minnambalm :கோவையில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்களுக்கு, போலீசார் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மாவட்டங்களுக்குள்ளேயும், வெளியேயும் செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் காலை 10 மணிக்கு மேல் காவல் நிலைய எல்லையை தாண்டி செல்லவும் இ-பதிவு கட்டாயம் என உத்தரவிடப்பட்டது. அதன்படி, இன்று பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கொரோனா தினசரி பாதிப்பில், சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை மாவட்டம் உள்ளது. தினசரி பாதிப்பு மூவாயிரத்தைத் தாண்டியுள்ளது. அதனால், கொரோனா தடுப்பு பணிகளில் சுகாதாரத் துறையினர்,காவல் துறையினர் என அனைவரும் தீவிரமாய் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை காவல் ஆணையராக நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்ட தீபக் தமோர், “கொரோனா நோய் பரவல் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. மக்கள் பொது இடங்களில் கூட்டமாக கூடாமல் கண்காணிக்க வேண்டியிருக்கிறது. பொதுமக்கள் அவசியம் இன்றி எந்தவித தேவையும் இல்லாமல் பொது இடங்களில் சுற்றி வருவதை தவிர்க்க வேண்டும். போலீசார் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி, இன்று(மே 18) கோவை மேட்டுப்பாளையம் சாலை சங்கனூர் சந்திப்பு பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அத்தியாவசியத் தேவை இன்றி வாகனங்களில் சுற்றித்திரிந்த மக்களை மாநகராட்சி நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம் மூலம் பரிசோதனை செய்து அனுப்பி வைத்தனர்.
இது வைரஸ் தொற்றை கண்டறியும் புது முயற்சி என்றும் இதனால் பொதுமக்கள் பலரும் வெளியில் வராமல் ஊரடங்கை கடைபிடிப்பர் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து இம்முயற்சிக்கு பாராட்டிள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் ஊரடங்கை மீறுபவர்களுக்கு திருக்குறள் எழுதும் தண்டனையும், கொரோனா பரிசோதனையும் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
-வினிதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக