Subashini Thf :நூல் திறனாய்வு: இலங்கையில் சிங்களவர்-இந்திய இன தொடர்ச்சியும் தென்னிந்திய பண்பாட்டு நீட்சியும்
நூலாசிரியர்: பக்தவத்சல பாரதி முனைவர்.க.சுபாஷிணி. பகுதி 3
மானுடவியல் ஆய்வுகளில் இனங்களின் உறவுமுறை கட்டமைப்பு என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறும் ஒரு கூறு. நூலின் நான்காவது அத்தியாயம் சிங்கள சமூகத்தில் உறவுமுறை பற்றி மிக விரிவாக ஆராய்கிறது.
மகாவம்சம், சூளவம்சம் மற்றும் ஏனைய பிற புராணக் கதைகள் கூறுகின்ற வரலாற்றுச் செய்திகள் இலங்கை சிங்களவர்களுக்கு வட இந்திய தொடர்பு இருப்பதை வலியுறுத்துகின்றன.
ஆனால் மரபணு ரீதியான ஆய்வுகளை நோக்கும்போது அவை தென்னிந்திய மக்களுடன், அதிலும் குறிப்பாக திராவிட இன மக்களுடன் மரபணு நெருக்கம் இருப்பதைப் பலப்படுத்துகின்றன.
இவர்கள் இனத்தால் சிங்களவர்; மொழியால் இந்தோ- -ஆரிய மொழி பேசுபவர்கள்; மதத்தால் பவுத்தர்கள்; பண்பாட்டால் தென்னிந்தியர்கள் என்று ஆய்வாளர் Cordrington (1926) கூறுவதை ஆசிரியர் குறிப்பிடுகிறார். இக்கூற்றை உறுதி செய்வதாகவே அமைகிறது சிங்கள இன மக்களிடையே உள்ள உறவுமுறை வழக்கங்கள்.
"சமூகத்தில் மனிதர்கள் மன உறவாலும் இரத்த உறவாலும் பிணைக்கப்பட்டுள்ளனர். நாம் அன்றாட வழக்கில் பயன்படுத்தப்படும் உறவுமுறை சொற்கள் உறவின் தன்மைகளையும் பண்புகளையும் வரையறுத்துள்ளன; திருமண விதிகளைக் கூறுகின்றன; திருமண விருப்பங்களைத் தெரிவிக்கின்றன; மணமுறையில் கையாள வேண்டிய தவிர்ப்புகளையும் விலக்குகளையும் சுட்டிக்காட்டுகின்றன; உறவினர்களிடையே பேணவேண்டிய நடத்தை முறைகளை ஒழுங்கு செய்கின்றன" என ஒரு இனத்தின் உறவுமுறைகளின் முக்கியத்துவம் பற்றி நூலாசிரியர் தெளிவுபடுத்துகின்றார்.
இலங்கை சிங்கள மக்களின் உறவு முறை குறித்த விரிவான ஆய்வினை நிகழ்த்தியவர் துருக்கி நாட்டு மானிடவியல் அறிஞர் நூர் யால்மண். இவரது ஆய்வு சிங்கள மக்களின் உறவு முறையானது (1962) திராவிட முறை சார்ந்தது என்பதை வெளிப்படுத்துகின்றது. இந்த ஆய்வினை விரிவாக்கி அவர் எழுதிய நூல் Under the Bo tree: Studies in caste kinship and marriage in the interior Ceylon, 1971 என்ற பெயரில் வெளிவந்தது. இதேபோல எட்மன்ட் லீச் ஆராய்ந்து எழுதி வெளியிட்ட A village in Ceylon: A study of land tenure and kinship (1961), என்ற நூலும், இலங்கையின் மூத்த இனவியல் அறிஞர் எம் டி ராகவன் எழுதி வெளியிட்ட The Karava of Ceylon: Society and culture(1961) ஆகிய நூல்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் சில நூல்களையும் நூலாசிரியர் சிங்கள தமிழ் உறவு முறைகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையை சுட்டிக்காட்டும் ஆதாரங்களை இந்த அத்தியாயத்தில் சான்றாகக் காட்டுகின்றார்.
இன்று உலகளாவிய நிலையில் ஆறுவகை உறவுமுறை அமைப்புகள் ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகின்றன அவை பின்வருமாறு:
1. எஸ்கிமோ முறை
2. ஓமஹா முறை
3. குறோ முறை
4.. இராகுவர் முறை (திராவிடர்கள்)
5. ஹவாய் முறை
6. சூடானிய முறை
இதில் இராகுவர் முறை என்பது ஆஸ்திரேலிய முது குடிகள், இலங்கை வேடர்கள், இலங்கை சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள், தென்னிந்திய சமூகங்கள், வட இந்தியாவில் வாழும் பூர்வ திராவிடர்கள், தென்னிந்தியாவும் வட இந்தியாவும் சந்திக்கும் எல்லையோரத்தில் வாழும் மராட்டிய சமூகத்தார், நடு இந்திய சமூகத்தார் ஆகியோரிடம் பரவலாகக் காணப்படும் உறவு முறையாகும்.
திராவிட உறவு முறையின் தனிச்சிறப்பு என்பது என்னவெனில் தாய்வழி உறவினர்களும் தந்தை வழி உறவினர்களும் சமச்சீர் உரிமையோடு அணுகும் முறையாகும். உதாரணமாகப் பாட்டி என்றோ தாத்தா என்றோ அழைத்தால் அவை இரண்டும் தாய் தந்தை ஆகிய இரண்டு வழி பாட்டன்களையும், பாட்டிகளையும் குறிக்கின்றன. அதேபோல பேரன் பேத்தி ஆகிய சொற்களும், இன்னும் பல சொற்களும் அமைகின்றன.
திராவிட உறவு முறைக்கு உள்ள மற்றொரு சிறப்பு ஒவ்வொரு நபருக்குமான உறவு கூட்டத்தை பெரும் பிரிவாகப் பிரித்துக் காண்பது. உறவினர்களில் ஒரு சாதியினர் அண்ணன்-தம்பி முறையில் வருபவர்கள்; மற்றொரு பிரிவினர் மாமன்-மச்சான் முறையில் வருபவர்கள். இந்த உறவு முறை பிரிவு திராவிட உறவு முறையில் அடித்தளத்தில் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றது. தமிழ் உறவுமுறைச் சொற்கள் அனைத்தும் இந்த முறை கோட்பாட்டை முன்வைத்து உறவினர்களை இரண்டு பெரிய வகைகளாகப் பிரித்து விடுகின்றன என்கிறார் நூலாசிரியர்.
உறவினர் சுற்றத்தை திருமண உறவு அல்லது ரத்த உறவு என்ற இரண்டு பெரிய வகையில் பிரிக்கும் முறை திராவிட உறவு முறையில் மட்டுமே காணக் கூடியதாக அமைகிறது. இதற்கு நேர்மாறாக ஹிந்தி உறவுமுறையை ஒப்பிட்டுப் பார்த்தால் அங்குத் தாய்வழி தந்தைவழி உறவினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி உறவுச் சொல் இருப்பதைக் காண முடியும். இது திராவிட உறவு முறையிலிருந்து அடிப்படை வேறுபாடாகும் என்பதையும் நூலாசிரியர் விவரிக்கின்றார்.
திராவிட உறவு முறையின் அடிப்படை அமைப்பாக்கத்தில் பழங்காலத்திலிருந்து திராவிட மக்கள் உறவுமுறை வழக்கில் கொண்டுள்ள உறவுத் திருமண முறை, அதாவது cross cousin marriages ஒரு முக்கியக் கூறாக அமைகின்றது. திராவிட உறவு முறையை ஆராய்ந்த தாமஸ் டிரவுட்மன் ( 1981) இது நேற்று இன்று தோன்றிய ஒரு வழக்கு அல்ல, மாறாக வரலாற்றின் ஊடாக கட்டமைந்த உருவாக்கம் ( historical construct) என்று விரிவாக ஆய்வு மூலம் நிரூபித்துக் காட்டியதையும் நூல் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
இலங்கையில் இன வேறுபாடு - தமிழர் சிங்களவர் என்ற பாகுபாடு பௌத்தர் சைவர் என்றில்லாமல் திராவிட உறவுமுறை என்பது இலங்கைத் தீவு முழுவதும் ஒரே முறையிலேயே அமைகிறது. இன்றும் புழக்கத்தில் உள்ள சிங்கள உறவுமுறைச் சொற்கள் சிலவற்றை ஆசிரியர் உதாரணத்திற்குப் பட்டியலிட்டிருக்கிறார். அவற்றில் சிலவற்றை இங்கே புரிதலுக்காக வழங்குகின்றேன்.
சிங்களம்: அப்பா, அப்புச்சி - தமிழ்: அப்பா
சிங்களம்: அம்மா, மவு - தமிழ்: அம்மா
சிங்களம்: மாமா, மாமாண்டி - தமிழ்: தாய்மாமன், அத்தையின் கணவர், மாமனார்.
சிங்களம்: ஐயா - தமிழ்: அண்ணன்சிங்களம்: அக்கா - தமிழ்: அக்கா
சிங்களம்: லொகு அக்கா - தமிழ்: மூத்த அக்கா
சிங்களம்: சகோதரி - தமிழ்: உடன் பிறந்தவள்
சிங்களம்: சகோதரா - தமிழ்: உடன் பிறந்தவன்
சிங்களம்: மினிஹ, புருசய்யா - தமிழ்: கணவன்
சிங்களம்: பவுலா, கனு - தமிழ்: மனைவி
மதுரை மாவட்டத்தில் சில இடங்களில் தாத்தாவைக் குறிக்கச் சொல்லப்படும் சிய்யா/சிய்யான் என்ற சொல்லின் திரிபாக `சியா` என தாத்தாவை அழைக்கும் வழக்கமும் சிங்களவர்களிடம் காணப்படுகிறது. சிங்கள உறவு முறையில் நேர் திராவிடச் சொற்கள் அதிகமாகவும், அதோடு இடைக்கால சிங்களச் சொற்களும் கலந்திருப்பது தெரிகிறது.
சிங்கள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் என்ற வகையிலும், சிங்கள மொழிக்கும் திராவிட மொழிகளுக்கும் என்ற அடிப்படையிலும் ஒப்பாய்வுகள் செய்யப்படுவதும், அது பற்றிய ஆய்வு முடிவுகள் வெளிவந்து அவை பெரும் வகையில் கலந்துரையாடப்படுவதும் அவசியம். ஏனெனில் தமிழர், சிங்களவர் என்ற இரண்டு வெவ்வேறு இனங்கள் என காண்பதை விட ஒரே இனத்தின் ஒரு பிரிவாக, அதாவது பண்டைய திராவிட தொல்குடி மரபின் ஒரு பிரிவே சிங்களவர்கள் என்ற முடிவுக்கே நம்மை மானுடவியல் ஆய்வுகள் இட்டுச் செல்கின்றன!
தொடரும்..
-சுபா
யாழ்ப்பாணத்தின் சாலையில் பனை மரங்களுடன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக