Subashini Thf : நூல் திறனாய்வு: இலங்கையில் சிங்களவர்-இந்திய இன தொடர்ச்சியும் தென்னிந்திய பண்பாட்டு நீட்சியும்
நூலாசிரியர்: பக்தவத்சல பாரதி
முனைவர்.க.சுபாஷிணி
பகுதி 4
2018 ஆம் ஆண்டு மற்றும் 2019ஆம் ஆண்டு இரண்டு முறை நான் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது அங்குள்ள பௌத்த விகாரை ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அந்தக் கோயிலில் உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் நமக்கு நன்கு பரிச்சயமான விநாயகர், லட்சுமி, சிவன் ஆகிய தெய்வங்களின் சிற்பங்கள் சிங்கள முகத்துடன் சிறிய சிறிய கோயில்களில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டபோது ஆச்சரியம் ஏற்பட்டது. பிறகு நண்பர்களுடன் பேசி கேட்டு அறிந்து கொண்ட போது பௌத்த ஆலயங்களில் இத்தகைய தமிழர் வழிபாட்டில் இடம்பெறுகின்ற தெய்வ வடிவங்களும் அவற்றுக்கான சன்னிதிகளும் இருக்கின்றன என்று அறிந்து கொண்டேன். சமயம் சார்ந்த ஒற்றுமைகள் என்பது ஒருபுறமிருக்க, மொழியில், பண்பாட்டில் உள்ள ஏராளமான ஒற்றுமைகள் பற்றியும், முறையான ஆய்வுகள் இலங்கையின் இரண்டு பெரும் இனங்களான சிங்களவர்கள்-தமிழர்கள் ஆகிய இரண்டு இனங்களுக்கும் இடையிலான தொடர்புகளைப் புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கும்.
சிங்களவர் உறவுமுறை பெயர்களில் ஏராளமான தமிழ்ச் சொற்கள் இருப்பதைக் காண்கின்றோம். சில உதாரணங்களை முந்தைய பதிவில் அளித்திருந்தேன்.
பொதுவாக இந்தியாவில் தென்னிந்தியர்கள், வட இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்வது போல, சிங்களவர் சமூகச் சூழலில் `கண்டி சிங்களவர்` அதாவது மலைநாட்டு சிங்களவர் என்றும் தீவைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதிகளில் வாழ்கின்றவர்கள் `கரையோரச் சிங்களவர்` என்றும் நில அடிப்படையில் அடையாளப்படுத்தப் படுகின்றார்கள். இவர்களுள் மலைநாட்டு சிங்களவர் எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் சமூகத்தில் உயர்ந்தவர்களாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
கண்டி சமூகத்தில் இரண்டு வகை திருமண முறை இருப்பதைக் காண்கிறோம்.
1. பின்னா - இவ்வகை திருமணத்தில் கணவன் தன் மனைவி வீட்டிற்கு சென்று வாழ்வது வழக்கம். இந்த வாழும் முறை அதாவது சிங்கள மொழியில் 'வாசகம' என்பது மருமக்கட்தாய முறைப்படி மனைவி வீடாக அமைகிறது.
2. இதற்கு மாறாக திருமணத்திற்குப்பின் மனைவி தன் கணவர் வீட்டிற்கு சென்று வாழும் முறை 'தீக' என அழைக்கப்படுகிறது.
இந்த இரண்டு வகை திருமண பிரிவுகளும் கண்டி சமூகத்தில் அதாவது மலைநாட்டு சிங்களவர் சமூகத்தில் உள்ளன. இந்த இரண்டு பிரிவினரும் திராவிட உறவு முறையைப் பின்பற்றுகின்றனர். ஆக, திராவிட சமூக அமைப்பில் இன்றும் தாய்வழிச் சமூக முறையும் தந்தை வழி சமூக முறையும் தொடர்வதை நாம் காண்பது போல, மலைநாட்டு சிங்களவர் சமூகத்திலும் இது இயல்பாக இருப்பதைக் காண முடிகிறது.
இலங்கையில் பேசப்படுகின்ற சிங்கள மொழியின் ஒரு உறவு மொழியாக 'மஹல்' மொழி அமைகிறது. இது இலட்சத் தீவுகளிலும், மாலத்தீவுகளிலும் பேசப்படும் மொழியாகும் என்பதையும் நூலாசிரியர் சுட்டிக்காட்டுகின்றார்.
சிங்கள மொழி ஒரு இலக்கிய மொழியாக உருவானது பொ.ஆ. 10ஆம் நூற்றாண்டு காலவாக்கில் தான். சிங்கள எழுத்தின் வரிவடிவமானது தென்னிந்திய சாய்வுக் கோடு வகையில் விளங்குகிறது என்று கூறும் அறிஞர் கோலின் மாசிகாவின் (Colin Masica, 1991) கருத்தும் இங்கு கவனிக்கத்தக்கது.
இலங்கையின் மேற்குப் பகுதியில் வாழ்ந்துவந்த பூர்வகுடிகளான நாகர்கள் இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே வாழ்ந்தவர்கள் என்பதும், இந்தப் பூர்வீக நாக மன்னர்களின் சின்னங்களாக சிங்கமும் பனை மரமும் இருந்தன என்பதும், பிற்காலத்தில் இலங்கையில் இந்தப் பூர்வகுடிகள் பௌத்த மதத்தைத் தழுவிய பின்னரும் கூட சின்னங்களைக் கைவிடாமல் இருப்பதும் முக்கியத்துவம் பெறும் ஒன்று. இந்தச் சிங்கமும் பனைமரமும் தமிழக சேர மன்னர்களுக்கு உரிய சின்னங்கள் என்பதையும் நாம் ஒப்புநோக்க வேண்டியுள்ளது.
பண்பாட்டு அடிப்படையில் திராவிட பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டிருக்கும் சிங்களவர்களின் மொழி இந்தோ-ஆரிய மொழியாக இருக்கின்றது என்பதை பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டி இருப்பதைப் பார்த்தோம். இந்தக் கலப்பு எப்படி சாத்தியமானது என்பதை ஆராய வேண்டியது அவசியமாகிறது.
சிங்களவர்களின் மிக ஆரம்பகால இடப்பெயர்வு என்பது தென்னிந்திய பகுதிகளின் ஊடாக நடந்தேறியது என்றும், அவர்கள் மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய பகுதிகளோடு மிக நீண்டகாலமாக இனத் தொடர்பு கொண்டிருந்தாலும் தென்னிந்தியப் பகுதிகளுக்கு வந்து, மிக நீண்ட காலங்கள் வாழ்ந்து, தென்னிந்தியப் பெண்களைத் திருமணம் செய்து, தமிழ் பவுத்தத்தைத் தழுவி, தமிழ் தேசத்தோடு உறவாடி, தென்னிந்திய கிராம தெய்வங்களை வணங்கி வழிபட்டு தங்கள் வாழ்வியல் கூறுகளில் ஒன்றாக இணைத்துக் கொண்டு மெல்ல மெல்ல நகர்ந்து இலங்கை சென்று அடைந்தார்கள் என்று கருத வாய்ப்புள்ளது.
பூர்வ வட இந்தியர்கள், அதாவது இந்தோ-ஆரிய மொழி பேசுபவர்கள் உறவுத் திருமணங்களைத் தங்கள் பண்பாட்டில் கொண்டிருப்பதில்லை. அவர்களது திருமண முறை உயர்குல முறை, அதாவது hypergamy என்ற அமைப்பில் அடங்கும். இது திராவிட திருமண முறையான உறவுத் திருமணங்கள் என்ற கருத்தாக்கத்தில் இருந்து முற்றிலும் மாறுபடும் ஒரு முறையாக அமைகிறது என்பதை இங்குக் காண வேண்டும்.
உறவுத் திருமணங்கள் தென்னிந்திய சமூகத்தில் தொன்று தொட்டு நடைமுறையில் இருப்பதற்குக் காரணம் வேளாண்மை. நிலமும் நீரும் சமூக வாழ்வியல் அமைப்பில் முக்கிய இடம் பிடிப்பதால் இவை திருமணத்தால் குறைந்து விடக்கூடாது என்பதற்காகத் திராவிட பண்பாட்டில் ஏற்படுத்திக்கொண்ட முறையே உறவுத் திருமணங்களாகும், என்கிறார் நூலாசிரியர்.
பண்பாட்டு ஒற்றுமை எனக் காணும்போது சிங்களவர்கள் கண்ணகி வழிபாடு செய்வதும், விநாயகர் வழிபாடு செய்வதும், விஷ்ணு, முருகன், வள்ளி ஆகிய தெய்வங்களின் வழிபாடுகளைச் செய்வதும், கேரளத்தின் கதகளி நடன வகையை ஏற்று உள்வாங்கிக் கொண்டதும், உணவுப் பழக்கவழக்கங்களில் கேரள பழக்கவழக்கங்கள் மிகுந்து இருப்பதும் முக்கியமான கூறுகளாகும்.
ஆக, வட இந்தியாவிலிருந்து வந்த விஜயன் வட இந்திய பின்னணியோடு சிங்கள அரசை தோற்றுவித்து சிங்களவர்கள் உருவானார்கள் என்ற புராணக்கதையை முழுமையான வரலாறு என்று கொள்ளாமல், மகாவம்சம் சூளவம்சம் மற்றும் ஏனைய புராணங்களில் உள்ள ஏராளமான கதைகளை வாய்மொழி கதைகளின் ஆவணப்படுத்தல் என்ற அடிப்படையில் அவற்றை ஆராய வேண்டியது அவசியமாகிறது.
வாய்மொழிக் கதைகள் இன வரலாற்று மீட்டுருவாக்கத்திற்கு மிக முக்கியமானவை என்பதை உலகளாவிய மானுடவியல் ஆய்வுகள் சுட்டிக் காட்டுவதை நூலாசிரியர் வலியுறுத்துகின்றார்.
ஆசிரியர் இந்த அத்தியாயத்தின் இறுதியில் கூறும் ஒரு கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது. "பன்மை இனத்துவம் கொண்ட நாடுகளில் இன வரலாறு வரலாற்றின் அனைத்து பரிமாணங்களிலும் ஊடுருவியிருக்கும். அதனை முற்சாய்வு ஏதுமின்றி ஆராயும்போது மட்டுமே புதிய உண்மைகள் வெளிப்படும். சிங்கள இனத்துவத்தையும் இந்த வகையில் ஆராய வேண்டும்."
தொடரும்..
-சுபா.
Venkatramani Venkat : அவர்களின் மொழி எழுத்தாக்கம் ,
தென் தமிழகத்தின்
தமிழ் கிரந்த மொழி வட்ட வடிவம் சார்ந்தது.
ஆனால் அவை தமிழை சார்ந்து அதனுடைய திருந்திய வடிவமாக உள்ளது.
கிரந்தத்தில் ஒத்தக்கசரம் என்பது உண்டு அவை ப்ப, ம்ம, என்பது அவை ஒன்றன் கீழ் ஒன்றாக அமைந்தது ஒரே எழுத்தாக சொல்லப்படுவது.
ஆனால் சிங்கள எழுத்து தமிழ் போல் இரண்டு தனி எழுத்துக்களை கொண்டது.
உதாரணமாக அம்மா என்ற சொல்லை கொண்டால்
தமிழில் உள்ளதை போல் தான் எழுத்து அமைப்பு உள்ளது.
சிங்களத்தில் අම්මා என்பது மூன்று தனி எழுத்துக்கள்.
தமிழ் கிரந்தத்தில்
அம்மா என்பது இரண்டு எழுத்து வார்த்தை
അമ്മ
கன்னடத்தில் அம்மா என்பது இரண்டு எழுத்து வார்த்தை.
ಅಮ್ಮಾ.
பல சொற்கள் தமிழின் திரிபும் மற்றும் சமஸ்கிருத சொற்களாகும் உள்ளன.
வங்காளத்தின் வார்த்தைகளை யும் கொண்டு உள்ளன.
நாம் சொல்லும் சந்தி என்பது அவர்களின் ஹந்தி හන්දිය.
நம்முடைய பிற்கால சொற்களாக கொண்ட கடை என்பது அங்கும் கடை தான்.
இடது என்பதை சமஸ்கிருதத்தில் வாம என்பார்கள் அது இன்றளவிலும் வங்காளத்தில் புழக்கத்தில் உள்ளது, அதே வார்த்தைகள் சிங்களத்திலும்
வா மட වමට என்று தான் சொல்கின்றார்கள்.
படித்த அறிஞரின் சிங்கள உரையில் பல சமஸ்கிருத வார்த்தைகள் உள்ளன,ஆனால் பாமரனின் பேச்சு வழக்கில் பல தமிழ் வார்த்தைகள் உள்ளன.
Fenton Alphonse : புத்த சமையத்தை பரப்புவதக்காக பாளி மொழி இலங்கையிலும், மாலைதீவிலும் பயன்படுத்தப்பட்டது. நாள் அடைவில் தமிழ் + பாளி கலப்பால் சிங்கள மொழி உருவானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக