செவ்வாய், 27 அக்டோபர், 2020

முருங்கை.. உத்தரப்பிரதேசம்.. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு முருங்கை மரம்!’ – ஏன் முருங்கையை ஊக்குவிக்கிறது உ.பி அரசு?

ஜெயகுமார் த - Vikatan / Saravanakumar.P : முருங்கையிலுள்ள சத்துகளின் அவசியத்தைப் புரிந்து கொண்ட உத்தரப்பிரதேச அரசு கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் ஒரு முருங்கை மரத்தை வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது ுருங்கையிலிருந்து கிடைக்கக்கூடிய இலை, காய், பூ, விதை அனைத்துமே மருத்துவ பண்புகளைக் கொண்டவை. இந்தியாவிலிருந்து பல நாடுகளுக்கு முருங்கை சம்பந்தமான பொருள்கள் ஏற்றுமதியாகின்றன. முருங்கையிலுள்ள சத்துகளின் அவசியத்தைப் புரிந்து கொண்ட உத்தரப் பிரதேச மாநில அரசு கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் ஒரு முருங்கை மரத்தை வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
முருங்கை

கோவிட் 19 பெருந்தொற்று தொடங்கியதை அடுத்து, கடந்த ஜூலை மாதத்தில் முருங்கை பரவலாக்கத்திற்கான இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1.7 கோடி முருங்கை நாற்றுகளை உற்பத்தி செய்து அவற்றை மாநிலம் முழுவதும் நடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யாநாத்தும் அம்மாநில வனத்துறையினரிடம், “ஒவ்வொரு கிராமத்திலும் முருங்கையின் அவசியத்தை சொல்லி, அதிலிருக்கும் சத்துகள் குறித்து விளக்கி இது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளளார். குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைப்பாட்டினைச் சரிசெய்வதற்காக அவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளார்.

முருங்கைக்கீரை

இதன்படி வனத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் இந்த முருங்கை மர வளர்ப்பு விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

“சஹ்ஜன் (Sahjan) என்று சொல்லப்படும் முருங்கையில் பல்வேறு சத்துகள் அடங்கியுள்ளன. முருங்கையின் இலை, காய், பூ அனைத்துமே இன்றைக்கு விலை அதிகம் கொடுத்து வாங்கும் காய்கறிகளுக்கு மாற்றான எளிமையான உணவுப் பொருள். வீட்டில் முருங்கை மரம் ஒன்றிருந்தால் காய்கறிகளுக்கு எங்கும் அலைய வேண்டியதில்லை. முருங்கையானது ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இது கல்லீரல் சம்பந்தமான நோய்களை கட்டுப்படுத்தும் என்றும் புற்றுநோய்க்கு எதிர்ப்புத் தன்மையைக் கொண்டது என்றும் கருதப்படுகிறது. இயல்பாகவே முருங்கைக்கீரை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

முருங்கைத் தோட்டம்
முருங்கைத் தோட்டம்

இன்றைய தேதியில் குறைந்த உணவுப் பொருளிலிருந்து அதிக சத்துகளை பெறுவதைத்தான் சூப்பர் ஃபுட் என்கின்றனர். அந்த வகையில் குறைந்த உணவில் அதிக சத்துகள் பெற முருங்கை துணை நிற்கும். இன்றைக்கு மருத்துவத்துக்கு செலவிடும் தொகையை முருங்கை பெருவாரியாக தடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இன்னொன்று பொருளாதார ரீதியாகவும் காய்கறிகளுக்குச் செலவிடும் தொகை குறையும். அதனாலே அனைவரும் முருங்கையை உணவில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்” என்று உத்தரப்பிரதேச வனத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

முருங்கையைத் தமிழகத்திலும் பரவலாகப் பயன்படுத்தி வருகின்றனர். சாகுபடியும் ஓரளவுக்கு நடந்து வருகிறது. தமிழக அரசும் இதிலுள்ள சத்துகளின் அடிப்படையில் முருங்கையைப் பயிர் செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்பதே உணவு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

கருத்துகள் இல்லை: