புதன், 28 அக்டோபர், 2020

தெலங்கானா வடமாநில தொழிலாளிகள் கொலை வழக்கு.. குற்றவாளிக்கு மரண தண்டனை .. நீதிமன்றம்

nakkeeran: தெலங்கானா மாநிலம், வாரங்கலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட மொத்தம் 9 பேரின் உடல்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.  

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள கொர்ரகுண்டா பகுதியில் செயல்பட்டுவரும் சணல் தொழிற்சாலையில் 20க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். சதீஷ் குமார் என்பவருக்கு சொந்தமான இந்தத் தொழிற்சாலை ஊரடங்கு காரணமாக மூடப்பட்டதால், தொழிலாளர்கள் அனைவரும் சதிஷ்குமாரின் வீடு ஒன்றில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், கடந்த மே மாதம் தொழிலாளர்களைப் பார்க்கச் சென்ற சதீஷ்குமார், அங்கிருந்த சில தொழிலாளர்களைக் காணாததால் அருகே உள்ள பகுதிகளில் தேடிப் பார்த்துள்ளார். அப்போது அங்கு உள்ள விவசாயக் கிணறு ஒன்றில் நான்கு பேரின் உடல்கள் மிதப்பதை அவர் கண்டுள்ளார். இதனையடுத்து இந்தத் தகவலறிந்த வாராங்கல் போலீஸார், வருவாய்த் துறையினர், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 பேரின் உடல்களை மீட்டனர்.

 இதனிடையே அதே கிணற்றிலிருந்து அடுத்தநாள் காலை மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்தச் சம்பவம்  ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் கொலையாளிகள் நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். இறந்த ஒன்பது பேரில் மூன்று வயதுக் குழந்தை உட்பட ஐந்து பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் மேற்கு வங்கத்திலிருந்து அங்கு வந்து பணியாற்றியதும் கண்டறியப்பட்டது. மேற்குவங்கத்திலிருந்து வந்து தொழிற்சாலையில் பணியாற்றிய மசூத், அவரது மனைவி நிஷா, கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்த அவரது மகள் புஸ்ரா, அவரது மூன்று வயது மகன் ஆகியோர் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் இந்த மரணம் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதை அடுத்து, இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை மேற்கொண்டனர். இந்நிலையில், கிணற்றில் சடலம் கண்டெடுக்கப்பட்டதன் முதல் நாள், மசூத்தின் மகன் பிறந்தநாள் விழா அவர்களது வீட்டில் கொண்டாடப்பட்டுள்ளது.

 அந்த நிகழ்ச்சிக்கு வந்த சஞ்சய் குமார் ஷா என்ற பீகாரைச் சேர்ந்தவரைப் பிடித்து விசாரணை நடத்திய தனிப்படை போலீஸார், சஞ்சய் குமார் ஷா உள்ளிட்ட 4 பேர்தான் இந்தக் கொலைகளை நடத்தியுள்ளதைக் கண்டறிந்தனர். மசூத்தின் மகளான உயிரிழந்த 22 வயது புஸ்ரா ஏற்கனவே திருமணமாகி, கணவரைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், அவர் சஞ்சய் குமார் ஷாவுடன் நெருக்கமாக இருந்துள்ளார். ஆனால், இந்த தொடர்பு திடீரென புஸ்ராவால் துண்டிக்கப்பட்ட நிலையில், மசூத் குடும்பத்தினரைப் பழிவாங்க சஞ்சய் குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்தக் கொலைகளைச் செய்துள்ளது கண்டறியப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த வாரங்கல் நீதிமன்றம், குற்றவாளி சஞ்சய் குமாருக்கு மரணதண்டனை விதித்துள்ளது.

கருத்துகள் இல்லை: