vikatan - சிந்து ஆர் : தமிழில் பதவி ஏற்றுக்கொண்ட தேவிகுளம் எம்.எல்.ஏ ராஜா!
தேவிகுளம் சட்டமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தோழர் வழக்கறிஞர் ஏ.ராஜா அவர்கள் தனது தாய்மொழியான தமிழில் உறுதிமொழி கூறி பதவி ஏற்றார்.
கேரள மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்துமுடிந்தது. மே 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 140 சட்டசபை தொகுதிகளில் 99 தொகுதிகளை சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி கைப்பற்றியது. மீதமுள்ள 41 தொகுதிகளை காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி வென்றது. தொடர்ந்து இரண்டாவது முறையாக பினராயி விஜயன் முதல்வர் ஆனார். கடந்த 20-ம் தேதி திருவனந்தபுரம் சென்றல் ஸ்டேடியத்தில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு எளிமையான முறையில் முதல்வராக பினராயி விஜயன் பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் சேர்த்து மொத்தம் 21 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில் கேரள மாநிலத்தின் 15-வது சட்டப்பேரவையின் எம்.எல்.ஏ-க்கள் சத்திய பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.
திருவனந்தபுரம் சட்டசபை கூட்ட கட்டடத்தில் சமூக இடைவெளி பின்பற்றி இருக்கைகள் போடப்பட்டிருந்தன. இன்று காலை 9 மணிக்கு எம்.எல்.ஏ-க்கள் உறுதிமொழி கூறி பதவி ஏற்றுக்கொண்டனர். மொத்தமுள்ள 140 எம்.எல்.ஏ-க்களில் 136-பேர் பதவி ஏற்றுக்கொண்டனர். இதில் 53 எம்.எல்.ஏ-க்கள் சபைக்கு புதியவர்கள். இரண்டு எம்.எல்.ஏ-க்களைத் தவிர மற்ற அனைத்து எம்.எல்.ஏ-க்களும் மலையாளத்திலும், சிலர் ஆங்கிலத்திலும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். கர்நாடக மாநில எல்லையான மஞ்சேஸ்வரம் தொகுதி எம்.எல்.ஏ அஷ்ரப் கன்னட மொழியில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
தமிழக எல்லையோர பகுதியான இடுக்கி மாவட்டம் தேவிக்குளம் எம்.எல்.ஏ வழக்கறிஞர் ராஜா, தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜா இன்று எம்.எல்.ஏ-வாக பதவி ஏற்பது குறித்து தனது முகநூல் பக்கத்தில் தமிழிலும், மலையாளத்திலும் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அவர் தமிழில் உறுதிமொழியேற்றது சட்டசபையில் இருந்த எம்.எல்.ஏ-க்களை ஆச்சர்யப்படுத்தியது. தேவிகுளம் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார் ராஜா.
தமிழர்கள் அதிகமாக வசிக்க தொகுதி தேவிகுளம். அங்கு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களாக அதிக அளவு தமிழ்பேசும் குடும்பங்கள் உள்ளன. இதைத் தொடர்ந்தே எம்.எல்.ஏ ராஜா தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட எம்.எல்.ஏ ராஜாவுக்கு தமிழக எம்.பி சு.வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "கேரள சட்டமன்ற தேர்தலில் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தோழர் வழக்கறிஞர் ஏ.ராஜா அவர்கள் தனது தாய்மொழியான தமிழில் உறுதிமொழி கூறி பதவி ஏற்றார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக