மாலைமலர் :திருப்பூர்: இந்தியாவில் ஜனவரி 16-ந்தேதி முதன்முதலாக தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலாவதாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
பிப்ரவரி 2-ந்தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
மார்ச் 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
ஏப்ரல் 1-ந்தேதி முதல் 18 வயதில் இருந்து 44 வயது வரை தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது.
ஆனால் மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தடுப்பூசியை வாங்கி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கூறியது.
எனவே மாநில அரசுகளே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு போட உள்ளது. அதன்படி தமிழ்நாட்டிலும் தடுப்பூசி போடப்பட இருக்கிறது.
தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியதுடன், தடுப்பூசியை வாங்க சர்வதேச அளவிலான டெண்டருக்கான அறிவிப்பையும் வெளியிட்டார். 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக சுகாதாரத்துறை சார்பில் ரூ.46 கோடி செலுத்தி, அதில் 9 லட்சம் தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டன.
இதையடுத்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி போடப்படும் என்றும், அத்திட்டத்தை திருப்பூரில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அதன்படி இன்று திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் திட்ட தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்தார்.
கொரோனா தடுப்பூசி
இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், கலெக்டர் விஜயகார்த்திக்கேயன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தில் ஆட்டோ டிரைவர்கள், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்படுகிறது.
திருப்பூரில் ஆய்வை முடித்து கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிற்பகலில் கோவை விருந்தினர் மாளிகைக்கு வருகிறார்.
அங்கு கலெக்டர் நாகராஜன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை அலுவலர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
ஆலோசனை கூட்டம் முடிந்ததும் மாலை 5 மணிக்கு விருந்தினர் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு 5.15 மணிக்கு கொடிசியா வளாகத்துக்கு செல்லும் முதல்-அமைச்சர் அங்கு அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கிறார்.
தொடர்ந்து 6 மணிக்கு சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு கல்லூரிக்கு செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டு மருத்துவ அதிகாரிகள் மற்றும் டாக்டர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
கோவை மாவட்டத்தில் ஆய்வு பணிகளை முடித்து கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 6.45 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் மதுரைக்கு செல்கிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கோவை மாநகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரை கண்ணன் தலைமையில் 1000-த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக