படியொரு முடிவை எடுத்துள்ளது. அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை,” என்றார்.

கருத்துகள் இல்லை: